* கமலின் எண்ணமும், த்ரிஷாவின் யோசனையும் * மிட்டாய் படத்தில் கார்ட்டூன் சித்திரங்கள் * கேரள வரவு மித்ராவுக்கு லவ் ஹிஸ்ட்ரி ஸ்டார்ட் * அமீரிடம் விளக்கம் கேட்கும் கணித மேதை * வாரணம் ஆயிரம்- கொடைக்கானல் படங்களின் விமர்சனம் * கடும் உடற்பயிற்சி செய்கிறார் சினேகா * ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்கி நடிக்கும் நடிகர் * ஒரே படத்துக்கு 3 இசையமைப்பாளர்களின் இசை * ரவீனா டாண்டனின் சமூக அக்கறை * இசையமைப்பாளர்கள் மாற்றப்படும் மர்மம் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * சசிக்களின் விநியோக டீலிங் * கின்னசுக்கு போகும் பாபுகணேஷ் * திருமணம் பற்றி சல்மான் கருத்து * ஷில்பா ஷெட்டி 3 மாதம் ஓய்வு * இந்தி கஜினிக்கு 1250 பிரிண்ட் * மாடர்ன் பெண்களுக்கு சின்னத்திரை நித்யா அட்வைஸ் * குவாண்டம் ஆப் சோலஸ் பட விமர்சனம் * மாலையானால் மலையேறும் நடிகைகள் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * வாஸ்து‌‌வை நம்பி வீட்டை விற்கும் லாரா * கமலின் முன்னாள் மனைவி நடிக்கும் படம் * கவுதமிக்கு கமல் கொடுத்த புரமோஷன் : சினி வதந்தி * டாப் 5 படங்களின் விமர்சனம் * நடிகைகளின் எக்ஸ்குளூசிவ் வால்பேப்பர்கள் * புத்தம் புதிய படங்களின் ஸ்டில்கள் *  
 
 
 
 
 
   
 
 
 

சுப்பிரமணியபுரம்

மதுரையின் மைந்தர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இன்னொரு படம் சுப்பிரமணியபுரம்.

சசிகுமாரும், ஜெய்யும் ‌வேலை‌வெட்டியில்லாமல் வெட்டியாக பொழுது போக்கும் வெட்டி ஆபீஸர்கள். அவர்களுக்கு கைத்தடியாக கஞ்சா கருப்பு, விசித்திரன், மாரி ஆகியோர். கோபக்கனல் பார்வையுடன் ஊரை சுற்றித்திரியும் இவர்கள் எதற்கெடுத்தாலும் சண்டை போட்டு அடிக்கடி போலீஸ் ‌ஸ்டேஷன் சென்று வருகிறார்கள்.

அந்த நேரத்தில் ஒரு கட்சியின் மாவட்ட தலைவர் ஆக விரும்பும் காட்பாதர், தனக்கு இடையூறாக இருக்கும் மாவட்ட தலைவரை போட்டுத்தள்ள அசைன்மென்ட் கொடுக்கிறார். மாவட்டத்தலைவர் கொல்லப்படுகிறார். காட்பாதரும் தலைவராகி விடுகிறார். சிறைக்கு செல்லும் சசியையும், ஜெய்யையும் காப்பாற்றாமல் விட்டு விடுகிறார் காட்பாதர். இதனால் கடுப்பாகும் அவர்களுக்கு ஜெயிலில் அறிமுகமான ஒருவர் ஆதரவுக்கரம் நீட்டி ஜாமீனில் எடுக்கிறார். ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் அடுத்த அசைன்மென்ட். ஜாமீனில் எடுத்தவரின் தங்கை வாழ்க்கையை கெடுத்தவனை அழிக்க வேண்டும் என்பதுதான் அந்த அசைன்மென்ட். பழகிய பாவத்துக்காக அடுத்த கொலைகாரன் என்ற பெயரெடுக்கும் இவர்களை மரண பயம் தொற்றிக் கொள்ள தியேட்டரில் சூடு பறக்கிறது. அரிவாளும் கையுமாக சுற்றி வரும் இவர்கள் தங்களை ஏமாற்றி கொலை செய்ய வைத்து விட்டு, மாவட்ட தலைவர் பதவியை அனுபவித்துக் கொண்டிருக்கும் காட்பாதரின் தம்பி சமுத்திரகனியை பழிவாங்க திட்டமிடுகிறார்கள. அதே நேரத்தில் காதல் விவகாரம் காரணாமக ஜெய்யை தீர்த்துக்கட்ட சமுத்திரக்கனி திட்டம் தீட்டுகிறார். கடைசியின் என்ன நடக்கிறது என்பதுதான் விறுவிறுப்பான க்ளைமாக்ஸ்.

