* கமலின் எண்ணமும், த்ரிஷாவின் யோசனையும் * மிட்டாய் படத்தில் கார்ட்டூன் சித்திரங்கள் * கேரள வரவு மித்ராவுக்கு லவ் ஹிஸ்ட்ரி ஸ்டார்ட் * அமீரிடம் விளக்கம் கேட்கும் கணித மேதை * வாரணம் ஆயிரம்- கொடைக்கானல் படங்களின் விமர்சனம் * கடும் உடற்பயிற்சி செய்கிறார் சினேகா * ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்கி நடிக்கும் நடிகர் * ஒரே படத்துக்கு 3 இசையமைப்பாளர்களின் இசை * ரவீனா டாண்டனின் சமூக அக்கறை * இசையமைப்பாளர்கள் மாற்றப்படும் மர்மம் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * சசிக்களின் விநியோக டீலிங் * கின்னசுக்கு போகும் பாபுகணேஷ் * திருமணம் பற்றி சல்மான் கருத்து * ஷில்பா ஷெட்டி 3 மாதம் ஓய்வு * இந்தி கஜினிக்கு 1250 பிரிண்ட் * மாடர்ன் பெண்களுக்கு சின்னத்திரை நித்யா அட்வைஸ் * குவாண்டம் ஆப் சோலஸ் பட விமர்சனம் * மாலையானால் மலையேறும் நடிகைகள் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * வாஸ்து‌‌வை நம்பி வீட்டை விற்கும் லாரா * கமலின் முன்னாள் மனைவி நடிக்கும் படம் * கவுதமிக்கு கமல் கொடுத்த புரமோஷன் : சினி வதந்தி * டாப் 5 படங்களின் விமர்சனம் * நடிகைகளின் எக்ஸ்குளூசிவ் வால்பேப்பர்கள் * புத்தம் புதிய படங்களின் ஸ்டில்கள் *  
 
 
 
 
 
   
 
 
 

குசேலன்

நட்பின் பெருமையை பறைசாற்றும் வகையில் வந்திருக்கும் இன்னொரு படம் குசேலன். மலையாளத்தில் கதபறயும் போள் என்ற பெயரில் வெளியான படத்தின் தமிழ் ரீமேக்தான் குசேலன். மலையாளத்தில் மம்முட்டி நடித்த கேரக்டரில் தமிழில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் 60 நிமிடங்கள் திரையில் தோன்றுவது தமிழ் குசேலனின் சிறப்பு. கதையை அழகாக மெருகேற்றி செதுக்கியுள்ள டைரக்டர் பி.வாசு, ரஜினியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். மலையூர் கிராமத்தில் முடி திருத்தும் கடை நடத்துகிறார் பசுபதி. அவரது காதல் மனைவி மீனா மற்றும் 3 குழந்தைகளுடன் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.

படம் தொடங்கி சுமார் அரை மணி நேரம் வரை பசுபதியின் பாத்திரம் மின்னுகிறது. அந்த ஊருக்கு சினிமா சூட்டிங்கிற்காக வருகிறார் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த. சூப்பர் ஸ்டார் நடிகரை பார்க்க ஊரே திரளுகிறது. ரஜினியின் கடைக்கண் பார்வை தங்கள் மீது பட்டு விடாதா என்று ரசிகர்கள் ஏங்குகிறார்கள். ஆனால் பால்யகால நண்பரான பசுபதி மட்டும் ரஜினியை பார்க்க தயங்குகிறார். ஊரில் உள்ள பலரும் அவரிடம், சூப்பர் ஸ்டாரிடம் போய் உதவி கேள் என்று சொல்கிறார்கள். 25 வருஷத்துக்கு பிறகு அவரை பார்த்தால் என்னையெல்லாம் அவருக்கு ஞாபகம் இருக்குமா? என்று தயங்கும் பசுபதி கடைசியில் சூப்பர் ஸ்டாரை எப்படி சந்திக்கிறார்? சூப்பர் ஸடார் தனது பால்ய கால் சினேகிதனை ஞாபகம் வைத்திருந்தாரா, அவருக்கு உதவி செய்தாரா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

