துரை
- பட காட்சிகள் -
தினமலர் விமர்சனம்
வழக்கம்போல லாஜிக் இல்லா மேஜிக் கதைதான் இந்த துரை படத்தின் கதையும்.
அப்பாவி சமையல் இளைஞரான விவேக் நடத்தும் கேட்டரிங் சர்வீசில் உதவியாளராக வேலை பார்க்கிறார் அர்ஜூன். தான் யார், எந்த ஊர், தனது பின்னணி என்ன? என்று எந்த விவரமும் தெரியாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் அர்ஜூனை வில்லன்கள் கொலை செய்ய துரத்துகிறார்கள். அவர்களுக்கு முன்பிருந்தே கதாநாயகி கீரத்தும் காதலுக்காக துரத்துகிறார். ஒரு கட்டத்தில் அர்ஜூன் யார்? என்ற விவரம் தெரியவருகிறது.
அதன் தொடர்ச்சியாக விரியும் பிளாஷ்பேக்தான் படத்தின் மீதி கதை.
இதுதான் பிளாஷ் பேக் : அர்ஜூன் எதிர்க்கட்சித் தலைவர் என்.கே.விஸ்வநாதனின் செல்லப்பிள்ளை. அடுத்து சி.எம். பதவிக்கு நிற்கப்போகும் வேட்பாளர். அழகான அகுடும்பத்தை உடைய விவசாயி... என்று எக்கச்சக்கமாக வியாபித்திருக்கிறார். அப்படிப்பட்ட அர்ஜூனை ஒன்றுமில்லாமல் ஆக்க எதிர்க்கட்சி தலைவர் என்.கே.விஸ்வநாதனை கொன்று, பழியை அர்ஜூன் மீது போடுகிறது சதிகார கும்பல். கூடவே அர்ஜூனின் அழகான மனைவி கஜாலாவையும், அவரது குழந்தையையும் கொன்று குவித்து அர்ஜூனை அடித்துப் போட்டு, போலீசிலும் பிடித்துக் கொடுக்க்கிறது.
அந்த சதிகார தூண்டுதலால் போலீசும் அர்ஜூனை என்கவுண்டரில் போட்டுத் தள்ள அழைத்துப் போகும் வேளையில், அங்கிருந்து தப்பிப் போகும் அர்ஜூன், அதில் ஏற்பட்ட கலவரத்தில் முந்தைய நினைவுகள் இல்லாமல் விவேக் அண்ட் கோ கம்பெனியில் சமையல் வேலைக்கு சேருகிறார். உண்மை தெரிந்ததும் வில்லன்களை கண்டுபிடித்து பழிக்குப் பழி வாங்குவதுதான் க்ளைமாக்ஸ்.
ஆக்ஷன் கிங் அர்ஜூன் படத்தில் அரசியல்வாதி என்றாலும் ஆக்ஷனில் குறை வைக்கவில்லை. மூன்று நாயகிகளுடனும் டூயட் பாடுவதெல்லாம் கொஞ்சம் ஓவர். கஜாலா, கீரத், சுமா என்று மூன்று நாயகிகள் இருந்தாலும் கஜாலாதான் கடைசி வரை மனதில் நிற்கிறார். முன்னணி பத்திரிகையின் நிருபராக வரும் கீரத், உண்மையை உலகிற்கு உரக்க சொல்லாமல் அர்ஜூனுடன் டூயட் பாடுவதையே முழுநேர தொழிலாக செய்வது எரிச்சல். விவேக், வெண்ணிற ஆடை மூர்த்தி ரேஞ்சுக்கு டவுள் மீனிங் காமெடி கண்றாவி பண்ணுகிறார்.
இமானின் இசை, லெட்சுமிபதியின் ஒளிப்பதிவு இரண்டும் ஏ.வெங்கடேஷின் இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.
துரை : நிறை குறை கலந்தது
கல்கி விமர்சனம்
தன்னைப் பற்றிய விவரங்களே தெரியாத ஒருவனுக்கு, தான் யாரென்பது தெரியவரும்போது நிகழ்ந்து முடியும் பிரளயம்தான் கதை. கதையின் நாயகன் அர்ஜூனுக்குத்தான் இந்த பிரச்னை.
ஓர் அரசியல் கட்சியின் நேர்மையான தொண்டனாக படம் முழுக்க பரிமளிக்கிறார் அர்ஜூன். தனக்கு கிடைக்கும் கட்சித் தலைவர் பதவியை வேண்டாம் என்பதும், அது தவறானவர்கள் கையில் கிடைத்து விடக்கூடாது எனப் போராடும் போதும் அர்ஜூன் எடுக்கும் அவதாரம், ஆரவாரம், காமெடியிலும் கலகலக்க வைக்கிறார். மேக்கப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். குளோஸ்-அப் காட்சிகளில் தொங்கிப்போன முகமாகத் தெரிவது பெரிய குறை.