கோபத்தாலும், அனுதாபத்தாலும் கொலைகாரனிகி போலீஸ் லாக்கப்பில் கம்பியென்னும் இளைஞர்களின் வாழ்க்கையை சினிமாவாக பின்னியிருக்கிறார் இயக்குனர் சசிகுமார். படத்தில் சசிகுமாரின் நடிப்பு பாராட்டும்படியாகவே இருக்கிறது. பேசும் பாசையில் இருந்து, பழக்க வழக்கங்கள் வரை அத்தனையிலுமே மதுரை இளைஞர்களையே பிரதிபலிக்கிறார்கள்.

கஞ்சா கருப்பு கதாநாயகன் அவதாரத்துக்கு ஒத்திகை பார்த்திருக்‌கிறார். ஏற்கனவே மதுரை பேச்சு பேசி கலக்கும் கஞ்சாவுக்கு மதுரையை மையப்படுத்திய படத்தில் நடிக்க சொல்லியா கொடுக்க ‌வேண்டும். பின்னியெடுத்திருக்கிறார். கா‌மெடிகளும் சிரிக்க வைக்கின்றன. நாயகி ஸ்வாதி தன் பங்குக்கு மனதை வருடிச் செல்கிறார். அதுவும் கடைசியில் கதலனை காட்டிக் கொடுத்து விட்டு கதறும் காட்சியில் கண்கள் குளமாகின்றன. எண்பதுகளில் இருந்த நடை, உடை, ஹேர் ஸ்டைல், கார்கள், திரைப்படங்கள் என 25 ஆண்டுகளுக்கு பின்னால் நம்மை அழைத்து சென்றுள்ள இயக்குனர் சசிக்கு ஸ்‌பெஷல் பொக்கே கொடுத்து பாராட்டலாம்.

யதார்த்தமான வசனங்கள் படத்தின் ப்ளஸ். ஜேம்ஸ் வசந்தன் இசையில் கண்களிரண்டில் பாடல் மெலோடி மெட்டு. கதிரின் கேமரா கண்கள் ரசிக்க வைக்கின்றன.


சுப்பிரமணியபுரம் - சசிகுமாருக்கு கிடைத்த வெற்றி

- பட காட்சிகள் -

- தினமலர் விமர்சன குழு -

சுப்பிரமணியபுரம் (44/100)

நட்பின், காதலின் வாசல் புரத்தையும் துரோகத்தின் கொல்லைப்புரத்தையும் அழகும் திகிலுமாய்த் திறக்கும் படம் !

ஜெய், சசிக்குமார் ( அறிமுக இயக்குனர் ), கஞ்சா கருப்பு மூவரும் வம்புக்கு கொம்பு சீவித்திரியும் மைனர்கள். வாழ்ந்து கெட்ட அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த சமுத்திரக்கனிக்கு விசுவாச அல்லுசில்லுகளாய் இருக்கிறார்கள் மூவரும். கட்சிப்பதவி கைமாறிப்போக, அரசியல் எதிரியைப் போட்டுத்தள்ள இவர்களை இழுக்கிறார் கனி. சராசரி இளைஞர்களின் வாழ்க்கை சடாரென வன்முறையின் கொடூரப் பாதையில் வளைய, அடுத்தடுத்து நடக்கின்றன பகீர் துரோகங்கள்.
பெல்ஸில் தொடங்கி பழைய ரூபாய் நோட்டு, சில்வர் பெயிண்ட் பஸ் வரை 80-களின் உலகத்தைப் பார்த்துப் பார்த்துப் பதிவு பண்ணியிருக்கிற கலை வித்தைக்கு முதல் வணக்கம். ஐந்து நண்பர்களின் அலப்பறையும், இசையாய் இழைந்து கடக்கும் ஜெய்-ஸ்வாதி காதலுமாய் முதல் பாதி பிரமாதக் கவிதை. ஒட்டுமொத்தக் குழுவின் உழைப்பு.... பிரமிப்பு !

