தாம் தூம்
தமிழகத்தை சேர்ந்த இளம் டாக்டரான ஜெயம் ரவிக்கும் ரஷ்யாவில் சில நாட்கள் நடக்கும் மருத்துவ ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொள்ளும் வாய்ப்பு. ஐந்து இந்திய மருத்துவர்களுடன் ரஷ்யா போகும் ரவி, தனி ஆளாக ஒரு இளம் மாடல் அழகியின் கொலை கேஸில் மாட்டிக் கொள்கிறார். கொலையை அவர் செய்யவில்லை என்றாலும் அவரை அதில் சிக்க வைத்து எஸ்கேப் ஆகிறது போதை கடத்தல் கும்பல். வழக்கம்போல ஜெயிலில் இருந்து தப்பிக்கும் ஹீரோ, குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஏரியா ரஷ்யா என்பதால் தனி ஆளாக இல்லாமல் இந்திய தூதரகம் ஏற்படுத்தி தரும் தன் பெண் வக்கீல் லட்சுமி ராய் சகிதமாக குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் எப்படி நிறுத்துகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
வழக்கமான கதைதான் என்றாலும் அதை ரஷ்ய பின்னணியில் சொல்லியிருப்பதும், ஹீரோ ரவியின் கிராமத்து புதுமுகம் கங்கனத ரனாவத் ஊரில் திருமண ஏற்பாடுகளுடன் ரவியை காணாமல் காத்திருப்பதையும், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட காதலையும் கலந்து கட்டி சொல்லியிருக்கும் விதம் புதுமை. என்னதான் இத்தனை புதுமையாகவும், புதிய சூழலிலும் கதை சொல்ல முற்பட்டிருந்தாலும், லாஜிக் இல்லாமல் மேஜிக் காட்டியிருப்பதால் தாம் தூம் சில இடங்களில் ஜகா வாங்குகிறது. உதாரணத்திற்கு தூதரக அதிகாரி ஜெயராம் போதை கும்பலின் மூளையாக செயல்பட்டு, ஜெயம் ரவியை கொலையில் சிக்க வைத்து பலிகடா ஆக்குகிறார். ஆனால் அவரே ரவிக்கு அடைக்கலம் தருவதும், பொறுமையாக போலீசில் சரணடைந்து விடு என்று சொல்வதும் லாஜிக் மீறிய மேஜிக். இப்படி நிறையை காட்சிகளை சொல்லலாம். அதேபோல ஜெயம் ரவி ரஷ்யாவின் சந்து பொந்துகளில் எல்லாம் அந்த ஊரில் பிறந்து வளர்ந்தது போன்று புகுந்து ஓடுவது ஹைலைட் காமெடி. இப்படி சில பல லாஜிக் குறைகளை நீக்கி விட்டு பார்த்தால் நிறைவான கதைதான் தாம் தூம்.
இளம் மருத்துவர் கவுதம் சுப்பிரமணியமாக வரும் ஜெயம்ரவி, மருத்துவ பணியைத்தவிர மற்ற எல்லாவற்றையும் செய்து சபாஷ் வாங்குகிறார். செண்பா கேரக்டரில் கங்கானா. வக்கீல் ஆர்த்தி சின்னப்பாவாக லட்சுமி ராய். ஆனா பித்ரோவாக ரஷ்ய அழகி மரியா என்று மூன்று கதாநாயகிகளும் தங்களுக்கு தரப்பட்ட பாத்திரத்தை சரியாக செய்துள்ளனர். கிராமத்து பெண்ணாக நடித்துள்ள கங்கானா படத்தி்ன் கலகலப்புக்கு உதவியிருக்கிறார். பஸ்சை பிடிப்பதில் தொடங்கி, சீட்டு விளையாடுவது வரை பெட் கட்டி பணம் கறப்பது நல்ல ட்ரிக். பலான படம் ஓடும் டூரிங் டாக்கீசுக்கு கங்கானா வருவதும், அவரை அனுப்புவதற்காக ஊர் பெரிசுகள் படாத பாடு படுவதும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. ஜெயம்ரவியுடன் இவ்வளவு நெருக்கமாக நடித்தும் அவ்வப்போது சூடேற்றுகிறார். உடலில் இன்னும் கொஞ்சம் சதை வைத்தால் கங்கானா கோலிவுட் ரசிகர்களின் செல்லப்பிள்ளையாவது நிச்சயம்.