படத்தில் பசுபதியின் நடிப்பை பாராட்டுவதா அல்லது ரஜினியின் சூப்பர் ஸ்டைல் நடிப்பை பாராட்டுவதா என்று கேட்கும் அளவுக்கு இருவருமே நடிப்பில் வெளுத்து கட்டியிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் நடிகர் அசோக்குமாராக வரும் ரஜினிகாந்த் படம் தொடங்கி 30 நிமிடங்களுக்கு பிறகு வந்தாலும், கடைசி வரை அவ்வப்போது தோன்றி குசேலனில் மட்டுமல்ல குசேலன் படத்தை பார்க்கும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்துகிறார். ரசிகர்களை சந்திக்கும் காட்சிகளிலும், சூட்டிங் ஸ்பாட் காட்சிகளிலும் இயல்பாக நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட இயல்பாகவே இருந்திருக்கிறார் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். பால்யகால நண்பர் பசுபதியை பார்த்து கட்டியணைக்கும் காட்சி உருக்கம். அவ்வப்போது ரசிகர்களை பார்த்து தலைக்கு மேல் கைகளை உயர்த்தி கும்பிடு போடும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. நயன்தாராவுடன் தோன்றும் பாடல்காட்சிகளில் சிவாஜி படத்தில் பார்த்த ரஜினியைத்தான் பார்க்க முடிகிறது.

கெட்டப்களில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். பசுபதியின் உருக்கமான நடிப்பு முத்திரை பதிக்கிறது. படம் தொடங்கியது முதல் கடைசி வரை பரிதாப தோற்றத்துடன் தோன்றும் பசுபதி நடிப்பில் இன்னும் தேறிவிட்டார். அதிலும் நட்பு என்பது பணத்துக்காக அல்ல என்று நட்பை போற்றும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. பசுபதிக்கு போட்டியாக சலூன் நடத்தும் கேரக்டரில் வடிவேலு வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். ஊருக்குள் அதிகமாக முடி வளர்த்திருப்பவர்களையெல்லாம் கடத்தி வந்து, முடி வெட்டும் காட்சிகள் ரசித்து சிரிக்க வைக்கின்றன. சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து போட்டோ எடுத்தால்தான் வீட்டுக்குள் வரவேண்டும் என்று சொல்லி மனைவி சோனா விரட்டியடிக்க... வடிவேலுவோ... சூப்பர் ஸ்டாரை பார்க்க செய்யும் முயற்சிகள் கலகல காமெடி. ஆனால் இரட்டை மீசையை முறுக்கி விட்டு, அவர் செய்யும் அலம்பல்கள் சில காட்சிகளில் சிரிப்புக்கு பதிலாக கோபத்தை வரவழைக்கிறது. வடிவேலுவின் மனைவியாக வரும் சோனா கவர்ச்சி அல்லது காமெடியில் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சமையல்காரராக வரும் சந்தானம், தான்தான் தயாரிப்பாளர் என்று சொல்லி ரசிகர்களிடம் பந்தா காட்டும் காட்சிகளில் சிரிப்பு அலை. மீனா நடிப்பில் மட்டுமல்லாமல் அழகிலும் மெருகு கூடியிருக்கிறார். கஷ்டப்படும் கணவனுக்கு நல்ல துணையாக இருந்து ஆலோசனை சொல்வதும், கணவரை அனுசரித்து செல்லும் காட்சிகளும் பெண்களை கவரும். நயன்தாராவை கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள். உதவி இயக்குனராக 2 காட்சிகளில் மட்டுமே வந்து செல்லும் மம்தா மோகன்தாசை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம். ஊர் பெரியவராக வரும் லிவிங்ஸ்டன் தோன்றும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பும் தொற்றிக் கொள்கிறது. ரஜினியை வைத்து படம் எடுத்து பெரிய ஆளாகி விடலாம் என்று கூட இருப்பவர்கள் உசுப்பி விட... லிவிங்ஸ்டனும், பசுபதியிடம் சென்று, சூப்பர்ஸ்டாரிடம் ரெகமண்ட் செய் என்று கெஞ்சும் காட்சிகளிலும் சிரிக்க வைத்திருக்கிறார். நடிகர் பிரபு பாதுகாப்பு அதிகாரியாக வந்து அட்டன்டென்ஸ் போடுகிறார். ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் இனிமை. சினிமா சினிமா பாடலில் அர்விந்த் கிருஷ்ணாவின் கேமரா நன்றாகவே சுழன்றிருக்கிறது.

