மதுரை: மதுரை திருமால்புரத்தை சேர்ந்த வக்கீல் சுரேஷ்குமார், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரத்தில் அக்., 26ல் டிப்பர் லாரியும், மாருதி வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாயினர். ஜெசிகா (3) என்ற குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
ஜெசிகாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உறவினர்கள் வராததால் சிகிச்சை அளிக்க டாக்டர்கள், ஊழியர்கள் மறுத்து விட்டனர். பின், உறவினர் ஒருவர் வந்து குழந்தையை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு குழந்தைக்கு இரண்டு அறுவை சிகிச்சை செய்தும் பயனில்லாமல் அக்., 29ல் இறந்தது. குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால், பிழைத்திருக்கும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ராஜன், செல்வகுமார் ஆஜராயினர். இம்மனு நீதிபதி டி.முருகேசன், எஸ். நாகமுத்து ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. தமிழக சுகாதாரத்துறை செயலர், மதுரை அரசு மருத்துவமனை டீன் ஆகியோர் பதிலளிக்க டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
| வாசகர் கருத்து |