* கமலின் எண்ணமும், த்ரிஷாவின் யோசனையும் * மிட்டாய் படத்தில் கார்ட்டூன் சித்திரங்கள் * கேரள வரவு மித்ராவுக்கு லவ் ஹிஸ்ட்ரி ஸ்டார்ட் * அமீரிடம் விளக்கம் கேட்கும் கணித மேதை * வாரணம் ஆயிரம்- கொடைக்கானல் படங்களின் விமர்சனம் * கடும் உடற்பயிற்சி செய்கிறார் சினேகா * ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்கி நடிக்கும் நடிகர் * ஒரே படத்துக்கு 3 இசையமைப்பாளர்களின் இசை * ரவீனா டாண்டனின் சமூக அக்கறை * இசையமைப்பாளர்கள் மாற்றப்படும் மர்மம் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * சசிக்களின் விநியோக டீலிங் * கின்னசுக்கு போகும் பாபுகணேஷ் * திருமணம் பற்றி சல்மான் கருத்து * ஷில்பா ஷெட்டி 3 மாதம் ஓய்வு * இந்தி கஜினிக்கு 1250 பிரிண்ட் * மாடர்ன் பெண்களுக்கு சின்னத்திரை நித்யா அட்வைஸ் * குவாண்டம் ஆப் சோலஸ் பட விமர்சனம் * மாலையானால் மலையேறும் நடிகைகள் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * வாஸ்து‌‌வை நம்பி வீட்டை விற்கும் லாரா * கமலின் முன்னாள் மனைவி நடிக்கும் படம் * கவுதமிக்கு கமல் கொடுத்த புரமோஷன் : சினி வதந்தி * டாப் 5 படங்களின் விமர்சனம் * நடிகைகளின் எக்ஸ்குளூசிவ் வால்பேப்பர்கள் * புத்தம் புதிய படங்களின் ஸ்டில்கள் *  
 
 
 
 
 
   
 
 
 

முனியாண்டி

கல்லூரியில் படிக்கும் நாயகனுக்கும், நாயகிக்கும் இடையே காதல்... நாயகி பெரிய தாதாவின் மகள்... நாயகன் கஷடப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன்... என வழக்கமான கதையைத்தான் வடிவேலுவில் வித்தியாசமான காமெடியை கலந்து கொடுத்திருக்கிறார் டைரக்டர் திருமுருகன். ஆனால் எம்டன் மகன் படம்போல இருக்கும் என்று நம்பி போனால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

காதலால் மூத்த மகனை இழந்த பொன்வண்ணனின் இரண்டாவது மகன் பரத். தந்தை கேண்டீன் நடத்தும் கல்லூரியிலேயே பரத் விலங்கியல் மூன்றாமாண்டு மாணவர். அதே கல்லூரிக்கு விலங்கியல் முதலாம் ஆண்டு படிக்க வருகிறார் அந்த ஊர் தாதாவின் மகள் பூர்ணா. மோதலில் தொடங்கும் இவர்களது நட்பு காதலாக மாறுகிறது. முதல் மகனை காதலால் இழந்த பொன்வண்ணன், பூர்ணாவிடம் சென்று எனது மகனை என்னிடம் இருந்து பிரித்து விடாதே என்று காலில் விழுந்த கேட்கிறார். இதனால் பரத்தை வெறுப்பது போல நடிக்கும் பூர்ணாவை, பரத் செருப்பால் அடித்து அவமானப்படுத்துகிறார். தன்னை காதலித்து விட்டு ஏமாற்றியவளை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு அவரது தென்னந்தோப்பை தீயிட்டு கொழுத்துகிறார். அதன் பிறகு படம் சூடு பிடிக்கிறது. ஜாதி எதிரிதான் தென்னந்தோப்பை தீயீட்டு கொளுத்தியிருப்பார் என நினைக்கும் தாதா, ஜாதி எதிரியை விரட்டுகிறார். இதற்கிடையில் பரத்தின் அண்ணன் சாவுக்கு தாதாதான் காரணம் என்று தெரியவருகிறது. அதன் பிறகு பழிவாங்க புறப்படுகிறார். காதலியை கரம் பிடித்தாரா, எதிரியை தீர்த்துக் கட்டினாரா? என்பதுதான் படத்தில் க்ளைமாக்ஸ்.