ரஷ்ய அழகி மரியா துருதுருவென்று வளைய வந்து திடீரென்று இறந்து போவது படம் பார்த்து வெகுநேரமாகியும் கண்களை விட்டு அகல மறுக்கிறது. வக்கீலாக நடித்துள்ள லட்சுமிராய் ஜெயம் ரவி மீது காதல் கொள்வதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருந்தால் ரசிக்க வைத்திருக்கும். அவ்வப்போது செவ்விதழ் விரித்து புன்னகைப்பது லட்சுமிராயில் ப்ளஸ். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கப்பட்டிருப்பதால் ரஷ்ய மொழியிலேயே எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது ஜெயம்ரவி தவிப்பதுபோல நாமும் தவிக்க வேண்டியிருக்கிறது. ஒரு சில காட்சிகளில் தமிழில் விளக்கம் போடுவது ஆறுதல்.
ஜெயராம் வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார். நிழல்கள் ரவி, மகாதேவன், போஸ் வெங்கட், ஸ்ரீநாத், சேத்தன், அனுஹாசன், ஜானகி சபேஷ், வத்சலா என ஒரு பெரும் பட்டாளமே படத்தை கலகலப்பாக வைத்துக் கொள்கிறது.
மறைந்த இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ஜீவத, செகண்ட் யூனிட் டைரக்டர் ஜி.கே.மணிகண்டன், ஒளிப்பதிவாளர் ராஜேசேகர், காஸ்ட்யூம் டிசைனர் அனீஸ்தன்வீர் (மறைந்த ஜீவாவின் மனைவி) உள்ளிட்ட அனைவருமே தாம் தூமை ரிச்சாக படம் பிடித்து காட்ட பாடுபட்டிருப்பது பிரேமுக்கு பிரேம் தெரிகிறது. இது மக்களிடம் எந்த அளவுக்கு ரீச் ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒரு கொசுறு : மற்ற இளம் ஹீரோக்கள் எல்லாம் ரஜினியின் இடத்துக்கு குறி வைத்து போட்டி போட... ஜெயம் ரவி மட்டும் சத்தமில்லாமல் கமல்ஹாசனின் இடத்தை பிடிக்கப்போகிறார் என்பது அவர் மூன்று நாயகிகளுடன் லில் டூ லிப் கிஸ் அடிப்பதில் இருந்தே தெரிகிறது. புகுந்து விளையாடியிருக்கிறார்.
தாம் தூம் - டமால் டுமீல்
-
பட காட்சிகள் -
- தினமலர் விமர்சன குழு -
தாம் தூம்
காதலித்த பெண்ணோடு கல்யாணத்தை நிச்சயித்து விட்டு முக்கியமான கான்ப்ரன்ஸ் ஒன்றில் கலந்து கொள்ள ரஷ்யா செல்லும் நாயகன் ஜெயம்ரவி. கொலைக்குற்றம் சுமத்துப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். பதினைந்து நாளில் கல்யாணம். கிராமத்தில் பரபரப்பாக ஏற்பாடுகள் நடக்க... சரியான நேரத்திற்கு மாப்பிள்ளை வந்து சேர்ந்தாரா? இல்லையா? இது மட்டுமே கதையாக இருந்து, அதற்கு ஒழுங்காக ஒரு திரைக்கதையும், உருப்படியாக வசனமும் எழுதியிருந்தால் தாம்தூம் தப்பித்திருக்கும்.
