காதலில் விழுந்தேன்
- பட காட்சிகள் -
தினமலர் விமர்சனம்
நாக்க முக்க... நாக்க முக்க... பாடலின் மூலம் வெளிவருவதற்கு பல மாதங்களுக்கு முன்பே எதிர்பார்ப்பை தூண்டி விட்டுள்ள படம்தான் காதலில் விழுந்தேன். இளம் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படத்தில் அப்பாடல் ஒன்றிற்கு இரண்டு முறை இடம் பிடித்திருப்பது ஹைலைட்.
தன் தவறால் விபத்துக்குள்ளாகும் இளைஞனை மருத்துவமனையில் சேர்த்து வசதியான வைத்தியம் பார்த்து காப்பாற்றுகிறர் நாயகி சுனைனா. இந்த காலத்திலும் இவ்வளவு இரக்க சுபாபம் உள்ள நாயகி மீது அந்த இளைஞனுக்கு... அதாங்க கதாநாயகன் நகுலனுக்கு காதல் வருகிறது. தன்னை மாதிரியே சின்ன வயதிலேயே அம்மாவை இழந்து வாடும் ஹீரோ மீது ஹீரோயினுக்கும் காதல். அந்த காதல் வளர்ந்து, பூத்து, காய்த்து, கனியாகும் தருவாயில் விதி விளையாடுகிறது. ஆனால் வழக்கம்போல அல்ல. மிகவும் வித்தியாசமாக விளையாடுகிறது. அதனால் விபரீதமான முடிவுக்கு உள்ளாகும் ஹீரோ, ஹீரோயினை அழைத்துக் கொண்டோ... இழுத்துக் கொண்டோ.. அல்ல, தோளிலே தூக்கிக் கொண்டு ஓடுகிறார்... ஓடுகிறார்... ஓடிக் கொண்டே இருக்கிறார். அவர்களை வில்லனாக விஸ்வரூபம் எடுக்கும் நாயகின் சித்தப்பாவும், காவல்துறையும் துரத்துகிறது. முடிவில் வென்றது யார்? நாயகன் நாயகியா? வில்லன் சித்தப்பாவா? காவல்துறையா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.
காதலுக்காகவும், காதலிக்காகவும் கசிந்து உருகும் கதாநாயகனாக நகுலன். நடிகை தேவயானியின் சகோதரரான இவர் மனதில் பதியும் படியாக நடித்திருக்கிறார். சற்றே சைனீஸ் முக அமைப்பு கொண்ட நகுலனுக்கு இந்த படத்தில் நடிக்க நிறையவே வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்புகளை அச்சு பிசகாமல் பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. ஆட்டம் பாட்டங்களில் அமர்க்களப்படுத்தும் இவர், சண்டை காட்சிகளிலும் சல்யூட் அடிக்க வைக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் இருந்து வந்திருக்கும் புதுமுக நாயகி சுனைனா, சிரித்து சிரித்து ரசிகர்களை சிறையிழுக்கிறார். முதல் பாதியில் அவர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் இளசுகளின் விசில் சத்தம் பறக்கிறது. பின் பாதியில் பிணமான பின்பும் நடித்து பிரமிப்பூட்டுகிறார். முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் அளவுக்கு நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார். நகுலுடன் தோன்றும் காதல் காட்சிகளில் இயல்பான நடிப்பு... பாடல் காட்சிகளில் இதமான அரவணைப்பு... அவ்வப்போது முத்துப்பல் தெரிய முத்தான சிரிப்பு.. என நடிப்புத்திறனை வெளிக்காட்டியிருக்கிறார். இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் முன்னணி இடத்தை பிடிப்பது நிச்சயம்.
வில்லனாக ஹரிராஜ். பாதி படம் வரை சுனைனாவின் சாந்தமான சித்தப்பாவாகவும், மீதி பாதியில் பாந்தமான வில்லனாகவும் பொருந்தி நடித்திருக்கிறார். ஓடும் ரயிலில் ஹீரோவுக்கு உதவி செய்யும் அப்பாவி டிடிஆராக லிவிங்ஸ்டன், கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக சம்பத் இருவரும் படத்திற்கு பெரிய பலம். சில சீன்களே வந்தாலும் ஓவர் மேக்கப்பில் முகம் சுளிக்க வைக்கிறார் பசி சத்யா.
எஸ்.டி. விஜய்மில்டனின் ஒளிப்பதிவு கண்ணாடிக்குள் மாட்டி வைத்த ஓவியம் போல மிளிருகிறது. விஜய் ஆண்டனியின் இசையும், மாடு செத்தா... என தொடங்கும் நாக்க முக்கா குத்துப்பாடலிலும், உன் தலைமுடி உதிர... தோழியா என் காதலியா... உள்ளிட்ட மெலோடி பாடல்களிலும் ரசிக்க வைக்கிறது.
க்ளைமாக்சுக்கு இரண்டு ரீல்களுக்கு முன்பு குணா கமல் டைப்பில் ஹீரோ நகுலன், ஹீரோயின் சுனைனாவின் பிணத்துடன் கதை சொல்லி பாடும் பாடல் பொறுமையை சோதிக்கிறது. அவ்வளவு பெரிய பாடலை தவிர்த்திருக்கலாம்.
என்னதான் காதலில் விழுந்தாலும், இன்ஜினியரிங் படிக்கும் ஹீரோ, பிணமான காதலியை இத்தனை தூரம் தூக்கிக் கொண்டு ஓடு்ம் காட்சியி்ல நோ லாஜிக். இரண்டொரு நாட்கள் பிணத்தை பாதுகாக்க முடியுமா? என்பன போன்ற கேள்விகள் எழுந்தாலும் அரைத்த மாவைவே அரைக்கும் தமிழ்சினிவில் வித்தியாசமான கதையம்சத்துடன் இப்படத்தை கொடுத்தமைக்காக இயக்குனர் பி.வி.பிரசாத்தை பாராட்டலாம்.
காதலில் விழுந்தேன் - எழுந்து நிற்கிறது
|