குசேலன் : இயல்பான கதை

- பட காட்சிகள் -

- தினமலர் விமர்சன குழு -

ரஜினிக்கு முதலில் கை குலுக்க வேண்டும். ஆக்ஷன், அதிரடி, மசாலா படங்களில் இருந்து விலகி கதைக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் நடித்ததற்கு. அதை ரசிக்கும்படி செய்ததற்கு கூடவே ஒரு கொசுறு கை குலுக்கல். மலையாளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கத பறயும்போள் கதை. இரண்டு நண்பர்கள். ஒருவன் சினிமாவில் சிறந்து சூப்பர் ஸ்டாராகிறான். இன்னொருவன் உடைந்து போன நாற்காலியுடன் முடி திருத்தகம் நடத்துகிறான். இருவரும் முப்பது வருடங்களுக்கு பிறகு சந்திக்கிறார்கள். இந்த சின்னப் பொறியை வைத்து திரைக்கதை செய்திருக்கிறார்கள். ரஜினிக்காக அதிகம் மாற்றாமல். சூப்பர் ஸ்டாரை சூப்பர் ஸ்டாராகவே பார்ப்பது தமிழுக்குப் புதுசு. ரஜினியும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார். அத்துடன் ரசிகர்களின் ஆர்வமான பல நாள் கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கிறார்.

* அரசியலில் சேருவேன் என்று சொல்லிவிட்டு சும்மா டபாய்க்கிறீர்களே ஏன்? * நீங்கள், கமல் எல்லாம் ரொம்ப பந்தா பண்ணுகிறீர்களே? * அடிக்கடி இமயமலை போகிறீர்களே. இங்கே இல்லாதது எது அங்கே உங்களுக்கு கிடைக்கிறது? இப்படி சுவாரஸ்யமான கேள்விகள். பதில்களை வெள்ளித்திரையில் காண்க. ரஜினி அழுவதைப் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டன. ஆறிலிருந்து அறுபது வரையை ஞாபகப்படுத்தும் நடிப்புத்திறமை இத்தனை மசாலா பார்முலாக்களை தாண்டி வந்தும் அவரிடம் அப்படி இருக்கிறது. கடைசி அரை மணி நேரம் அவர் கண்கலங்கும்போது நம் கண்களும் கலங்குகின்றன. ரஜினியின் படத்தில் அவரைத் தவிர வேறு யாரும் கண்ணில் தெரியமாட்டார்கள். ஆனால் அதையும் மீறி மனதோடு, மண் மணத்தோடு ஒட்டிக் கொள்கிறார் பசுபதி. சூப்பர் ஸ்டாரின் நண்பர் என்று மற்றவரெல்லாம் புகழும்போது வெட்கமும், ஏக்கமும் கலந்து இயலாமையாய்ப் பார்க்கும் அவரது அழுத்தமான பார்வைக்கு ஆயிரம் பாராட்டுதல்களைத் தரலாம்.

நயன்தாரா நெய்ந்தாரா. வழுக்கும் உடலில் வழுக்கும் உடைகளில் இதயங்களை வழுக்கி விழ வைக்கிறார். அவர் நடை, உடை, பாவனைகளைப் பார்க்கும்போது கூடிய விரைவில் ஹாலிவுட் படங்களில் அரங்கேறுவார் என்று பட்சி சொல்லுகிறது. மீனாவைப் பார்த்து எத்தனை நாளாயிற்று. அப்படியே இருக்கீங்க அம்மணி! கஸ்டமர் கிடைக்காததால், முடி வளர்ந்தவர்களை கடத்திக் கொண்டு வந்து கட்டிங் செய்யும் பார்பராக வந்து கலகலக்க வைக்கிறார் வடிவேலு. அவரது மனைவியாக வரும் சோனா... செமை சால்னா! முதல் பாதியில் ரஜினி எப்போது வருவார் என்று பார்த்துப் பார்த்து கொஞ்சம் அலுப்பு வருவது திரைக்கதையின் பலவீனம். ஆனால் அந்தக் குறையை கடைசி அரைமணி நேரத்தில் மனதைக் கரைத்து மறக்கடித்து விடுகிறார் இயக்குனர். ரஜினி போன்ற ஆக்ஷன் சூப்பர் ஸ்டாரை வைத்துக் கொண்டு, இது போன்ற அழுத்தமான படங்களை எடுப்பது சற்று சிரமமான காரியம். கெட்டியாகச் செய்திருக்கிறார் பி.வாசு. சபாஷ்.