பரத் வழக்கமான நடிப்புதான். சொல்லிக் கொள்ளும் படியாக எதுவுமே இல்லை. வடிவேலு தன் பாணி காமெடியில் கலக்கியிருக்கிறார். சொரிமுத்து அய்யனார் என்ற கேரக்‌டரில் சாமியார் வேடத்தில் கல்லூரியை வலம் வருகிறார். காவி உடையணிந்து முடி முதல் அடி வரை சைஸ் வாரியாக மணியை கட்டி தொங்க விட்டு கலகலக்க வைக்கிறார். பேயோட்டும் காட்சிகள் நல்ல கலகலப்பு.

புதுமுக நடிகை பூர்ணாவை முதல் படத்திலேயே பாஸ் மார்க் எடுத்துள்ளார். அசினின் 50 பைசா ஜெராக்ஸ் போல இருக்கும் பூர்ணா, தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார். தாதாவின் மகளுக்கு ஏற்ற தோரணையுடல் கல்லூரியில் வந்து இறங்கும் காட்சிகளும், பரத் மற்றும் நண்பர்களை அலைய விடும் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. பரத்திடம் காதலை சொல்லி உருகும் காட்சி உருக்கம். தன்னை கெடுக்க வந்தவனை அடித்து துவைத்து, ஆடைகளை அவிழ்த்து அதகளம் பண்ணும் காட்சி ரசிக்க வைக்கிறது.

பொன்வண்ணன் அமைதியான தந்தை. மகன் மீது பாசத்தை பொழியும் காட்சியிலும், பூர்ணாவிடம், என் மகனை காப்பாற்று என்று சொல்லி விட்டு, தரையில் துண்டை போட்டு விட்டு, அதை எடுப்பதற்காக கீழே குனிந்து விட்டு, நான் குனிந்தது துண்டை எடுக்கிறதுக்கு இல்லம்மா.. என்று செண்டிமென்ட் வசனம் பேசும் காட்சியிலும் மனதை உருக்குகிறார். பரத்தின் அம்மாவாக வரும் தாரா அழுவதற்கு மட்டும் பயன்பட்டிருக்கிறார்.

முனியாண்டி சிலை செட் பிரமாண்டம். வைத்தியின் கேமரா நன்றாகவே சுழன்றிருக்கிறது. பாடல்கள் கேட்கலாம் ரகம்.

முனியாண்டி - வழக்கமான மசாலா 

- பட காட்சிகள் -

- தினமலர் விமர்சன குழு -

முனியாண்டி (41/100)

""எம் மகன்'' போலவே இதுவும் அப்பா - மகன் கதைதான். அப்பாவி அப்பா - அதிரடிப் பையன் என்ற வித்தியாசத்துடன் "" முனியாண்டி'' முறுக்கேற்றி இருக்கிறார் இயக்குனர் திருமுருகன். கிராமத்துக் கல்லூரியில் அலம்பல் பண்ணித் திரியும் மாணவனாக, பரத். ஊர்ப்பணக்காரர் ராஜா மகள் பூர்ணா அதே கல்லூரியில் படிக்க வருகிறார். அப்புறம் காதல்தானே !

