உளியின் ஓசை
கலைஞரின் கைவண்ணத்தில்
உருவாகியிருக்கும் பழமை மாறாத புதுமையான சரித்திர
படம்தான் உளியின் ஓசை.
காலாகாலத்துக்கும் நிலைக்கும்படியான ஒரு கோவில் கட்ட
சோழ மன்னன் ராஜராஜன் நினைக்கிறார். அந்த கோவிலுக்காக
சிலை வடிக்கும் பொறுப்பை ஏற்கிறார் புகழ்மிக்க
சிற்பியான வினித். சோழ மன்னன் தன்னை தேர்ந்தெடுத்ததை
பெருமையாக கருதும் வினித் 100 வித்தியாசமான சிலைகளை
வடிக்க முடிவெடுக்கிறார். அனைத்தும் ஆடல் கலையை
வெளிப்படுத்தும் சிலைகள். இதற்காக நடனம் ஆடத்தெரிந்த
ஒரு மங்கையே தேடுகிறார். சிலை வடிப்பதற்கு மாடலாக
இருக்க தயார் என்று சோழமண்டலத்தின் அரசவை நர்த்தகியான
அட்சயா முன்வருகிறார். ஆனால் அவரை தேர்ந்தெடுக்காத
வினித், ஆட்டுக்காரியின் பேத்தியான கீர்த்திசாவ்லாவை
மாடலாக தேர்ந்தெடுக்கிறார். இருப்பினும் கோபம்
கொள்ளாமல் வினித் மீது காதல் வயப்படுகிறார் நர்த்தகி
அட்சயா. இதற்கிடையில் கீர்த்தி சாவ்லாவை மாடலாக நிற்க
வைத்து சிலைகளை வடித்து முடிக்கிறார் வினித். அதோடு
கீர்த்தி சாவ்லாவின் மீது காதலும் கொள்கிறார். இந்த
முக்கோண காதல் கதையின் முடிவுதான் க்ளைமாக்ஸ்.
சந்திரமுகி படத்தில் நாட்டியமாடி பெயரெடுத்த வினித்
இந்த படத்தில் நாட்டியம் ஆடவைத்தும், ஆடியும்
பெயரெடுத்து விட்டார். சிற்பி கேரக்டருக்கு நன்றாகவே
பொருந்தி, நல்ல நடிகர் என்று மீண்டுமொருமுறை
நிரூபித்திருக்கிறார். தன்னை கொல்ல வரும் ஒருவனுக்கு
பாசத்துடன் பச்சிலை போட்டு அனுப்பும் காட்சியில்
மனிதாபிமானத்தின் மறுஉருவாக ஜொலித்திருக்கிறார்.
கீர்த்தி சாவ்லாவும் தன் பங்குக்கு நடனத்தில்
அசத்தியிருக்கிறார். உளியின் ஓசைக்கு ஏற்ப அவர் ஆடும்
நாட்டியம் ரசிக்க வைக்கிறது. செவ்விதழில் செக்க
செவேறென்று லிப்ஸ்டிக் தடவி, அவ்வப்போது உதடு
சுழிப்பது சில இடங்களில் ரசிக்க வைக்கிறது. சில
இடங்களில் நம்மை முகம் சுழிக்க வைக்கிறது. ஆரம்ப
காட்சியில் படையப்பா நீலம்பரியாக தோன்றும் அட்சயா,
கடைசியில் ஸ்ரீதேவியாக மாறிவிடுகிறார். கீர்த்தி
சாவ்லாவுடன் போட்டி போடும் அளவுக்கு பாம்பு நடனம் ஆடி
அசத்தியிருக்கிறார்.
கஞ்சா கருப்பும், கோவை சரளாவும் தங்களுக்கு கொடுத்த
காமெடி கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாளத் தவறி
விட்டார்கள். சூடாமணி வசனக் காமெடி உள்ளிட்ட சில
காமெடிகளைத் தவிர மற்றவை போர் ரகம். மனோரமா வேறு
நாட்டியமாடி நேரத்தை வீணடித்திருக்கிறார்.
இளையராஜாவின் இசையில் எல்லா பாடல் காதுகளுக்கு இனிமை.
கலைஞரின் வசனம் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவரது பேனா
மை ஆவேசம், ஆக்ரோஷம், சென்டிமென்ட், காதல், காமெடி என
அனைத்தையும் தொட்டுச் சென்றிருக்கிறது. குறிப்பாக
காதல் காட்சி வசனங்களில் இன்றைய இளைஞர்களை மிஞ்சி
விட்டார். கலைஞரின் வரிகளை ரசிக்கும் படியாக
படமாக்கியிருக்கும் டைரக்டர் இளவேனிலுக்கு
பாராட்டுக்கள்.