அதை விட்டு விட்டு நிச்சயதார்த்தம் வரை வந்த காதலை திரும்ப சொல்கிறேன் பேர்வழி என்று மாஸ்கோ, திரில்லருக்குள் மாவூர் காதலை திணித்திருப்பது டாய்லெட்டில் ஆம்லெட் சாப்பிட்ட கதையாகி விட்டது.
டாக்டராக வரும் ஜெயம்ரவியில் கிராமத்து காதலியாக அறிமுகமாகி யிருக்கிகுறார் கங்கனா ரெனாவத். கஷ்டப்பட்டு நடித்திருந்தாலும் அவர் காரியக்கிறுக்கா? செல்லக்கிறுக்கா? கான்வென்ட் ரிட்டர்னா öன்று கடைசி வரை நம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை.
மற்றொரு கதாநாயகியாக லட்சுமிராய். லாரியில் முன்னால் தொங்கும் எலும்மிச்சம் பழம் போல் எந்த பிரயோசனமும் இல்லாமல் வந்து போகிறார்.
கங்கனாவின் கழுக்குக்கீழ் இருக்கும் கவர்ச்சியான மச்சம். ரஷ்ய நடிகை மரியாவின் வசீகரமான புன்னகை. மாஸ்கோ நகரின் ஆர்ப்பாட்டமில்லாத அழகு இவற்றை மட்டுமே வைத்து இளைஞர்களுக்கான படம் என்பதெல்லாம் விலை போகாத விளம்பரம்.
ஹாரீஸ்ஜெயராஜின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. டைட்டில் மியூசிக்கை பால் மரியாவிடம் இருந்து உருவி இருக்கிறார் பின்னணி இசையில் பிரமாண்டம் தெரிகிறதே தவிர ஜீவன் இல்லை.
வசனத்தின் மூலமாவது காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருப்பார்கள் என்று பார்த்தால் வசனகர்த்தா எஸ்..ராமகிருஷ்ணன் உரையாடலுக்கும், வியாக்யானத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் கேரக்டர்களை எல்லாம் பேசுவதற்கு பதில் பிதற்ற விட்டிருக்கிறார். பாத்திரங்களில் உணர்வையோ சூழலின் தன்மையையோ ஒரு இடத்தில் கூட வெளிப்படுத்தாத உப்பு சப்பில்லாத வசனங்கள்.
இவ்வளவு அலங்கோலங்களுக்கு மத்தியிலும் இயக்குனர் ஜீவாவின் மறைவால் பாதியின் நின்ற படத்தை அந்த தொய்வு தெரியாமல் எடுத்து முடித்திருக்கும் அனீஸ் மற்றும் மணிகண்டனின் சென்சிபிள் அப்ரோச், பாராட்டுக்குறியது.
மற்றபடி தாம் தூம் ஜெயம்ரவியிடமிருந்து ஜெயத்தை பறித்து கொண்டதோடு பிழைத்தோம் என்று ஓட வைக்கிறது.
- பட காட்சிகள் -
- குமுதம் விமர்சன குழு -
தாம் தூம்
மொழி தெரியாத தேசத்தில் உயிர் பிறைக்க ஓடும் தமிழ் இளைஞனின் தடத, தாம் தூம்!
டாக்டர் ஜெயம் ரவிக்கு, காதலி கங்கனா ரணவத்துடன் திருமணம் நிச்சயமாகிறது. உலக மருத்துவர்களின் கலந்தாய்வுக்காக ரஷ்யா கிளம்புகிறார் ரவி. போன இடத்தில் மாடல் பெண் மரியாவோடு ஜிலுஜிலு நட்பு, மரியா மர்மமாகக் கொலையாகிறார். கொலைப் பழி ரவி மீது!
