* கமலின் எண்ணமும், த்ரிஷாவின் யோசனையும் * மிட்டாய் படத்தில் கார்ட்டூன் சித்திரங்கள் * கேரள வரவு மித்ராவுக்கு லவ் ஹிஸ்ட்ரி ஸ்டார்ட் * அமீரிடம் விளக்கம் கேட்கும் கணித மேதை * வாரணம் ஆயிரம்- கொடைக்கானல் படங்களின் விமர்சனம் * கடும் உடற்பயிற்சி செய்கிறார் சினேகா * ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்கி நடிக்கும் நடிகர் * ஒரே படத்துக்கு 3 இசையமைப்பாளர்களின் இசை * ரவீனா டாண்டனின் சமூக அக்கறை * இசையமைப்பாளர்கள் மாற்றப்படும் மர்மம் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * சசிக்களின் விநியோக டீலிங் * கின்னசுக்கு போகும் பாபுகணேஷ் * திருமணம் பற்றி சல்மான் கருத்து * ஷில்பா ஷெட்டி 3 மாதம் ஓய்வு * இந்தி கஜினிக்கு 1250 பிரிண்ட் * மாடர்ன் பெண்களுக்கு சின்னத்திரை நித்யா அட்வைஸ் * குவாண்டம் ஆப் சோலஸ் பட விமர்சனம் * மாலையானால் மலையேறும் நடிகைகள் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * வாஸ்து‌‌வை நம்பி வீட்டை விற்கும் லாரா * கமலின் முன்னாள் மனைவி நடிக்கும் படம் * கவுதமிக்கு கமல் கொடுத்த புரமோஷன் : சினி வதந்தி * டாப் 5 படங்களின் விமர்சனம் * நடிகைகளின் எக்ஸ்குளூசிவ் வால்பேப்பர்கள் * புத்தம் புதிய படங்களின் ஸ்டில்கள் *  
 
 
 
 
 
   
 
 
 

சத்யம் விமர்சனம்

காக்க காக்க பாணியில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக துணிச்சலான போலீஸ் அதிகாரியை காட்டியிருக்கும் படம் சத்யம். கொஞ்சம் அரசியலையும், ரவுடியிசத்தையும் கலக்கி மசாலாவாக படைத்திருக்கிறார் இயக்குனர் ஏ.ராஜசேகர். மிடுக்கான துடிப்பு மிக்க இளம் போலீஸ் அதிகாரியாக வருகிறார் விஷால். தப்பு செய்கிறவர்களை பின்னியெடுத்து பிரபலமாகிறார்.

அந்த நேரத்தில் முதலமைச்சர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர... முதலமைச்சர் பதவியை கைப்பற்ற கோட்டா சீனிவாசராவ் மற்றும் 3 அமைச்சர்கள் முயற்சிக்கிறார்கள். இந்த போட்டியில் மற்ற 3 மந்திரிகளையும் போட்டுத் தள்ளுமாறு சீனிவாசராவ் தனது அடியாட்களுக்கு உத்தரவிடுகிறார். 3 மந்திரிகளும் கொல்லப்படும் நிலையில் கொன்றது வேறொரு நபர் என்று தெரியவருகிறது. 3 மந்திரிகளை கொன்றது யார்? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் சீனிவாசராவ் விழிக்கிறார். கொலையாளிகளை கண்டுபிடிக்க விஷால் நியமிக்கப்படுகிறார். படத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. உண்மையான கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படும் நேரத்தில், குழந்தைகள் சாப்பிடும் ஐஸ்க்ரீமில் போதை மருந்தை கலக்கும் கும்பல் சிக்குகிறது. இந்த கும்பலுக்கெல்லாம் தலைவன் மந்திரி சீனிவாசராவ் என்று தெரியவர.. கொதித்தெழும் விஷால், அவரை சட்டத்தின் முன் நிறுத்த திட்டமிடுகிறார்.

விஷால் விரிக்கும் ‌சட்ட வலையில் சிக்காமல் தப்பிக்கும் சீனிவாசராவ், விஷால் மீது கொலைப்பழி சுமத்தி ஜெயிலுக்குள் தள்ளுகிறார். போலீஸ் நுணுக்கத்துடன் ஜெயிலில் இருந்து தப்பிக்கும் விஷால் சமூக விரோதமாக செயல்படும் மந்திரியை எப்படி பழிவாங்குகிறார் என்பதே மீதி கதை. விஷாலுக்கு அதிரடி ஆக்ஷன் கேரக்டரில் நடிக்க சொல்லித்தர வேண்டுமா என்ன? சிக்ஸ் பேக் உடலுடன் தோன்றி மிரட்டியிருக்கிறார். நயன்தாராவுடன் காதல் காட்சியில் தோன்றும் போது காதலனாகவும், குழந்தைகளுடன் குழந்தையாகவும், போலீஸ் நிலையத்தில் மிடுக்கான போலீசாகவும், ரவுடிகளை பந்தாடும் காட்சிகளில் ரவுடிகளுக்கெல்லாம் ரவுடியாகவும் பல பரிணாமங்களில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்‌கிறார்.

