* கமலின் எண்ணமும், த்ரிஷாவின் யோசனையும் * மிட்டாய் படத்தில் கார்ட்டூன் சித்திரங்கள் * கேரள வரவு மித்ராவுக்கு லவ் ஹிஸ்ட்ரி ஸ்டார்ட் * அமீரிடம் விளக்கம் கேட்கும் கணித மேதை * வாரணம் ஆயிரம்- கொடைக்கானல் படங்களின் விமர்சனம் * கடும் உடற்பயிற்சி செய்கிறார் சினேகா * ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்கி நடிக்கும் நடிகர் * ஒரே படத்துக்கு 3 இசையமைப்பாளர்களின் இசை * ரவீனா டாண்டனின் சமூக அக்கறை * இசையமைப்பாளர்கள் மாற்றப்படும் மர்மம் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * சசிக்களின் விநியோக டீலிங் * கின்னசுக்கு போகும் பாபுகணேஷ் * திருமணம் பற்றி சல்மான் கருத்து * ஷில்பா ஷெட்டி 3 மாதம் ஓய்வு * இந்தி கஜினிக்கு 1250 பிரிண்ட் * மாடர்ன் பெண்களுக்கு சின்னத்திரை நித்யா அட்வைஸ் * குவாண்டம் ஆப் சோலஸ் பட விமர்சனம் * மாலையானால் மலையேறும் நடிகைகள் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * வாஸ்து‌‌வை நம்பி வீட்டை விற்கும் லாரா * கமலின் முன்னாள் மனைவி நடிக்கும் படம் * கவுதமிக்கு கமல் கொடுத்த புரமோஷன் : சினி வதந்தி * டாப் 5 படங்களின் விமர்சனம் * நடிகைகளின் எக்ஸ்குளூசிவ் வால்பேப்பர்கள் * புத்தம் புதிய படங்களின் ஸ்டில்கள் *  
 
 
 
 
 
   
 
 
 

சரோஜா

மீண்டும் ஒரு தரமான தமிழ்சினிமா என்று சொல்லும் அளவுக்கு சரோஜாவை சாமர்த்தியமாக ‌கொடுத்துள்ளார் டைரக்டர் வெங்கட்பிரபு. பரப்பரப்பான ஆக்ஷன், கலக்கல் காமெடி, த்ரில்லர் கதை இவற்றின் கலவைதான் சரோஜா.

பெரும் பணக்காரரான பிரகாஷ்ராஜின் மகள் வேகா. சரோஜா என்ற கேரக்டரில் நடித்திருக்கும் இவர்தான் படத்தின் நாயகி. இவரை பணத்துக்காக வில்லன் கும்பல் கடத்துகிறது. கடத்தப்பட்ட வேகாவை விடுவிக்க வேண்டுமானால் ரூ.10 கோடி தர வேண்டும் என்பது வில்லன் கும்பலின் கோரிக்கை. இதனால் தனது மகளை மீட்க போலீஸ் அதிகாரியான ஜெயராமை பிரகாஷ்ராஜ் நாடுகிறார். அதே நேரத்தில் படத்தின் நாயகர்களான சிவா, கணேஷ், ‌சரண், வைபவ் ஆகிய 4 பேரும் ஐதராபாத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை பார்க்க ஒரு வேனில் புறப்படுகிறார்கள்.

போகும் வழியில் ஒரு சிறு விபத்து காரணமாக சென்னைக்கே திரும்பி விட கதாநாயகர்கள் முடிவு செய்கிறார்கள். ஆனால் கிரிக்கெட் பார்க்காமல் திரும்ப மனமில்லாத வைபவ், ஐதராபாத் செல்ல குறுக்கு வழி இருக்கிறது என்று கூற, அந்த வழியில் வேன் செல்கிறது. வழிதவறுவதால் ஒரு எஸ்டேட்டுக்குள் 4 பேரும் மாட்டிக் கொள்கிறார்கள். அங்குதான் கடத்தப்பட்ட வேகாவும் அடைத்து வைக்கப்படிருக்கிறார். எஸ்டேட்டில் சிக்கிய நண்பர்கள் என்ன ஆனார்கள், கடத்தப்பட்ட நாயகி வேகாவை மீட்டார்களா? என்ற கேள்விகளுக்கு பதில்தான் கடத்தின் க்ளைமாக்ஸ்.