லிவிங்ஸ்டன், சின்னி ஜெயந்த், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், டி.பி.கஜேந்திரன் என்று காமெடி பட்டாளமே களம் இறங்கி சிரிப்பு மூட்ட முயற்சிக்கிறது. ஜி.வி.பிரகாஷின் இசையில் தலைவா பாடல் தாளம் போட வைக்கிறது. வாலியின் வரிகள் ரஜினி ரசிகர்களின் தேசியகீதமாக கொஞ்ச காலத்திற்கு இருக்கும். இவர் வாத்தியங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. அவருக்கும் கேட்பவர்களின் காதுகளுக்கம். அரவிந்த் கிருஷ்ணாவின் காமிரா குசேலனை குபேரனாக்கியிருக்கிறது. தோட்டா தரணியின் செட்டிங்ஸும் பிரமாண்டம். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஒவ்வொரு ரசிகரின் வீட்டுக்குள்ளும் நுழைவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது படம். ரஜினி ரசிகர்களுக்கு வேறு என்ன வேண்டும்? குசேலன் படத்தை பார்த்து விட்டு ரஜினி, டைரக்டர் பி.வாசுவிடம் சொன்ன கமெண்ட் இதுதான். படம் 25 வாரம் ஓடும். உண்மைதான் ரஜினி ரசிகர்கள் ஓட வைத்து விடுவார்கள்.

- குமுதம் விமர்சன குழு -

பால்ய நண்பனைப் பார்க்கத் தவிக்கும் குசேலகிருஷ்ணனின் கதை!
சவரத் தொழிலாளியான ஏழை பசுபதியும், புகழின் உச்சியில் ஊஞ்சலாடும் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினியும் பால்யகால நண்பர்கள். தன் ஊ:ருக்கே படப்பிடிப்புக்காக வருகை தரும் ரஜினியை, வறுமையினாலும், தாழ்வு மனப்பான்மையாலும் சந்திக்கத் தயங்குகிறார் பசுபதி. ரஜினியைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலைகள் அவரை நெருக்க, அதற்கான முயற்சிகள் ஃப்ளாப் ஆகின்றன. சந்தித்தாரா என்பதே நட்பில் நனைத்தெடுத்த க்ளைமாக்ஸ்!

மலையாளத்தில் வந்த "கத றபயும் போள்' கதையை கமர்ஷியல் கைகளால் ஆரத் தழுவியிருக்கிறார் பி.வாசு. அசோக்குமார் என்ற சூப்பர் ஸ்டாராகவே ரஜினி வருகிறார் என்பதுதான் படத்தின் மெகா ஹைலைட். ஷூட்டிங்கில் அவரைப் பார்க்கத் திரள்கிற கூட்டம் செய்கிற ரகளையில் ஆரம்பித்து ஒரிஜினலான ரஜினியின் கேரக்டரைப்பற்றி அவரை விட்டே பேசவைத்தது வரை ஐடியாக்கள் ஓ.கே.தான். "தலைவா - நயன்தாராவையே பார்க்காத - எங்களையும் பாரு தலைவா' என ரசிகர்கள் கத்த, படு ஸ்டைலாகத் திரும்பி ரஜினி செய்கிற நெளிசலான மேனரிஸங்கள் ஸ்டார் அப்ளாஸ். திரையில் இத்தனை அமைதியான ரஜினியை பார்த்து எவ்வளவு நாளாச்சு!

வறுமையில் வாடும் பசுபதி எதற்கெடுத்தாலும் பயந்து குறுகி ஓடுகிற காட்சிகள் கதைக்கான டச்சில் பள்ளிக்கூட மேடைக் காட்சி மட்டுமே படத்தின் பெரிய ப்ளஸ். இழந்த நட்பின் வலியை ரஜினி குரல் உடைந்து கண்ணீர் வழியச் சொல்லும்போது தியேட்டரே கலங்குகிறது!

ஆனால், சூப்பர் ஸ்டாராக ரஜினியே கிடைத்திருக்கிறார் என்கிற தைரியத்திலேயே பி.வாசு குஷியாகி முழு திருப்தி அடைந்துவிட்டார் போலும்! எக்கச்சக்க லாஜிக் மிஸ்ஸிங் படம் முழுக்க "குசேலன்' பட யூனிட் என்கிற பெயர் தென்படுகிறது. ஆனால் ஒரு ஸீனில், அண்ணாமலை பார்ட் 2, கொஞ்ச நேரம் கழித்து "சந்திரமுகி பார்ட் 2' என ரீலுக்கு ரீல் ஓட்டுகிறார்கள் ஜிகினா ஃபிலிம்.