லாட்ஜ் அறையில் சமுத்திரக்கனி மூன்று பேரையும் முதல் கொலைக்கு ப்ரைன்வாஷ் செய்கிற காட்சியில், அந்த கேரக்டருக்கு அத்தனை வில்லத்தனத்தையும் கொண்டு வந்ததில் அடடா ! எத்தனை நுணுக்கம் ! ரகளையும் ரம்மியமுமாகப் போகிற கதை பின்பாதியில் திடுதிடுவென ரத்தமயமாவது அதிரவைக்கிற ட்ரீட்மெண்ட். க்ளைமாக்ஸ் காட்சி, தமிழ்சினிமா இதுவரை பார்க்காத பதற வைக்கிற பயங்கரம்.

பின்பாதியில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகளில் அரங்கேறும் கொலைகளில் ஐயோ.... எவ்வளவு ரத்தம். ஒரு மாவட்டச் செயலாளர் வீட்டில் கட்சிக்காரர்களே இல்லாமல் அம்போ என நிற்பதும், அதில் ஜெய், சசி குரூப் புகுந்து கலாட்டா செய்வதும் இயல்பாக இல்லை. கோலி விளையாடுவது மாதிரி கொலைகள் செய்துவிட்டு சசி-ஜெய் அலைவதில் நம்பகத்தன்மை இல்லை.

வறட்டுத் தலைமுடி, தாடி, சாய்ந்த நடை என வரும் ஜெய் ""அழகர்'' கேரக்டருக்கு அழகு. காதலில் ஈயென இளிப்பதும் "எனக்குச் சாவு பயம்னா என்னன்னு காட்டிட்டாய்ங்கடா ...! என்று அலறி அரற்றும்போது அப்ளாஸ் அள்ளுகிறார். குரல்தான் அப்படியே சிம்புவை ஞாபகப்படுத்துகிறது. வெடவெட தேகமும் கிடுகிடு கோபமுமாகத் திரியும் பரமனாக, சசிக்குமார், இயக்குனர் கம் நடிகர் ஏரியாவில் பலமாக பட்டா போடுகிறார். கருப்புக்கு இது முக்கியமான படம். பார்வைகளாலேயே பரவசமூட்டும் ஹீரோயின் ஸ்வேதாவும் நல்வரவு. டும்கானாக வரும் மாரி, சவுண்ட் சர்வீஸ் சித்தன், கோவில் தர்மகர்த்தா, சமுத்திரக்கனியின் அண்ணன், தம்பி.... என நிறையப் பாத்திரங்கள் மனதில் பச்சக்கென துண்டு போடுகிறார்கள்.

படம் முழுக்கக் கடுமையாக உழைத்திருக்கிறது கதிரின் கேமரா. காலத்தையும் கதையையும் இயல்பு மாறாமல் கொண்டு வந்து கொட்டும் ஒளி விளையாட்டு. ஜேம்ஸ் வசந்தன் அறிமுக இசையில் ""கண்கள் இரண்டால்....'' பாடல் மனதை நனைக்கும் மென்மெலடிச் சாரல். ரேம்போன் கலை இயக்கத்துக்கு ஒரு ஸ்பெஷல் கை குலுக்கல்.