நாயகர்களாக நடித்துள்ள 4 பேருமே நடிப்பில் தனி முத்திரை பதிக்கிறார்கள். பிரேம்ஜிக்கு அழகான எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் காதல். பாரதிராஜா பாடலுடன் வெள்ளை உடை தேவதைகள் சுற்றிவரும் கற்பனை, சிரிக்கவைக்கிறது. வைபவ் தனது காதலை நண்பன் சிவாவுக்காக தாரை வார்த்தவர். சரண் குடும்பஸ்தர் என்று ஒவ்வொருவருக்கும் தனித்தனி பின்னணி தந்திருப்பது ப்ளஸ்.

நாயகிகளாக நடித்தவர்களில் காஜல் அகர்வால், நிகிதா ஆகியோருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. வேகா கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியுள்ளார். பிரகாஷ் ராஜ் நடிப்பு பற்றி சொல்லத் ‌தேவையில்லை. தனக்கே உரிய பாணியில் வில்லன் கும்பலிடம் ‌பேசி ரசிக்க வைக்கிறார். ஜெயராம் மிடுக்கான போலீஸ் அதிகாரி.

கதையில் த்ரில்லரையும், காமெடியையும் கலந்த கட்டி அடித்திருக்கும் விதம் ரசிகர்களை பல்சை எகிற வைக்கிறது. சில இடங்களில் மட்டும் லாஜிக் இல்லா காமெடி எடுபடவில்லை. ஒரேயொருநாள் நடக்கும் சம்பவங்களை வைத்து அருமையான படத்தை ‌செதுக்கியிருக்கிறார் டைரக்டர் வெங்கட் பிரபு. படத்துக்கு ப்ளஸ் பாயிண்ட் திரைக்தையும். கதாபாத்திரங்களும்தான். சக்தி சரவணனின் ஒளிப்பதிவு காட்சிகளை கண் முன்னே நிழலாட வைக்கிறது. யுவனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மீண்டும் கேட்கத்தூண்டும்.

சரோஜா : த்ரில்லர்

- பட காட்சிகள் -

- தினமலர் விமர்சன குழு -

சரோஜா

ஹைதராபாத்தில் நடக்கும் கிரிக்கெட் மேட்சை நேரடியாக பார்க்க வேனில் போகும் நாலு இளைஞர்கள் வழி தவறி, ஒரு கடத்தல் கும்பலிடம் சிக்கிக்கொண்டால் என்னஆகும். வில்லன்கள் கடத்தி வைத்துள்ள மாணவியை மீட்கும் பொறுப்பும் கூடவே இளைஞர்களின் தலையில் விழுந்தால்? இது தான் கதை.

இதை யதார்த்தமும் காமெடியும் கலந்து சொல்ல முயல்கிறது சென்னை-28 டீம். இந்த கதையிலும் யார் ஹீரோ என்று சொல்ல முடியாது. எல்லோருமே ஹீரோக்கள் . ஆரம்ப காட்சிகளில் பிரேம்ஜியின் எவ்வளவோ பண்ணிட்டோம். இதை பண்ண மாட்டோமா? என்று லேசாக ஆரம்பிக்கும் காமெடி போக போக போரும் சிக்ஸுமாக தூள் கிளம்புகிறது. ஆபத்தான நேரத்தில் மனைவியின் போட்டோவை பார்த்து செண்டிமென்ட் டயலாக் விடும் எஸ்.பி.பி. சரணிடம் யாருங்க அந்த பிகர்? என பிரேம்ஜி கேட்கும் போது தியேட்டரே அதிர்கிறது. பிரேம்ஜி கலக்கலஜி.

அதட்டல் பேர் வழியாக பார்த்து பழக்கப்பட்ட பிரகாஷ்ராஜுக்கு கடத்தல் கும்பலிடம் மகளை பறிகொடுக்கிண்ற பிஸினெஸ்மேன் கேரக்டர். அப்பாவித்தனமான வேஷமும் பிரகாஷ்ராஜுக்கு அளவெடுத்து தைத்த சட்டை. தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் வைபவ் செய்திருப்பது அமைதியான ஆக்ஷன். இவரது காதல் தோல்வி ப்ளாஷ்பேக் வெறும் இடைச்செருகல். வைபவ்வும் சரணும் அடிக்கடி தெலுங்கில் மாட்லாடுவதும் கருத்து வேறுபாட்டின் போது அதுவே தமிழ் நண்பர்களின் சந்தேகத்திற்குள்ளாவதும் நட்பின் இயல்பான ஒர கட்டம்.

