புதுடில்லி: ""சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி ஏதேனும் நடந்திருந்தால் அல்லது உத்தரவுக்கு கீழ்படியாமல் செயல்பட்டிருந்தால், அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்,'' என உ.பி., மாநில தலைமைச் செயலர் அதுல் குமார் குப்தா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில், பொது மக்களின் வரிப்பணத்திலிருந்து, மாயாவதி உட்பட தலித் தலைவர்களின் சிலைகள் மற்றும் மணிமண்டபங்கள் அமைப்பது குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதில், மாநில அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. குறிப்பாக சிலை அமைப்பது உட்பட கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டது. இந்த உத்தரவை மீறி, சில இடங்களில் சிலைகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்தன.
இதையடுத்து, "அரசியலில் விளையாடுவதைப் போல சுப்ரீம் கோர்ட்டுடன் விளையாடாதீர்' என்று, மாயாவதி அரசை கடுமையாக எச்சரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், "உ.பி., தலைமைச் செயலருக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நவம்பர் 4ம் தேதி கோர்ட்டில் ஆஜராகி அவர் விளக்கம் அளிக்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டனர். இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் உ.பி., தலைமைச் செயலர் அதுல்குமார் குப்தா, ஆவணம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளுக்கு மாறாக ஏதேனும் நடந்திருந்தால் அல்லது உத்தரவுக்கு கீழ்படியாமல் இருந்திருந்தால், அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்' என, தெரிவித்துள்ளார்.
| வாசகர் கருத்து |