ரத்த வாசனை அதிகம் என்பது ஒரு மைனஸ். இருப்பினும், இழைத்து இழைத்து சுப்ரமணியபுரம் கட்டியிருக்கிற அறிமுக இயக்குனர் சசிக்குமார், தரமான இயக்குனர்கள் வரிசையில் தன் முதல் முத்திரையைக் குத்தி இருக்கிறார்.

- விகடன் விமர்சனக்குழு -

சுப்பிரமணியபுரம்

புழுதி படிந்த எளிய முகங்கள். ஜோடனையற்ற நடிப்பு. அழகான மதுரைத் தெருக்களில் அலப்பரை செய்யும் ஐந்து வாலிபர்கள். இப்படி என்ட்ரி அடித்திருக்கிறது சுப்ரமணியபுரம். ஊர் பெரிசுகளின் கள்ளத்தனம் புரியாமல் இந்தநல்ல பிள்ளைகள் எப்படி வீணாகிறார்கள் என்பதே படத்தின் கதை. எதிரே கேமரா இருப்பதே தெரியாமல் எல்லா கதாபாத்திரங்களும் வாழ்ந்து திரிந்திருக்கிறார்கள்.

டே அங்கிட்டு இருக்காண்டா... என அருவாளை தூக்கிக்கொண்டு ஓடும் இம்சை இல்லை. டாடா சுமோ துரத்தல்கள் எதுவும் கிடையாது. 1980ம் ஆண்டுக்கான கதைக்களம் என்பதால் ஆரம்பம் முதலே காட்சிகள் மிக அழகாக நகர்கின்றன. அழகராக ஜெய். புதர் மண்டிய தாடி. ஸ்டெப் கட்டிங். வெட்டி வேலை கேரக்டருக்கு மிகச்சரியான பொருத்தம் கூடவே பரமனாக டைரக்டர் சசிகுமார். நடிப்பில் இது தான் முதல் அறிமுகம். வசனம் அதிகமின்றி ஓட்டத்திலும் பாவனைகளிலும் சொல்ல வேண்டியதை கச்சிதமாக சொல்கிறார். ரவுசுக்கு கஞ்சா கருப்பு.

சித்தன் சவுண்ட் சர்வீஸ் கடையில் தண்ணியடித்து விட்டு சிகரெட் சகிதமாய் அடிக்கடி ஒன்று கூடுகிறார்கள். தெருவில் முட்டல், மோதல்கள் அந்தரத்தில் பறந்தபடியே ஜிக்ஜாக் வேலை காட்டும் சண்டையை பார்த்து சலித்த நமக்கு தெருவில் நடக்கும் கோஷ்டி சண்டையை அப்படியே படம் பிடித்து காட்டுகிறார்கள். போலீசுக்கு போட்டு கொடுத்த மொக்கை சாமியின் பூட்டிய வீட்டுக்கு முன்னால் கஞ்சா கருப்பு கூட்டணி அடிக்கும் லூட்டி செம ரகளை. லுங்கியை வழிய மடித்துக்கொண்டு வட்டார வழக்கில் சிலம்பம் ஆடுகிறார்.

படத்தில் எல்லா கேரக்டர்களுமே லுங்கியும், சட்டையுமாக வந்து மதுரையின் ஈரப்புழுதியை ஞாபகப்படுத்துகிறார்கள்.நீளக்காலர் சட்டை தொள தொள பெல்பாட்டம் பேண்ட் என காஸ்ட்யூம் விஷயத்தில் கூட நிறைய சிரத்தை. லேசான உதட்டு சுழிப்புடன் ஓரக்கண்ணால் கதாநாயகனை பார்த்தபடி ஐயோ... யாராவது பார்த்து விட போகிறார்களோ என பரிதவித்து நம்மை பரவசப்படுத்துகிறார் ஸ்வாதி.

