மகளிர் மட்டும்!

 

ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து நாடு விடுதலை பெற்றாலும், அவர்கள் ஏற்படுத்திய பழக்கவழக்கங்கள், அவர்களது கலாச்சாரத்தின் தாக்கம் ஆகியன இருந்து கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றில் ஒன்று தான் லேடீஸ் கிளப்.

'லேடீஸ் கிளப்புக்குச் செல்லும் பெண்கள் தீவிர பெண்ணியம் பேசிக் கொண்டு யாரையும் மதிக்காமல் இருப்பார்கள்; வீட்டைப் பராமரிக்க மாட்டார்கள்' என்ற அடையாளம் தான் நிலவுகிறது. ஆனால் லேடீஸ் கிளப் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் வேறு.

விதவிதமான உடைகள், வித்தியாசமான வேனிட்டி பேக்ஸ் என, பிரஞ்சு நாகரிகத்தை வேகமாக பின்பற்றி வந்த இங்கிலாந்து பெண்கள், லேடிஸ் கிளப் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்தியாவில் இங்கிலாந்து ஆதிக்கம் அதிகமான போது, பல ஆங்கிலேய அதிகாரிகளும், பிரபுக்களும் தங்கள் குடும்பத்துடன் இந்தியாவில் குடியேறத் துவங்கினர். இங்கிலாந்தில் இருந்து வந்த பெண்கள், இங்கும் லேடீஸ் ரெக்ரீயேஷன் கிளப் அமைக்க வேண்டும் என, நினைத்தனர். அந்த நீண்ட நாளைய ஆசைக்கு, வடிவம் கொடுத்தார் திருமதி மேடலி. சென்னை கார்ப்பரேஷனுக்கு இன்ஜினியராக நியமிக்கப்பட்டு பணி நிமித்தமாக இங்கு குடியேறிய அதிகாரியின் மனைவி தான் மேடலி.