வேகா, நிகிதா, காஜல் அகர்வால் ஆகிய மூன்று பேரில் முன்னவருக்கு மட்டுமே நடிப்பதற்கு வாய்ப்பு பணத்துக்காக கடத்தப்படுகிற சரோஜாவாக வருகிற வேகாவிடம் மழலைத்தனம் கலந்த அழகு. நிகிதாவும் காஜலும் தலா ஒரு பாட்டுக்கு பயன்படுகிறார்கள். கடத்தல் கும்பலை பிடிக்கும் சீரியஸ் போலீஸாக வருகிறார் ஜெயராம். சீரியஸாக அவர் பேச முயலும் போதெல்லாம் நமக்கு சிரிப்பு வருகிறது. அவரே வில்லனாக மாறுவது நம்ப இயலவில்லை.

பாழடைந்த பங்களாவுக்குள் பேய் உருவங்கள் போல் நாலைந்து பேர் திரிகிறார்கள். எதற்கு என்பதை ரைக்டர் தான் விளக்க வேண்டும். மனைவியை சமாளிக்கும் எஸ்.பி.பி. சரண்,செலவுக்கு புலம்பும் சிவா என இளைஞர் பட்டாளம் நடிப்பில் தூள் கிளப்பி இருப்பது படத்துக்கு பலம்.

கூடவே யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் பட்டையை கிளப்பியிருக்கிறது. ஷக்தி சரவணனின் காமிராவும் பிரவீன் ஸ்ரீகாந்தின் எடிட்டிங்கும் படத்துக்கு இன்னொரு பிளஸ். ஆனால் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது வெங்கட் பிரபுவின் திரைக்கதை அமைப்பும், இயக்கமும், இளமையும் உற்சாகமுமாய் இயக்கியிருக்கிறார்கள்.

சரோஜா - ஜாலி மஜா

- குமுதம் விமர்சன குழு -

சரோஜா

சென்னை-28 அணியின் செகண்ட் இன்னிங்ஸ்!
அதே ஜாலி, கேலி இதிலும். கூடவே செம காமெடி த்ரில்லர். கடத்தல் கும்பலிடம் சிக்கிக்கொண்ட ஒரு பெண், தற்செயலாக அந்த பக்கம் வந்த நான்கு அப்பாவி பையன்கள். ஆரம்பமாகுது சரோஜா. ஓரிஸ்ஸாவிலிருந்து கிளம்பும் கெமிக்கல் டேங்கர் லாரி... கிரிக்கெட் மேட்ச் பார்க்க கிளம்பும் சென்னை இளைஞர்கள்... ஹைதராபாத் கடத்தல் கும்பலிடமிருந்து மகளை காப்பாற்ற தவிக்கும் தொழிலதிபர்... இந்த மூன்று ஜியாக்ரபிக்கல் லொகேஷன்களுக்கு இடையே நிகழும் ஆக்ஷன் இரவு தான் படம்.

திக் திக் த்ரில்லர் தியரியை வைத்துக்கொண்டு ஸீனுக்கு ஸீன் ஹ்யூமர் பாம் வெடித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. எஸ்.பி.பி.சரண். பிரேம்ஜி அமரன், சிவா, வைபவ் என நான்கு நண்பர்களினவ் திகில் எபிசோடை சொன்ன விதம் புதுசு. வழக்கமான சீரியஸ் த்ரில்லர்களில் இருந்து சரோஜாவை வித்தியாசப்படுத்துவது அதன் காமெடி. ட்ரீட்மென்ட். எதிர்பார்க்கவே முடியாத இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறது திரைக்கதை. ஆஜா மேரே ஸோனியே பாடலில் சின்னத்திரை அழுகாச்சி ஆட்களை கலர்புல்லாக ஆட விட்டிருப்பது ஓம் சினிமா ஓம்.

நான்கு பேரில் நாக் அவுட் காமெடியனாக பிரமாதப்படுத்துகிறார் பிரேம்ஜி. எதிர்படும் ஒவ்வொரு பெண்ணையும் பிரேம்ஜி கண்கள் மின்னப் பார்க்கும் போது வெள்ளுடைய தேவதைகள் லலல் லலல் பாடுவது லொள்ளு, ஜொள்ளு. சீரியல் நாயகனாக வரும் சிவா, செம ஸ்கோர். என்னை நம்பி நிறைய கமிட்டென்ஸ் இருக்கு சார். எல்லா சீரியல்லயும் என் போட்டோ போட்டு மாலை போட்டா, நல்லவா இருக்கும்? என்று போங்கு பண்ணுவதும், உயிருக்கு பயந்து ஓடுகிற இடத்தில் வண்டி ரொம்ப டேமேஜ் ஆகிருச்சு. நிறைய செலவாகும் சார்? என்பதுமாக பின்றீங்க பிரதர்.