காதலியை சைட் அடிக்கும் பாணியும் பழைய யுக்திதான். நான் மட்டுமா பார்க்கிறேன். அவளுந்தான் பார்க்குறா என சகாக்களிடம் பெருமையடித்து கொள்ளும்போது முகபாவனைகளில் ஜெயிக்கிறார்ஜெய். சைக்கிளில் நண்பனை ஏற்றிக்கொண்டு காதலியை சுற்றி சுற்றி பின் தொடரும் காட்சி சுவாரஸ்யம். நாங்களும் வெளுப்பாத்தான் இருக்கோம். எவளும் பார்க்க மாட்டேங்கறாளே என ஜெய்யிடம் சசிகுமார் புலம்புவது சரியான சலம்பல்.

கவுன்சிலரா இருக்கிற வரைக்கும் எல்லாரும் மதிச்சானுவ... இப்போ கோயில் கமிட்டித் தலைவர் பதவிகூட கிடைக்க மாட்டேங்குதே.... என கௌரவத்துக்காக எப்போதும் மனசுக்குள் கறுவிக்கொண்டிருக்கிற ஊர் பெரிசு. புதுமுகமாம். உடல் அசைவுகளிலேயே வில்லத்தனம் காட்டி அசத்துகிறார். சாமர்த்திய வில்லனாக சமுத்திரக்கனி. புலம்பி புலம்பியே காரியம் சாதித்து வில்லத்தனத்திலும் நல்லதனமாக செய்திருப்பது சபாஷ்.

பழகினதுக்காகவே கொலை செய்யுறது நம்ம பசங்கதான். என ஜெயில் வளாகத்திற்குள் சக கைதி அடிக்கும் கமெண்ட்டுகள் சரியான சாட்டையடி. யாருப்பா அந்த கோயில் தர்மகர்த்தா? சந்தனம் பூசிய உடம்போடு பெரிய மனிதர் செய்யும் அத்தனை கள்ளத்தனங்களையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார். சின்ன வீடு காமெடி சரியான கூத்து. சில இரட்டை அர்த்த வசனங்களை மட்டும் தவிர்த்திருக்கலாம். டுமுக்காவாக வரும் ஊனமுற்ற வாலிபர் நம்மை ரொம்பவே கவர்கிறார்.

முதல் பாதி இதம் என்றால் இரண்டாம்பாதி முழுக்க விறுவிறுப்பு. சாவு வீட்டில் பயந்து பயந்து காத்திருந்து கொலை செய்யும் இடத்தில் படபடப்பு எகிறுகிறது. நம்பி கழுத்தறுத்தவனை ஆட்டோவில் தூக்கி போட்டு ஆட்டை அறுப்பது போல கரகரவென கழுத்தறுப்பது மிகையான கோரம். அவனுங்க எனக்கு சாவு பயத்தை வர வச்சிட்டானுங்கடா என பரிதாவிக்கும் காட்சியில் ஜெய் பரிதாபத்தை அள்ளிக்கொள்கிறார்.

கண்கள் இருந்தால் பாடல் தாளம் போட வைக்கிறது. மதுரை கொடை விழாவை மையப்படுத்தி வரும் மதுரை குலுங்க என்ற பாடலில் கிராமத்து குதூகலம். இசை ஜேம்ஸ் வசந்தன். பின்னணி இசையில் தாரை, தப்பட்டை என கிராமிய சூழலை முன் வைத்து கைத்தட்டல் போட வைக்கிறார். சொந்த ஊருக்கு போய் பழகிய மனிதர்களின் கையை பிடித்து கொண்ட இதமான உணர்வு படம் முழுக்க நிறைந்திருக்கிறது.

நல்ல கதை அமைந்து விட்டால் இயல்பாகவும் அது இருந்து விட்டால் பெரிய ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் இல்லாமலேயே ஜெயித்து விடலாம். என்பது இப்படத்தின் மூலம் மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. ஆக, தரமான இயக்குநர் பட்டியலில் சசிகுமாரும் சேர்கிறார்.

சுப்ரமணியபுரம்: நல்ல சினிமாவுக்கு போடப்பட்ட உரம்.

- குமுதம் விமர்சனக்குழு -

 
 
 
 
   
   
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.