மூத்த மகனை இழந்த சோகத்தால் திரியும் அப்பா பொன்வண்ணன், பரத்தின் காதலுக்கு பாசத்தடை போடுகிறார். திடீரென, ஃப்ரெண்டாதான் பழகினேன்'' என்று பூர்ணா பல்டி அடிக்க, பத்திக்குது பரத்தின் கோபம். அண்ணனின் மரணத்துக்கும் பூர்ணா மறுத்ததற்கும் காரணங்கள் தெரியவரும்போது, ஆக்ஷன் அவதாரம் ஆரம்பம்

பக்கத்து வீட்டுப் பையன் லுக்கில் பார்த்த பரத், இந்தப் படத்தில் செக்கச்செவலேன்று இருப்பது கிராமத்து கேரக்டருக்கு உறுத்துகிறது. பூர்ணாவையும், வில்லனையும் அறைந்து அவமானப்படுத்தும் ஸீன்களில் மட்டும் பரத், நடிப்பில் பொறி !

சொல் பேச்சு கேட்காத பரத்தைப் பார்த்து குமுறுவதும், பரத் அடிவாங்குவதைப் பார்த்து கதறுவதுமாக பொன்வண்ணனுக்கு இந்தப்படம் செமத்தியான ஸ்கோரிங் ஏரியா. ஆனால், ஸ்லோமோஷனில் பரிதாப டயலாக்குகள் பேசிக்கொண்டே செல்வது, செம சலிப்பு !

ஹீரோயின், புதுமுகம் பூர்ணா. மல்லுவுட் தந்த இன்னொரு மாநிறத் தேவதை. பாவாடை தாவணியில், செம ஹோம்லி லுக்கில் அள்ளுகிறார். கோபத்தில் புருவம் வளைக்கும்போது மட்டும் நடிக்கிறார் என்பது தெரிகிறது.

படத்தின் ப்ளஸ், வடிவேலு. மணியாட்டி சாமியாராக வித்தியாசமான கெட்-அப் போடு பேயோட்டியாக என்ட்ரி ஆகிறார். தன் அசிஸ்டெண்ட் கிங்காங்குடன் இவர் பேயோட்ட அல்லாடும் ஒவ்வொரு ஸீனும் தியேட்டரில் திருவிழா.

""பொட்டக் குருவியோ''... பாடலும் பாடலுக்கான சூழலும் புதுசு என்றாலும் ...ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பா... எப்படி அப்பு ?

தென்னந்தோப்பு பின்னணியில் பிரமாண்டமான முனியாண்டி சிலையும், ஜூவாலஜி லேபும் ஆர்ட் டைரக்டர் பூபதிக்கு ஜே போட வைக்கின்றன.

"" உடம்புல இருந்த தெம்பை வயசு தின்னுருச்சு...மனசுல இருந்த தைரியத்தை அனுபவம் தின்னுருச்சு ! '' போன்ற பாஸ்கர் சக்தியின் மைத்துளிகள் ஆங்காங்கே இதம். கிராமத்துப் படத்துக்கேற்ற வைத்தியின் இயல்பான ஒளிப்பதிவும் தடதடக்கும் ஜெயக்குமாரின் படத்தொகுப்பும் பாந்தம். வித்யாசாகர் குத்துப் பாடல்களில் கும்மியெடுக்கிறார். பாடல்கள் படமாக்கப்பட்ட விதத்திலும் செம விறுவிறுப்பு.

கல்லூரிப் பேராசிரியர்களை லூசுத்தனமாகச் சித்தரிப்பது இங்கும் தொடர்கிறது. ஆடு மேய்க்கும் கல்லூரி மாணவன், பாவாடை, தாவணி மாணவிகள் என்று ஒரு தெக்கத்திக் கல்லூரியை காட்சிப்படுத்திய விதத்தில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் திருமுருகன்.

ஆங்காங்கே கமர்ஷியல் மசாலாக்களை அள்ளித் தெளித்ததுதான் ஓவர் டோஸ். பொறி கலங்கவைக்க வேண்டிய அந்த ஃப்ளாஷ்பேக் காட்சி, பொத்தாம்பொதுவாகக் கடந்து செல்கிறது.