குறிப்பாக கொலைகாரன் பயன்படுத்தும் ஊசி, மாம்பலம் ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கியவன் என கிடைத்தவைகளையெல்லாம் துப்புக்களாக்கி கொலையாளிகளை சுற்றி வளைக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது. குசேலன் படத்தி்ல் எப்படி நயன்தாரா கவர்ச்சிக்கு மட்டும் பயன்பட்டாரோ... அதே நிலைதான் இந்த படத்திலும். சிக்ஸ்பேக் உடல் கட்டுடன் விஷால் தோன்றும் பாடல் காட்சியில் அவருக்கு நிகராக சிக்கென்ற உடல்கட்டுடன் கிளுகிளுப்பான ஆட்டம் போடும் நயன்தாரா கிளுகிளுக்க வைக்கிறார். சின்னஞ்சிறு வாண்டுகளுடன், நயன்தாரா நடத்தும் காமெடி கச்சேரி ஆறுதல் அளிக்கிறது. ஆர்.டி.ராஜசேகரின் கேமரா சண்டைக்காட்சிகளை கண்முன்னே நிறுத்துகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையை இன்னும் மெருகேற்றியிருக்கலாம். ஆக்ஷனில் செலுத்திய கவனத்தில் கொஞ்சத்தையாவது திரைக்கதையிலும் செலுத்தியிருந்தால் சத்யம் சக்கை போடு போட்டிருக்கும்.

சத்யம் - ஆக்ஷன் அவதாரம்

- பட காட்சிகள் -

- தினமலர் விமர்சன குழு -

சத்யம்

காக்கிச் சட்டைக்கு கவுரவம் சேர்க்கும் கதை. ஆனால் ஹீரோ விஷாலுக்கு அதிரடி சண்டைக் காட்சிகளையும் நெத்தியடி(?) வசனங்களையும் யோசிப்பதிலேயே இயக்குநர் கவனம் செலுத்தியிருப்பதால், திரைப்படம் திருவிழாவில் தொலைந்த குழந்தை போல் நிற்கிறது.

அஸிஸ்டெண்ட் கமிஷனராக விஷால், போலீஸ் அதிகாரி வேடத்துக்காக சிக்ஸ் அப்ஸ்! உடல் ஏற்றி சினிசியராக உழைத்திருக்கிறார் விழல் நீர்.

"சட்டம்தான் தண்டிக்கணும் சாமிதான் கண்ணக் குத்தணம், சட்டமும் சாமியும் ஒண்ணு. நான் பொறுக்கி இல்ல... போலீஸ் என்ற பஞ்ச் வசனத்தில் தேவையில்லாத சீண்டல் தெரிகிறது. யாரையோ உரசிப் பார்க்கும் வம்பு வருகிறது.

உயர் காவல் அதிகாரிகள் எல்லாம் வாயை மூடிக் கொண்டு வரிசையில் நிற்கும் காட்சிகள் எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் ஏ.சி.பி.யான விஷால் பக்கம் பக்கமாக பேசும் டயலாக் எரிச்சலைக் கிளப்புகிறது. வளைத்து வளைத்து லெக் ஃபைட் செய்ய விஜயகாந்த் இடத்திற்கு விஷால் வந்திருப்பது மகிழ்ச்சி. சண்டையை மட்டுமே படத்துக்கு பிரதானமாக வைத்தது வீழ்ச்சி.

தப்பான அரசியல்வாதிகளை உறுமலுடன் பார்த்து குறி தவறாமல் போட்டுத் தள்ளும் வேஷத்துக்கு உபேந்திரா கச்சிதமாகப் பொருந்துகிறார் கன்னட வரவு, நல்வரவு.

உபேந்திரா செய்யும் கொலைக் காட்சிகள்தான் படத்தை வேறு திசைக்கு நகர்த்துகின்றன. இதை புலனாய்வு செய்யும் போலீஸ் விஷால் வேஷம் போடும் இடம் பொசுக்கென்று உடைந்து விழும் மண்குடம். அமைச்சராக வரும் கோட்டா சீனிவாசராவ் தனக்கு ஒதுக்கிய கோட்டாவில் நடிப்பில் உயர உயரப் பறக்கிறார்.