உளியின் ஓசை - பழமை மாறா புதுமை
- பட காட்சிகள் -
- தினமலர் விமர்சன குழு -
கவரலாற்றைப் பாராட்டும்போதுகூட, அதில் கலைஞரின் கண்ணோட்டம்
தனிதான்....
மன்னர்கள் ஏன் கோயில்களை வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி சிற்பக் கலையின்
சிகரங்களாகவும் உருவாக்கினார்கள் என்பதற்கு, ராஜராஜசோழன், இடத்தில் இருந்து ஒரு
காரணத்தைச் சொல்கிறார்.... போர்க்கள வெற்றிகளால் பெற்ற பெருமைகளெல்லாம் பின்னாளில்
கொலைக்கள கொடூரங்களாகச் சித்தரிக்கப்படலாம். ஆனால், கலைப்பணிகள் மட்டும்தான்
என்றென்றைக்கும் களங்கப்படுத்த முடியாத அரும்பணியாக நிலைத்து நிற்கும்! என்பதுதான்
அது. ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோயிலை ஒரு கலைப் பொக்கிஷமாக உருவாக்க இதுதான் காரணம்
என்று கலைஞர் தன் கற்பனையோடு வரலாற்று யதார்த்தத்தையும் கலந்து
உருவாக்கியிருப்பதுதான் "உளியின் ஓசை'.
திரைக்கதையில் தன் திறமையைக் காட்ட இடைவேளைக்குப் பின் பல திருப்பங்களையும் அவர்
வைக்கத் தவறவில்லை.
சமீபகாலமாக சமூகப் படங்களுக்கு வசனம் எழுதும்பொழுது பொருந்தாமல் சறுக்கும் கலைஞரின்
பேனா, வரலாற்றுப் படம் என்பதால் வசனத்தில்
பரவாயில்லை ரகம்! இதற்குப் பொருத்தமாக இளையராஜாவின் இசை... உளியின் ஓசையை
உயிரின் துடிப்பாக தன் இசையால்
உருமாற்றியிருக்கிறார். ராஜா. பாடல்கள் திரும்பத் திரும்ப கேட்க வைக்கும். சிற்பக்
கலையின் சிறப்பைச் சொல்லும் இந்தப் படத்தில் ஒரு
ஆட்டுக்கல், அம்மிக்கல், அளவுகூட கருங்கல்லைக் காட்டாமல் கண்ணாமூச்சி விளையாடுகிறார்
இயக்குநர்.
காடாத் துணிக்குப் பெயிண்ட் அடித்து பெரிய பாறை என்கிறார். சிமெண்ட் பொம்மைகளை
வைத்துக் கொண்டு சிற்பம் என்கிறார். இவர் காட்டும் சிற்பக் கூடமோ சிறைக்கூடம் போல்
இருக்கிறது. பாவம் ராஜராஜ சோழனாக வரும் சரத்பாபுவும் ராஜேந்திரனாக வரும் உதயாவும் -
சோழ சக்கரவர்த்திகள் என்று சொல்லிக் கொண்டு ஆள் அம்பு எதுவும் இல்லாமல் திருவிழாவில்
தொலைந்த குழந்தை மாதிரி தனிமையில் திரிகிறார்கள். இந்தக் காமெடிகள் ஒருபுறம் என்றால்
மனோரமா, கோவை சரளா, கஞ்சா கருப்பு குரூப்புகள் நகைச்சுவை என்று அலம்பல் பண்ணுவது
மொக்கையிலும் மொக்கை. ஒரே ஆறுதல் சிற்பி இனியனாக வரும் வினீத்தின் நடனம், அதைத்
தவிர அட்சயாவின் கவர்ச்சியும் கீர்த்தி சாவ்லாவின் பேரழகும் நம்மை பயமுறுத்தாத
குறைதான். இயக்குநர் இளவேனிலுக்கு இது முதல்படமாம். வரலாற்றுப் படம் எடுக்க வந்தவர்
குறைந்தபட்சம் ஆர்.எஸ். மனோகரின் அந்தக்கால சரித்திர நாடகங்களைப் பார்த்திருந்தால்,
இப்படி பள்ளிக்கூட டிராமவைப் போல் படுகேவலமாக எடுத்திருக்கமாட்டார்.
மொத்தத்தில் உளியின் ஓசை காதுகளுக்கு இதமாக இருந்தாலும் கண்களுக்கு நெருடல்தான்
- பட காட்சிகள் - -
நன்றி குமுதம் விமர்சனக்குழு -
|