"" நம்ம சாதிக்காரப் பய'' என்று மூச்சுக்கு மூச்சு சாதி பற்றிப் பேசிக் கதற வைக்கும் வில்லன்கள்.... புழுதி பறக்கச் சீறிப் பாயும் சுமோக்கள் என்று பழைய சினிமாக்களை நினைவுபடுத்தும் காட்சிகள் ஏராளம் ! ரத்தம், சத்தம்,ஆபாசம் எதுவும் இல்லாத தெளிவான ஃபேமிலி சினிமா. ஆனால், காதல், பாசம், காமெடி, ஆக்ஷன் என எல்லாம் கலந்த கமர்ஷியல் கொத்து பரோட்டாவாக்கியது ஏனோ ?

- விகடன் விமர்சனக்குழு -

முனியாண்டி

காதல் என்பது அசிங்கம். கண்றாவி. ச்சீய்.உவ்வே என அடிக்கடி அட்வைஸ் பண்ணும் அப்பா. சீரியசாக காதலித்து விட்டு திடீரென எனக்கு கல்யாணம். முடிஞ்சா வந்துட்டு போ என்று டாட்டா காட்டும் காதலி. காலேஜ் எலெக்ஷனில் ஜாதிப்பிரச்னையை புகுத்திக்கொடுமை பண்ணுகிற ஊர் பெரிசுகள். இந்த மூன்று பிரச்னைகளையும் முனியாண்டி எப்படி தீர்க்கிறான் என்பது தான் கதை. ஆனால், டைரக்டர் திருமுருகன் இந்த மூன்று பிரச்னைகளையும் சும்மா போகிற போக்கில் தொட்டு செல்வதால் எதுவுமே எடுபடவில்லை.

கிராமத்து கல்லூரி மாணவன் கேரக்டருக்கு பரத் கிட்டத்தட்ட பொருந்துகிறார். ஆர்ம்ஸ் காட்டும் ஆர்வத்தில் கறிக்கடை பாய் மாதிரி கையை முறுக்கி திரிவதில் காலத்திற்கு பொருந்தாத கல்லூரி தன்மை தெரிகிறது. கல்லூரி இளசுகள் செய்யும் சேஷ்டைகள் எதுவும் 1980ஐ தாண்டவில்லை. அறிமுக நாயகி மதுமிதா நல்லதோ, கெட்டதோ படம் முழுவதும் தோழிகள் புடை சூழ வலம் வருகிறார். காதலிப்பதற்கு கூட்டமாக ப்ரபோசல் பண்ணும் காலேஜ் நண்பர்களில் மதுமிதா பரத்தை தேர்ந்தெடுப்பதும், காலேஜ் லேபில் தனியாக மாட்டிக்கொண்டு இருவரும் ரொமான்ஸ் பண்ணுவதும் செம போர்.

காதலிக்கவே இல்லை என்று மதுமிதா பரத்திடம் பல்டியடிக்கும் போது, அது ட்ராமா என்பதை சுலபமாக யூகிக்க முடிகிறது. ஏமாற்றப்பட்ட கோபத்தில் பரத் செருப்பால் அடிக்கும் போது முகத்தில் மருந்துக்கு கூட ரியாக்ஷன் காட்டாமல் நிற்கும் மதுமிதா உண்மையிலேயே பெரிய தியாகி தான். மூத்தமகனின் காதலால் குடும்பத்துக்கே பெரிய அடி விழுந்திருக்கலாம். அதற்காக பொன்வண்ணன் இளையமகனாக வரும் பரத்திடம் நேரம் காலம் தெரியாமல் இப்படியா காதல் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வது? வீட்டுக்கு தாமதமாக வரும் பையனை பொன்வண்ணன் மெல்ல நெருங்கும்போதே நமக்கு அட்வைஸ் பயம் வந்து விடுகிறது.

வில்லன் ராஜா எதோ உடுப்பி ஓட்டலில் இட்லிக்கு ஆர்டர் சொல்வது போல் டேய் எதிர் குரூப்ல நாலு பொணம் விழணும் என்று அரதப் பழசான டயலாக்குகளை அடிக்கடி உதிர்க்கிறார். பரத்துடைய அண்ணனின் சாவுக்கு ராஜா தான் காரணம் என்று தெரிய வருகிற ட்விஸ்ட் சுவாரஸ்யம் தான். ஆனால் வில்லனை பழிவாங்க டிரைவர் யுகேந்தின் பயன்படுத்தும் யுக்திக்கு க்ளைமாக்ஸ் வரையிலுமா காத்திருக்கணும்?

