மறக்க முடியாத தீர்மானங்கள்; மனம் திறக்கிறார் முன்னாள் மேயர்

 

""நாங்கள் மேயராக இருந்தபோது, ஒரு ஆண்டு தான் மேயர் பதவி காலம்,'' என்று பேச ஆரம்பிக்கிறார் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் ச.கணேசன். இவர், 1970 நவம்பர் முதல், 1971 நவம்பர் வரை ஓராண்டு சென்னை மேயராக இருந்தார்.
அந்த காலகட்டத்தில் முற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், சிறுபான்மையினர் என்ற இனச் சுற்று அடிப்படையில், மேயர் தேர்வு நடந்தபோது, மேயராக தேர்வு செய்யப்பட்டவர்.
பி அன் சி மில் என்று அழைக்கப்படும் பக்கிங்காம் கர்நாட்டிக் மில்லில் விற்பனையாளராக வேலை செய்து கொண்டிருந்தபோதே, சென்னை மாநகராட்சி கவுன்சிலராக, தி. நகர் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1959, 64, 68ம் ஆண்டு தேர்தல்களில், தொடர்ந்து மூன்று முறை கவுன்சிலராக இருந்தார்.
"வேலை பார்த்து கொண்டே கவுன்சிலராக இருப்பதால், கவுன்சிலர் வேலையை கணேசனால் சரியாக செய்ய முடியவில்லை,' என, அப்போதைய முதல்வர் அண்ணாதுரையிடம், தி.மு.க.,வினர் புகார் செய்தனர். ஆனால், அதை அண்ணாதுரை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும், கவுன்சிலர் வேலையை எப்படி பார்ப்பது என, கணேசனுக்கு, அண்ணாதுரை அறிவுரை கூறினாராம்.
82 வயதாகும் கணேசன், மேயராக பதவி வகித்த காலம் பற்றிய தனது அனுபவங்களை சொல்லும் போது, மலரும் நினைவுகளில் முழுமையாக மூழ்கி விடுகிறார், ""நான் மேயராக இருந்த போது, மாம்பலத்தில் சுரங்க பாதையை திறந்தோம். தெருக்களுக்கு, சிமென்ட் பலகையில் பெயர்களை எழுதி வைத்தோம். இந்திய மேயர்கள் மாநாடு மும்பையில் நடந்தது. அதற்கு, நான் தான் தலைமை வகித்தேன். நாட்டில் உள்ள மாநகராட்சிகளில், ஒரே மாதிரியான வரி விதிக்க அனுமதிக்க வேண்டும் என, மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் கொடுத்தோம்,'' என்றார்.


மேலும், ""எனது கவுன்சிலில், பல தீர்மானங்கள் நிறைவேற்றி இருந்தாலும், பங்களாதேஷ் தனி நாடாக உருவாக மத்திய அரசு உதவ முன்வர வேண்டும் என்றும், வீராணம் ஏரிக்கு காவிரி நீர் கொண்டு வர, காவிரி நதி நீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் நிறைவேற்றிய தீர்மானங்கள் மறக்க முடியாதவை.'' அன்றிலிருந்து தொடர்ந்து வரும் பிரச்னை இதுதான்.


இதற்கு இடையில் ரஷ்யாவும் சென்று வந்துள்ளார், ""ரஷ்யாவில், வால்கா நதிக்கரையில் உள்ள, வோல்கா கிராட் மாநகராட்சியுடன் சென்னை மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தது. அதன்படி, இரு மாநகராட்சிகளின் செயல்பாடுகளை பகிர்ந்து கொள்ள, என் தலைமையிலான குழு ரஷ்யா சென்று வந்தது.''


தன் பெருமையை பற்றி மட்டும் பேசாமல், ""சென்னை மேயராக இருந்த சத்தியமூர்த்தி சென்னைக்கு பூண்டியிலிருந்து குடிநீர் கொண்டு வந்தார். வேலு நாராயணன், சென்னை தெருக்களை அகலப்படுத்த, நடைபாதைகளில் இருந்த கோவில்களை அகற்றி தைரியமாக நடவடிக்கை எடுத்தார்,'' என பெருந்தன்மையாக குறிபிட்டார்.


ஓராண்டிலேயே பல சாதனைகளை புரிந்த இவர், ""எங்களது மேயர் காலம் மிகக் குறுகியது. இன்றோ, ஐந்தாண்டுகள். திட்டங்களை நிறைவேற்ற போதிய காலம், இன்றைய மேயர்களுக்கு உள்ளது; இதனால் அதிகம் சாதிக்கலாம்; சாதித்தும் வருகின்றனர்,'' என்று ஒரு நல்ல சான்றையும் கொடுத்தார்.


இப்போதுள்ள சென்னை நிர்வாகத்தினருக்கு, அவர் வழங்கும் ஆலோசனை, ""அப்போதைய சென்னையில், ஒரு தெருவில், 30 வீடுகள் இருந்தது என்றால், இன்று, 300 வீடுகளாகிவிட்டது. அனைத்து தேவையும் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கு உரிய தீர்வு, புதிய குடியிருப்புகளையும், அரசு அலுவலகங்களையும், தொழிற்சாலைகளையும் சென்னைக்கு வெளியில் தான் இனி துவங்க வேண்டும். இதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, சென்னை நகரின் நெரிசலை குறைக்க முடியும்.''
அனுபவஸ்தரின் பேச்சில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன.


 
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)