ரியல் சூப்பர் ஸ்டாராக வரும் ரஜினி, ஓஷோ புக் படிக்கிறார். ஜப்பான் ரசிகர்களைச் சந்தித்துப் பேசுகிறார். தூங்கவிடாமல் டார்ச்சர் செய்ததற்காகவே, நரிக்குறவர்களைக் கூப்பிட்டுப் பேசுகிறார். மற்றபடி சாதாரண ரசிகர்களுக்கு டாட்டா காட்டுவதற்கே யோசிக்கிறார். ரசிகர்களிடம் இருந்து அந்நியப்பட்டவராக அவரைக் காட்டியிருப்பதில் ஆரம்பிக்கிறது மைனஸ். இது போதாதென்று ரஜினியின் இமேஜைக் கண்ட மேனிக்குப் பொலி போட்டுப் பொங்கல் வைத்திருக்கிறார்கள். ஆர்.சுந்தரராஜன் பர்சனலாக வீசும் கேள்விகளுக்கு ரஜினி சொல்லும் பதில்கள், வெண்டைக்காய் பந்தலில் வேப்பெண்ணெய் மழை பெய்த' மாதிரி சூப்பர் மழுப்பல்... சுத்த சொதப்பல்.

அதெல்லாம் வசனகர்த்தா எழுதிக் கொடுத்தது. டைரக்டர்ஸ் உருவாக்கினது. அதை நான் பேசினதா நினைச்சா, அது உங்க தப்பு! என்று இதுவரை தான் அடித்த வரலாற்றுப் புகழ் "பன்ச்"கள் பற்றி விளக்கம் சொல்லி ரசிகர்களுக்கு ஞானோதயம் ஏற்படுத்தியதற்காக ரஜினியைப் பாராட்டலாம்!

பசுபதிக்கும் ரஜினிக்கும் இடையேயான நட்பின் அழுத்தத்தைப் புரியவைக்க படத்தில் க்ளைமாக்ஸ் வரையில் ஒரு சாம்பிள்கூட இல்லாததால் ஊர் மக்களோடு சேர்ந்து நமக்கும் பசுபதி புருடா விடுகிறாரோ எனத் தோன்றுகிறது. பசுபதியின் வறுமையையும் இயல்பாகச் சொல்லாததால், கதையோடு நம்மால் ஒன்ற முடியவில்லை. ஏழை பசுபதியின் மனைவி மீனா, அபார்ட்மென்ட் ஆன்ட்டி மாதிரி இருக்கிறார். குழந்தைகளும், சர்ச் பார்க்கில் படிக்கிற தோரணையில் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ஆர்வத்தில் கன்னியாஸ்திரீகள் சீரியல் வில்லிகள் மாதிரி நடந்து கொள்வது, பக்கத்து வீட்டு முஸ்லிம் குடும்பம் மட்டன் பிரியாணி தந்து ஐஸ் வைப்பது என்பது மாதிரி நிறைய இடங்கள், அமெச்சூர் டிராமா! அல்லது, பாத்திரப் படைப்புகள் காமெடியா சீரியஸா என்று புரியவைப்பதில் ஏற்பட்ட சறுக்கல்.

படத்தின் நிஜமான ஹீரோ பசுபதி. அந்த பாவமான பார்வை காரணமாக "வெயில்' பசுபதி இடைஇடையே ஞாபகத்துக்கு வந்தாலும் தாழ்வு மனப்பான்மையோடு குழந்தைகளைக் கூட எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதிலும் க்ளைமாக்ஸில் மேடையில் பேசும் ரஜினிக்கு நிகரான உணர்ச்சிக் கொந்தளிப்போடு உருகுவதிலும் அத்தனை நெகிழ்ச்சி.

நயனுக்கு ஸோலோ சாங் வைக்கப் பிடிச்சாங்களே ஒரு சிச்சுவேஷன்... சும்மா கணக்கு காட்டத்தான் உதவி இருக்கிறது. ரஜினியைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சியில் அரற்றும் லெவலில், வடிவேலுவின் காமெடி ஏரியா கச்சிதம். ஒளிந்து நயன்தாராவை ரசிக்கும் காட்சியில் கேமராவின் கோணம் காமெடி ரசத்தை காமரசமாக்குவதுதான் உறுத்தல். லிவிங்ஸ்டன் குரூப், சந்தானம் அடிக்கிற லூட்டிகளில் ஆங்காங்கே கிச்சுகிச்சு. பசுபதியின் வீட்டில் தொடங்கி ரஜினியின் கெஸ்ட் ஹவுஸ் வரை படம் முழுக்க செயற்கை செட்டுகள்... பத்தாக்குறைக்கு லிவிங்ஸ்டன் குரூப்பில் ஆரம்பித்து பல பாத்திரங்களில் எக்கச்சக்க செயற்கை.