1911ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேடலி, அப்போதைய மெட்ராசின் புகழ்பெற்ற வக்கீல் சர் வி.பாஷ்யம் ஐயங்காரின் மகளும் திரு.சி.ஆர்.திருவேங்கடாச்சாரியாரின் மனைவியுமான திருமதி சீதாம்மாள் திருவேங்கடாச்சாரியார் ஆகியோர் இணைந்து எல்.ஆர்.சி., (Ladies Recreation Club) ஆரம்பித்தனர். ஆங்கிலேயப் பெண்களுக்கும் இந்தியப் பெண்களுக்கும் இடையே சுமூகமான சமூக நட்புறவை ஏற்படுத்தும் பொருட்டு லேடீஸ் கிளப் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து தரப்பட்ட பெண்களும் இந்த லேடீஸ் கிளப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மைலாப்பூரில், ஜஸ்டிஸ் டேவிட் எம்.தேவதாசிற்கு சொந்தமான சில்வான் லாட்ஜில் முதலில் லேடீஸ் கிளப் இயங்கத் துவங்கியது. பின் நாட்களில் ஜஸ்டிஸ் டேவிட்டின் மனைவி மயில்சாமி செல்லம்மாள் இந்த கிளப்பின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார். ஆரம்ப காலத்தில் லேடிஸ் கிளப் கூட்டம் வெள்ளிக் கிழமை தோறும் நடந்தது. ஆண்டுச் சந்தாவாக ரூ. 5 நிர்ணயிக்கப்பட்டது. கிளப் வழங்கிய முதல் பொழுதுபோக்கு அம்சம் பாட்மின்டன் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளாகும். அதன் பிறகு மெல்ல மெல்ல டென்னிஸ் விளையாட்டும் வந்தது. 9 கஜ சேலை அணிந்த பெண்கள், ஸ்கர்ட் அணிந்த ஐரோப்பிய பெண்களுடன் அந்நாளிலேயே டென்னிஸ் விளையாடினார்கள்.
லேடீஸ் கிளப்பின் விறுவிறுப்பான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பல பெண்கள் அதில் உறுப்பினராகினர். அதனை தொடர்ந்து கிளப் வாரம் இரு முறை கூடத் துவங்கியது. பிரதி செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கிளப்பில் கூட்டம் நடைபெற்றது. 1913ம் ஆண்டு கிளப், ஆலிவர் ரோடு ( தற்போது முசிறி சுப்ரமணிய ஐயர் ரோடு) பகுதியில் இருக்கும் ஒரு பங்களாவுக்கு மாற்றப்பட்டது. புதிய கட்டடத்துக்கு கிளப் மாற்றப்பட்ட பிறகு விசிட் கொடுத்த முதல் பிரபலம் லேடி ஹார்டிங் ( ஹார்டிங் பிரபுவின் மனைவி). லேடி ஹார்டிங் டில்லி சென்றதும் கிளப்பின் செயல்பாடுகளை பாராட்டி ரூ.300க்கான செக் அனுப்பி வைத்தார்.
பொழுதுபோக்கு மட்டுமே லேடீஸ் கிளப்பின் செயல்பாடக இருக்கவில்லை, உலகப் போரின் போது கிளப்பின் உறுப்பினர்கள் போரில் அடிபட்டவர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டி, பேண்டேஜ் ஆகியனவற்றை வாங்கி ரெட் கிராஸ் ( செஞ்சிலுவைச் சங்கத்துக்கு) அனுப்பி வைத்தனர்.
பின்னர் கிளப் , வில்லிங்க்டன் பிரபுவின் மனைவி மேரி வில்லிங்டன் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மேரி விலிங்டன் கிளப்பின் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். லேடி விலிங்டன் பொறுப்பேற்றவுடன் லேடீஸ் கிளப்புக்கு சொந்தமாக ஒரு கட்டடம் தேவை என்பதை உணர்ந்தார். அதற்கு செயல்வடிவம் கொடுக்க ரூ.2.50 லட்சம் தேவைப்பட்டது. இதற்காக அண்ணாமலை செட்டியார் ரூ. 2 லட்சம் வழங்கினார். திருவிதாங்கூர் மகாராஜா ரூ25,000 பணமும், பொப்பிலி மகாராஜா ரூ.10,000 பணமும் வழங்கினர்.
விலிங்க்டன் மாளிகையில் லேடீஸ் கிளப் செயல்படத்துவங்கியதும் வாரம் 3 முறை கூட்டம் நடைபெற்றது. மற்ற நாட்களில் அந்த கட்டடத்தில் சமூக விழாக்கள் நடத்தி வாடகை பெறப்பட்டது. கிளப்பின் அனைத்து நடவடிக்கைகளிலும், லேடி விலிங்க்டன் ஆர்வத்துடன் கலந்து கொண்டார். லேடி விலிங்க்டன் கிளப்பில் பல புதுமையான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். குழந்தைகள், பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
லேடி விலிங்க்டன்னைப் போல், கிளப் மேம்பாட்டுக்காக உதவிய மேலும் இரு மங்கைகள், திருமதி சீதா திருவேங்கடாச்சாரியர் மற்றும் மிஸ் ஜெரார்டு. இவர்கள் இருவரும் தங்கள் பங்குக்கு பல்வேறு புதுமைகளைப் புகுத்தி கிளப்பை மேம்படுத்தினர், மிஸ் ஜெரார்டு லேடீஸ் கிளப்பில், மாதம் ஒரு முறை நடத்திய குழந்தைகள் தின விழா பிரசித்தி பெற்றது. 1945ம் ஆண்டு மிஸ் ஜெரார்டு இங்கிலாந்துக்கு திரும்பினார். அதன் பிறகும் 1961ம் ஆண்டு வரை லேடி விலிங்கடன் தொடர்ந்து கிளப்புடன் தொடர்பில் இருந்தார். தற்போது இந்த கிளப்புக்கு 100 வயதாகிவிட்டது.
இன்றும் லேடீஸ் ரெக்ரீயேஷன் கிளப் இயங்குகிறது. ஆனால் அதன் செயல்பாடு முன்பு போல் முழு வீச்சில் இல்லை. ஏழைக் குழந்தைகள் கல்வி கற்க ஸ்காலர்ஷிப் வழங்குவது போல் ஒரு சில நடவடிக்கைகள் மட்டும் மேற்கொள்ளப்படுகின்றன.
பெண்கள் வெளியே சுதந்திரமாக நடமாடக் கூட முடியாத நாட்களில் லேடீஸ் ரெக்ரியேஷன் கிளப் விறுவிறுப்பாக இயங்கியது. ஆனால் பெண்கள் பல்வேறு சாதனைகள் புரியத்துவங்கியுள்ள இந்த காலத்தில் இந்த கிளப்பில் பெருமையுடன் சொல்லும் அளவுக்கு அதிக அளவில் உறுப்பினர்கள் இல்லை. நூற்றாண்டு விழா கண்டுள்ள லேடீஸ் ரெக்ரீயேஷன் கிளப் மீண்டும் புத்துயிர் பெறுமேயானால் அது சிறப்பானதாக அமையும்.


 
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)