ஒரு காதல் காட்சி வேண்டுமே என்று நயன்தாராவைப் போட்டு இருக்கிறார்கள். தொலைக்காட்சிப் பத்திரிகையாளரான நயன் புலனாய்வுக்கு ஏதாவது உதவி செய்வார் என்றால், அவரோ அதை விட்டுவிட்டு காதல் மட்டுமே செய்கிறார்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும் ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் படத்தைக் காப்பாற்ற கடைசி வரை போராடிப் பார்த்தாலும் ஹீரோவும் இயக்குநரும் பக்கம் பக்கமாய் வசனம் பேசி அடித்து நொறுக்குவதில் படம் நொறுங்கிவிடுகிறது.

விஜய் இடத்தைப் பிடிக்க முயலும் விஷாலுக்கு பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

குமுதம் ரேட்டிங் : சுமார்

- குமுதம் விமர்சன குழு -

சத்யம் (38/100)

"சட்டம்தான் தண்டிக்கணும், சாமிதான் கண்ணைக் குத்தணும்!" என விஷால் "சிக்ஸ் பேக்"கில் போராடுகிற போலீஸ் கதை!

என் கவுன்ட்டரை எதிர்த்து குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துகிற பொறுப்பான போலீஸ் அதிகாரியாக விஷால் அரசியல் கொலைகள் தமிழ்நாட்டை உலுக்க, குற்றவாளியோ... மாஜி இன்ஸ்பெக்டர் உபேந்திரா. இவரே விஷாலின் நல்ல போலீஸ் கனவுக்கு காட்ஃபாதர். பொன்மொழி சொன்னவரே போட்டுத் தள்ளிய கொலைகாரனாக இருக்க, தடுமாறுகிறார் விஷால்.

தமிழ் சினிமாவின் ஃபேவரைட்டான என் கவுன்ட்டர் போலீஸுக்கு மாற்றாக சத்யம் கதை பிடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ராஜசேகர். "நாம என்ன அரசியல்வாதிகளோட அடியாளா?' என என் கவுன்ட்டரை விஷால் எதிர்க்கும் இடத்தில் கதை புதுசோ? என நிமிர்ந்து உட்காரவைக்கிறார்கள். உடனேயே, நான் பொறுக்கி இல்லை... போலீஸ் என விஷால் பன்ச் அடிப்பது... ஆஹா! ஆரம்பிச்சிட்டாங்கப்பா.

"சத்யம்", சரவெடியாக இல்லாமல் சவசவ வெடியானது ட்ரீட்மென்ட்டில்தான். படம் முழுக்க பேஷன்ட்டாக வலம் வருகிறது திரைக்கதை. கடமை, காதல், பாசம், காமெடி(!) என எல்லாம் கலந்து கட்டிச் சொன்னதில் எக்கச்சக்கக் குழப்பங்கள்.

போலீஸ் ஸ்டோரிக்காக உடலை உருக்கி, மெட்டல் ஸ்ட்ராங்கில் மிரட்டும் விஷாலின் உழைப்புக்கு, சல்யூட். ஆனால், ஓவராக உடம்பை உருக்கியதில் அதிரடிப்படை கான்ஸ்டபிள் மாதிரி வெடவெடவெனத் தெரிகிறார். கருத்து கிளாஸ் எடுத்துக் கபடி ஆடுகிறார். சரமாரி கத்திக்குத்து வாங்கியும் விடாது சண்டை போடுகிறார். துப்பாக்கியால் சுட்டாலும் அடாது வசனம் பேசுகிறார். வேறு என்ன செய்து விஷாலை அடக்குவது என்று வில்லன்களைப் போலவே நமக்கும் தெரியவில்லை. சிக்ஸ் பேக் உடம்பைக் காட்ட ஸீனுக்கு ஒரு முறை சட்டையைக் கழற்றிச் சுழற்றுகிறார்... பார்த்துக்குங்க பாஸ்!

அசிஸ்டென்ட் கமிஷனர் விஷால் மொத்த சென்னைக்கும் இன்சார்ஜ் போல, தப்பு எங்கே நடந்தாலும், "உள்ளேன் ஐயா" சொல்லி உடுக்கை அடிக்கிறார். ஒரு வேளை ஓவர் டியூட்டியோ!

மூணு ஆக்ஷன் காட்சிகளுக்கு ஒரு லவ் ஸீன் என ரிலாக்ஸ் பண்ண நினைத்திருக்கிறார்கள். ஆனால் படம் முழுக்க வரும் காதல், காமெடி ஸீன்கள் எல்லாமே பல படங்களில் பார்த்த ரீ மிக்ஸ் ஞாபகம். கோடம்பாக்கத்தில் உடனடியாகத் தடா போட வேண்டிய இன்னொரு விஷயம். க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோவின் தன்னிலை விளக்கத்தை டி.வி.யில் பார்த்து வைச்சாண்டா ஆப்பு, இது மாதிரி நூறு பேரு வேணும்டா! என பொதுமக்கள் காமென்ட் அடிக்கிற சமாசாரம்.

