சென்னை: கல்விக் கட்டணம் தள்ளுபடி திட்டத்தின் கீழ், தனியார் பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேர்க்கப்பட்ட 55 மாணவர்களை தேர்வு எழுத, சென்னை ஐகோர்ட் அனுமதித்துள்ளது.
வேலூர் மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரி தாக்கல் செய்த மனு: மகளிர், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள், உடல் ஊனமுற்றோருக்காக கல்விக் கட்டணம் தள்ளுபடி செய்யும் வகையில் ஒரு திட்டத்தை ஏ.ஐ.சி.டி.இ., அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களை தேர்ந்தெடுக்க சில வழிமுறைகள் பிறப்பிக்கப்பட்டன.
எங்கள் கல்லூரியில் விடுபட்ட இடங்களில், கல்விக் கட்டணம் தள்ளுபடி திட்டத்தின் கீழ், 23 மாணவர்களை சேர்த்தோம். இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூலையில் 12 மாணவர்கள் தான் விண்ணப்பித்தனர். ஆனால், எங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவர்கள் சேர்க்கையில், 10 சதவீதம் அதாவது 45 மாணவர்களை இத்திட்டத்தின் கீழ் சேர்க்க உரிமையுள்ளது. கல்லூரியில் சேர்க்கப்பட்ட 23 மாணவர்களுக்கும் தொழிற் கல்வி இயக்குனர் ஒப்புதல் அளிக்கவில்லை.
முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு தான் கல்விக் கட்டணம் தள்ளுபடி திட்டம் பொருந்தும் என்றும், இரண்டாம் ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு பொருந்தாது என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது. அரசு பிறப்பித்த சுற்றறிக்கையின்படி தான், இரண்டாம் ஆண்டில் மாணவர்களை சேர்த்தோம். இரண்டாம் ஆண்டில் சேர்க்கப்பட்ட 23 மாணவர்களுக்கு ஒப்புதல் வழங்காததால், 5ம் தேதி(நாளை) நடக்க உள்ள தேர்வை அவர்களால் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கட்டணம் தள்ளுபடி திட்டத்தின் கீழ் இரண்டாம் ஆண்டு சேர்க்கப்பட்ட 23 மாணவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். தொழிற் கல்வி இயக்குனரின் உத்தரவை ரத்து செய்து, 23 மாணவர்கள் சேர்க்கையையும் வரன்முறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று, திருச்சி சமயபுரத்தில் உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கரூரில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரி சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இக்கல்லூரிகள் சார்பில் 32 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கோரப்பட்டது. மனுக்களை நீதிபதி சுகுணா விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் சீனியர் வக்கீல் கே.துரைசாமி, வக்கீல் கந்தவடிவேல் ஆஜராகினர். மாணவர்கள் 55 பேரும் தேர்வு எழுத நீதிபதி சுகுணா அனுமதியளித்தார். ரிட் மனுக்களின் மீதான இறுதி உத்தரவைப் பொறுத்து இது அமையும் என்றும், தேர்வு முடிவை நிறுத்தி வைக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
| வாசகர் கருத்து |