காலேஜின் பியூன் கம் சாமியாராக வருகிற வடிவேலுவின் காமெடி ஒரு சில காட்சிகளில் மட்டும் எடுபடுகிறது. வித்யாசாகரின் இசையும் அப்படியே சீரியலில் யதார்த்தத்துக்காக ரொம்ப மெனக்கெட்ட திருமுருகன் சினிமாவிலும் அதை செய்திருக்கலாம்.

முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு - அரியர்ஸ் இல்லாமல் தேறுவது கடினம்தான்.

- குமுதம் விமர்சனக்குழு -

முனியாண்டி

இரண்டாவது இன்னிங்ஸ்: முதல் படம் போல அச்சு அசல் கதைக்கரு. இழுத்து இழுத்து அடித்திருக்கிறார் இயக்குநர் திருமுருகன். இந்த இன்னிங்ஸில் ரத்த வாடைக்கு இடம் தராமல் ஆடியதற்கு வாழ்த்துகள்.

டைட் போலிங் : தாவணி போட்ட ஹைகூவாக பூர்ணா. தமது நடிப்பில் ஸர்ப்ரைஸ் கூக்லியும், ஆட்டத்தில் அதிசய சைனாமேனும் போட்டு வீழ்த்துகிறார்.

சாகச ஃபீல்டிங் : நாயகன் பரத் கேலியும் கிண்டலுமாக ஃபீல்ட் செய்து, பூர்ணாவின் போலிங்கை மேலும் டைட் ஆக்குகிறார்!

அம்பயர் அப்பா : பொன்வண்ணனுக்குப் பழக்கப்பட்ட அப்பா பாத்திரம். ஓர் அம்பயருக்குத் தேவையான நிதானம் காட்டினாலும் டயலாக் டெலிவரி யோசித்து அவுட் கொடுக்கும் நிதானத்தால் பொறுமையைச் சோதிக்கிறது.

ட்வென்த் மேன் : வழக்கம் போல் காமெடி டிராக் தனியே ஓடினாலும் வடிவேலுவின் பர்ஃபார்மன்ஸ் பின்னுகிறது.

தடுமாறும் கேப்டன்ஸி : கல்லூரி ஆசிரியர்களை தலையாட்டி பொம்மைகளாக காட்டிடும் காட்சிகள். அழுத்தமில்லாத அரைவேக்காடு ஃப்ளாஷ்பேக் காட்சிகள்.

கம்பீ, மிடில் ஆர்டர் : தென்னந்தோப்பு பின்னணியில் அய்யனாரை விஸ்வரூபமெடுக்க வைத்த ஆர்ட் டைரக்டர் பூபதியின் ஆற்றல், உடம்புல இருந்த தெம்பை வயசு தின்னுருச்சு, மனசுல இருந்த தெம்பை அனுபவம் தின்னுருச்சு. போன்ற பாஸ்கர் சக்தி பிராண்ட் வசன ஃப்ளாஷ்கள்.

டாப் ஸ்கோர் நாயகர்கள் : புழுதிக்காட்டை இயல்பு மாறாமல் படம் பிடித்துள்ள வைத்தி, ஜீவன் குறையாமல் தொகுத்துள்ள ஜெயக்குமார்.

கைநழுவிய கேட்ச்கள் : பழைய பட காட்சிகளையே நினைவூட்டும் சாதி வெறி வில்லன்கள்.

கேப்டன்ஸி : இடறல்களினிடையேயும் வெற்றியின் விளிம்புவரை அணியை இழுத்து சென்றுள்ளார் திருமுருகன்.

- கல்கி விமர்சனக்குழு -

 
 
 
 
   
   
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.