சமையல் மாஸ்டராக விவேக். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களுக்கு தடபுடல் விருந்து வைத்திருக்கிறார். கல்யாண வீட்டுச் சமையல் பொருட்களில் கமிஷன் அடித்துக் கொண்டு மாட்டும்போது, திரை முழுக்க கலகல திருவிழா. ஹீரோயின் சுமா புதுமுகம். சராசரி கோடம்பாக்கத்து வரவு கஜாலா குடும்பத்து குத்துவிளக்கு. தமிழ் சினிமாவுக்கு அமைதியான வில்லனாக அமித் தாவனே அட்டகாசமான வரவு. தந்தையைக் கொல்வது முதல் அர்ஜூனை கொல்வது வரை நிழலில் கெட்டவனாக வெளிச்சத்தில் நல்லவனாக கன்னிங் கலவை.
படத்தில் எல்லாவற்றையும் மிஞ்சி விடுவது க்ளைமாக்ஸ் பைட்தான். பின்னணி இசையில் மட்டும் கவனம் ஈர்க்கிறார் இமான். கதையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் திரைக்கதை மெகா மைனஸ். எப்போதும் போல இதுவும் சகலவிதமான மசாலாக்களோடு வந்திருக்கும் இயக்குனர் ஏ.வெங்கடேஷின் கூட்டுப்பொறியல்தான். காரம் சற்றே அதிகள்.
துரை - ஈரம் கசியும் பாறை.
குமுதம் விமர்சனம்
அரசியல்ங்கறது பணம் பண்ற தொழில்
இல்லே... அது பொதுச்சேவை அடடே.. அர்ஜுன் அரசியல்
பேசறாருப்பா. நல்ல அரசியல்வாதியை எப்படி
கண்டுபிடிக்கணும்? அவரே டிப்ஸும் தர்றாரு. ஆக்ஷன் ப்ளஸ்
அரசியல் என படம் முழுக்க இப்படியும் நிறைய துரைத்தனம்.
அர்ஜுனுக்கு வயதாதிவிட்டதை முகம் காட்டிக் கொடுக்கிறது.
உடம்பு அதை மறைத்துவிடுகிறது. உடம்பு கடந்த கால
சம்பவங்கள் ஏதும் ஞாபகமில்லாமல் முன் பாதியில்
அப்பாவியாக வருகிறார். கதாநாயகி கீரத் மேலே விழுந்து
புரண்டாலும் அவருக்குத் துளிகூட ரொமான்ஸ் வரவே வராதாம்.
நிறைய இடங்களில் நாடகத்தனமாய் காட்சிகள் சறுக்குகின்றன.
ஓட்டல் சர்வராக வரும் அர்ஜுனுக்கு அதிபயங்கரமான ஃப்ளாஷ்பேக்
வைத்திருக்கிறோம் என ஆரம்பக் காட்சிகளில் நம்ப வைத்து
நாமும் அதை எதிர்பார்த்து ம்ஹும் ஏமாந்ததுதான் மிச்சம்.
அக்மார்க் அரசியல் யூனிஃபார்மில் அர்ஜுன் கனகச்சிதம்.
கட்சியின் கொ.ப.செ.வாக நம்பும்படி செய்திருக்கிறார்.
கிராமத்து மனைவியாக கஜாலா வெளிநாட்டுப் பெண் திடீரென
சேலை கட்டிக் கொண்ட மாதிரி செயற்கையான தோற்றம். அரசியல்
தலைவருக்கு ஏற்ற தெளிவான மொழி உசசரிப்பும், சாந்தமான
முகபாவமாக பாத்திரத்துக்கு மெருகூட்டியிருக்கிறார்
கே.விஸ்வநாத்.
படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுவது விவேக் மட்டுமே.
அம்பியாக வந்து அய்யராத்து பாஷையில் வெளுத்து
வாங்குகிறார். டபுள் மீனிங் டயலாக்கை விடவேமாட்டார்
போல். தன் குடும்பத்தை கொலை செய்தவனைக் கண்டுபிடிக்க
அர்ஜுன் ரொம்பவே பிரயத்தனம் பண்ணுகிறார். வழக்கமான
பாணியில் கதாநாயகியின் துணையோடு நாலைந்து வார்த்தைகளில்
வசனம் ஒப்புவித்தலோடு கீரத்தின் பணி இனிதே முடிகிறது.
யார் வில்லன் என்பதை கடைசி வரை சொல்லாமல் சஸ்பென்ஸ்
அதிகரிக்கச் செய்திருப்பதில் டைரக்டர் மிளிர்கிறார்.
சண்டை பிரியர்களுக்கு படத்தில் நிறையவே தீனி கிடைக்கும்.
இளையராஜாவின் ராஜா ராஜாதிராஜ் பாøலை ரீமிக்ஸ்
செய்கிறேன் பேர்வழி என்று கொத்து பரோட்டாவாக்கி இம்சை
பண்ணியிருக்கிறார்கள். என்ன இமான் இப்படி
பண்ணிட்டீங்களே? நல்ல அரசியலை செய்யச் சொல்லி அது
சாக்கடை இல்லைன்னு ஆக்ஷன்லாம் செஞ்சும் நீரோட்டமாய் கதை
இல்லாததால் நீச்சல் தெரியாமல் கரையில் நிற்கிறான் துரை.
|