ஓம் சாரிரே...', "செல்லம்' பாடல்களில் ஜி.வி.ப்ரகாஷ்குமார் ஹாய் சொல்கிறார். பின்னணி இசையில் அவர் தேற்றிக் கொள்ள நிறைய இருக்கிறது. பசுபதியின் வறுமையைக் காட்டுவதிலும், ரஜினியின் செழுமையைக் காட்டுவதிலும் அரவிந்த் கிருஷ்ணாவின் கேமரா அத்தனை அழகு. அதுவும், அவுட்டோர் இடங்களில் கலர் மேஜிக் செய்திருக்கிறார்.

ரஜினியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்கிற குழப்பத்தில் கதையின் இயல்பைத் தொலைத்து விட்டார்கள். அதனால் படம், கம்பீரமான யானையைக் கடைவீதிக்கு அழைத்துச் சென்ற கதையாகிவிட்டது!

- விகடன் விமர்சன குழு -

வில்லனோடு நேருக்கு நேர் நின்று சவால் விடாத, அரசியல் வசனங்களை அள்ளி வீசாத, ஒரே பாட்டில் வாழ்க்கையின் உச்சத்துக்கு செல்லாத ரஜினிகாந்த்தை திரையில் பார்ப்பது அத்தனை சுலபமில்லை. ஆனால், அப்படித்தான் குசேலனில் இருக்கிறார் ரஜினி. இயக்குநர் பி.வாசு, இதற்காக கதாசிரியர் சீனிவாசனுக்கு நன்றி சொல்லியே தீர வேண்டும்.

கதை? கிட்டத்தட்ட கிருஷ்ணர்-குசேலர் கதை தான். பிரிந்த நண்பர்கள் மீண்டும் இணைவதை காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

ஏழை நண்பராக, முடி திருத்தும் தொழில் செய்யும் பசுபதி, நடிப்பில் நின்று, நிதானமாகவே விளையாடியிருக்கிறார். தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தும் போது, அவருடைய அபிநயங்களால் அசத்துகிறார். க்ளைமாக்ஸில் ரஜினிக்காக உருகும் காட்சியில் கலங்கடித்து விடுகிறார்.

கதையிலும் சூப்பர் ஸ்டாராகவே வரும் ரஜினிகாந்த், தமக்கு கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் சிந்தாமல், சிதறாமல் பயன்படுத்தியிருக்கிறார். ரசிகர்களோடு அளவாக அளவளாவுகிறார். தம்மை சந்திக்க வரும் நபர்களுடன் அடக்கமாக உரையாடுகிறார். தம்மிடம் வம்பிழுக்கும் வகையில் கேள்வி கேட்டு இம்சிக்கும் சுந்தர் ராஜனுக்கு, நறுக் பதில்களை அளித்து, கைத்தட்டல்களை அள்ளுகிறார். க்ளைமாக்ஸில் கண்ணீரை கசிய வைத்து, ரசிகர்களை உருக வைத்து விடுகிறார் சூப்பர் ஸ்டார்.

இத்தனை ஆண்டு காலத்தில் இரண்டு நண்பர்களுக்கும் இடையே குறைந்த பட்சம் கடித போக்குவரத்து கூடவா இருந்திருக்காது?

பசுபதிக்கும், ரஜினிக்கும் இருந்த பால்ய காலத்து நட்பை விளக்குவதற்கு ஒரு காட்சி கூடவா கிடைக்கவில்லை?

சொல்லம்மா பாடலிலும் க்ளைமாக்ஸ் ரீ ரெக்கார்டிங்கிலும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிகிறார். தோட்டாதரணி கை வண்ணத்தில் செட்டிங் கம்பீரம். தொழில் நுட்பத்தில் அரவிந்த் கிருஷ்ணாவின் கேமராவுக்கு முதலிடம். படத்தை துணிச்சலாக எடுத்து முடித்த பி.வாசுவுக்கு பாராட்டு. ஆனால் காமெடியிலும், கவர்ச்சியிலும் சமரசம் செய்ய முயன்றமைக்கு ஒரு கொட்டு.

- கல்கி விமர்சன குழு -

 
 
 
 
   
   
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.