போலீஸ் கஸ்டடியிலிரந்து தப்பிக்கும் ரவியை, போட்டுத்தள்ளத் துரத்துகிறது ஒரு மர்ம கும்பல். உயிர் தப்பினாரா, இந்தியா திரும்பினாரா, காதலியைக் கைப்பிடித்தாரா? விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்!
இயற்கை எய்திய இயக்குநர் கம் ஒளிப்பதிவாளர் ஜீவாவின் இறுதி உழைப்பு!
ஒரு வாரத்துக்குள் திரும்ப வேண்டிய கல்யாண மாப்பிள்ளை, கெடுபிடி ரஷ்யாவில் கொலைக் குற்றவாளி ஆகிற ஒன் லைன், பிரமாத ட்விஸ்ட்தான். ஆரம்பக் காட்சிகளில் ரஷ்ய போலீஸிடம் மாட்டிக் கொண்டு ரவிபடும் அவஸ்தைகள் பதறவைக்கின்றன. பின்னர் அவர்களுக்கே ரவி, காட்சிக்குக் காட்சி தண்ணி காட்டுவது மொத்தப் படத்தையும் உதறவைக்கிறது.
திகுதகுவெனத் தீப்பிடித்திருக்க வேண்டிய திரைக்கதை, திருப்பங்கள் எதுவும் இல்லாததால் பலவீனமாகிவிடுகிறது. எடிட்டிங்கில் தள்ளாடும் திரைக்கதையல் தெரிகிறது ஜீவாவின் இழப்பு! கிராமத்துக் காட்சிகளில் கங்கனாவின் ஜாலி லூட்டிகள் ரசிக்கவைத்தாலும், அவரது காஸ்ட்யூமில் ஆரம்பித்து ராஜஸ்தான் பக்கத்துக் கிராமம் மாதிரியான செட்டிங் வரை அத்தனையும் எக்ஸ்ட்ரா சதை.
ரணகள சேஸிங்குக்கு ஏற்ற ரஃப் அண்ட் டஃப் உடம்புடன் வளைய வருகிறார் ரவி. கண்கள் மினுங்கக் காதலிக்கும்போது மட்டும் ரவி, நடிப்பில் நலம்.
கிராமத்துக் காதலியாக, கங்கனா ரணவத் வெடவெட உடம்பும் வடக்கத்தி முகமுமாக நம்ம பக்கத்துப் பொண்ணு சாயலே இல்லை. ரஷ்ய நாட்டு வக்கீலாக வரும் லட்சுமி ராய், ஓவர்கோட் சகிதம் ரவிக்கு மொழிபெயர்க்கிறார். ஒருதலையாகக் காதலிக்கிறார் அவ்வளவே!
ஜெயம் ரவிக்கு உதவி செய்ய வரும் இந்தியத் தூதரக அதிகாரி ஜெயராம்தான் படத்தின் ஹேண்ட்சம். வில்லன் என்று எளிதில் யூகிக்க முடிகிற அளவுக்கே இருக்கிறது திரைக்கதை.
ஒளிப்பதிவும் இசையும்தான் படத்தின் இருபெரும் பலம். ஹாரிஸ் ஜெயராஜின் இளமை துள்ளும் இசையில் அத்தனை பாடல்களும் ஆஹா ரகம். ஓவிய ரசனையுடன் ஈர்க்கும் காட்சிகள், அடடா... ஜீவா இனி இல்லையே! என்ற ஏக்கத்தை உண்டாக்குகின்றன.
வசனம் எஸ்.ராமகிருஷ்ணனாமே... என்ன ஆச்சு சார்?
பரபரவென பற்றிக் கொள்ள வேண்டிய சேஸிங்ஸீன்களே படத்துக்கு வேகத் தடைகளாக மாறியதுதான் பலவீனம். தாம் தூமென்று வெடித்திருக்க வேண்டிய ஆக்ஷன் வெடி. புஸ்வாணமாகப் பூச்சொரிகிறது!
- விகடன் விமர்சன குழு -
|