கொல்ட்டி சகோதரர்களும் ரொம்பவே பந்தம். மனைவியையும், நண்பர்களையும் பேலன்ஸ் பண்ண முடியாமல் தவிக்கும் இடங்களில் எஸ்.பி.பி.சரண் ஜொலிக்கிறார். அந்த பர்ஸ் காமெடி, அவர்களை மீண்டும் டிராஜெடிக்குள் தள்ளுகிற ஸீன்... தியேட்டரில் எழுந்து நின்று சிரிக்கிறார்கள். மகளை பறிக்கொடுத்து தவிக்கும் பிரகாஷ்ராஜ் அண்டர்ப்ளே ஆக்டிங்கில் கச்சிதம். க்ளைமாக்ஸில் திரி கிள்ளும் இடங்களில் ஓவர் ஆக்ட்டிங்கை தவிர்த்திருக்கலாம். ஜெயராம் சரோஜா வான வேகாவுக்கு நடிக்கவோ, துடிக்கவோ வாய்ப்புக்களே இல்லை. வில்லனின் காதலி நிகிதாவின் ஒரு பாடல்... செம சூடு.

அதிரடி பிஜிஎம் பில்டப்களுடன் வீறுகொண்டு எழும் நண்பர்கள் படை, அடுத்து ஷாட்டிலேயே வில்லன்கள் முன் குத்த வைத்து உட்கார்ந்து குமுறுவது உட்டாலக்கடி காமெடி. மெகா சீரியல் சிவா தலையிலல் காலி பாட்டிலால் தட்டிக்கொண்டே. உன்னை எங்கியோ பார்த்திருக்கேன்டா என்று அடியாள் யோசிப்பது லந்து லாங்வேஜ்.

யுவனின் இசையும், சக்தி சரவணனின் ஒளிப்பதிவும் படத்து மகா ப்ளஸ். ஒவ்வொரு பாலிலும் வித்தியாசமாக துள்ளும் யுவனின் இசை. பின்னணியிலும் மிரட்டல். 90 சதவிகிதம் டல் லைட்டிங்கில் கதை நகர்ந்தாலும், ஒளிப்பதிவில் டாலடிக்கிறார் சக்தி சரவணன். பிரவீன் ஸ்ரீகாந்தின் எடிட்டிங் கூட்டு அமைத்து வேட்டு வெடிக்கிறது. நிழல், நிஜத்துக்கு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத விதேஷின் கலை இயக்கமும் அழகு.

பிற்பாதி முழுக்க சிதிலமான பேக்டரியில் நண்பர்கள் ஓடிக்கொண்டே இருப்பது தான். அசர வைக்கும் அலுப்பு. எப்படா விடியும், பிரச்னை முடியும் என்று நெளிய வைக்கும் ஓட்டம். துப்பாக்கிகளுடன் திரியும் வில்லன் க்ரூப்பை, இந்த பிள்ளை பூச்சி நண்பர்கள் ஜஸ்ட் லைக் தட் காலி செய்வது உட்பட காமெடி லைசென்ஸை வைத்துக்கொண்டு அத்தனை லாஜிக்கையும் அடித்து துவம்சம் பண்ணி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் எப்படியும் சக்சஸ் புல்லாக தப்பிக்க போகிறார்கள் என்பதால், அந்த திகில் த்ரில் சுத்தமாக மிஸ்ஸிங்.

ஒரே இரவில் அடுத்தடுத்து அத்தனை கொலைகள். ஆனால், ஏதோ மிட் நைட் கொசுக்களை குட்நைட் அடித்து காலி செய்தது போல, விடிந்ததும் செம கூலாக நண்பர்கள் கலைந்து செல்வது... ரொம்ப ஓவருங்க.

இதே மாதிரி படம். இத்தனாம் வருஷம் இங்கிலீஷ்ல வந்திருக்கு என்பது உட்பட விமர்சனங்கள் எழலாம். ஆனால் தமிழில் புதுவகை நகைச்சுவையை இம்மாதிரி படங்கள் துவக்கி வைக்க கூடும் என்பது தான் வெங்கட் பிரபுவின் வெற்றி.

- விகடன் விமர்சன குழு -

 







 
 
 
 
   
   
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.