விஷாலிடம் வம்பு பிடித்து அன்பு வளர்க்கும் ஒரிஜினல் லூஸுப் பெண்ணாக நயன்தாரா. படத்தில் அவருக்கு சிறப்புத் "தோற்றம்"தான். நயனை நம்பி காமெடி ட்ராக் வேறு நடிப்பே வரலை... காமெடி மட்டும் வந்துருமா?' எனச் சவால் விடுகிறார். இப்படி காஸ்ட்லி கிளாமர் ஊறுகாய் ரோல் ரொம்ப நாள் உதவாதுங்கோ!

கன்னட சினிமா இறக்குமதி உபேந்திரா கவனத்தை ஈர்க்கிறார். கோப நடிப்பில் உபேந்திராவிடம் செம துடிப்பு. மியூஸிக் ஹாரிஸ் ஜெயராஜ். "பால் பப்பாளி" பாடல் மட்டும் தேறுகிறது. மற்ற பாடல்கள் ஞாபகத்தில் கொண்டு வர மெமரி ப்ளஸ் மாத்திரைகள் தேவைப்படும். அசத்தலான லொகேஷன்களை கண்ணாடித் துல்லியத்தில் அள்ளி வந்திருக்கும் ஆர்.டி.ராஜசேகரின் கேமராதான் ஆறுதல்!

குறி வைத்து அடிக்காமல் குழப்பி அடித்திருக்கிறார்கள்.

- விகடன் விமர்சன குழு -

சத்யம்

"உயிரும் உறவுகளும் பணயம் வைக்கப்பட்டாலும் உருக்குலைந்து போகாத ஓர் உதவி கமிஷனர்களை நாம் பார்த்திருந்தாலும், இதில் விஷால் காட்டும் முறுக்கு விறுவிறுப்பானது. சினிமாவுக்காக மொட்டைபோடும் அளவுக்கு உழைத்துள்ள அவரின் ஆர்வத்துக்கு சல்யூட்

அபார்ட்மென்ட் குழந்தைகளிடம் குறும்பு காட்டி நயன்தாராவிடம் காதல் கொஞ்சும் விஷால், போலீஸ் உடை அணிந்ததும் வெளிப்படுத்தும் ஃபேஸ் எக்ஸ்ப்ரஷன் அவர் கேரியரில் புதுசு. என்கவுன்ட்டர் குறித்துப் பேசும் வசனங்கள் ஷார்ப் நைஃப். கச்சித உடற்கட்டில் சண்டைக் காட்சிகளில் பிரமிக்க வைக்கிறார். க்ளைமேக்ஸில் ஆவேசம் பொங்க அவர் நிகழ்த்தும் ஆபரேஷன், திகுதிகு என பரவும் தீ!

நயன்தாரா ஸ்வீட் ஊறுகாய். அழகுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவது அவருக்கு எப்போது உறைக்குமோ தெரியவில்லை! பிரேம்ஜி அமரன் நிகழ்த்தும் சேட்டைகள் சகிக்கவில்லை. விஷாலின் அம்மாவாக வரும் சுதாசந்திரன் நம்மிடம் எந்தப் பரிதாபத்தையும் ஏற்படுத்தவில்லை. செந்தில் பிரமானந்தம் காமெடி அரதப் பழசு. வில்லனாக வரும் கோட்டா சீனிவாசராவ், இன்னும் எத்தனை படத்தில் இதே மாதிரி கொடூரச் சிரிப்பைக் காட்டப் போகிறார். நாம் பார்க்கப் போகிறோம்? அலட்சியமாக வந்து மூன்று கொலைகள் செய்துவிட்டுப் போகும் உபேந்திரா, விஷாலுக்கு அடுத்தபடியாக ஸ்கோர் செய்கிறார்.

ஹாரிஸின் இசையாக இது? ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு, காட்சியின் அதிரடிகளை நம் எலும்பு வரைக்கும் உணர வைக்கிறது. அழகாக பேக் செய்யப்பட்டு உள்ளே பேப்பராக இருக்கும் பலவீனமான திரைக்கதை, இயக்குநர் பெரிதாக நம்பிய குழந்தைகளின் உலகம் சுவாரஸ்யமாகச் சொல்லப்படவில்லை. அம்மா மகன் உறவிலும் ஒன்றக்கூடிய அளவு உயிர்ப்பில்லை. விஷால் மட்டுமே எவ்வளவுதான் தாங்குவார்!

பல வருடங்களுக்கு முன்னே விஷாலால் ஓ.கே. செய்யப்பட்ட கதை என்கிறார்கள். அப்போதே வந்திருந்தால், ஒருவேளை சத்யம் ஜெயித்திருக்கலாம்.

- கல்கி விமர்சன குழு -

 






 
 
 
 
   
   
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.