சென்னை: நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் யானைகள் செல்லும் வழித்தடத்தில், புதிய கட்டுமானம் மேற்கொள்ள சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் பிராணிகள் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக அறங்காவலர் "யானை' ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், "நீலகிரி மாவட்டத்தில் யானைகள் செல்லும் வழித்தடங்களில் நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளன.
இதனால்,வழித்தடங்களில் இருந்து மாறி ஊருக்குள் யானைகள் புகுந்து விடுகின்றன. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன; பயிர்களுக்கும் சேதம் விளைவிக்கின்றன. யானை வழித்தடங்களில் எவ்வித ஆக்கிரமிப்பும் இல்லாமல், விலங்குகள் சுதந்திரமாகச் செல்ல வழி ஏற்படுத்தித் தர வேண்டும். யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' எனக் கோரியிருந்தார். இம்மனுவை விசாரித்த "டிவிஷன் பெஞ்ச்', இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இவ்வழக்கு நீதிபதிகள் முகோபாதயா, துரைசாமி அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த இடைக்கால உத்தரவு: களப்பணியாளர்களின் அறிக்கையோடு நிபுணர் குழுவும் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. யானை வழித்தடம் குறித்த வரைபடங்கள் அதில் இணைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் அந்த வரைபடத்தில் எல்லைகள் வரையறுக்கப்படவில்லை. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், நிபுணர் குழுவின் தலைவரான வனத்துறை முதன்மை தலைமை பாதுகாவலர் மற்றும் நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகினர்.
நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, யானைகள் செல்லும் வழித்தடங்களின் எல்லைகளை வரையறுத்து காட்டும் வகையில் விரிவான வரைபடத்தை, அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்வதாகக் கூறியுள்ளனர். வழித்தடங்களில் உள்ள தனியார் நிலங்களின் சர்வே எண்கள் பற்றிய விவரங்களும் வழங்கப்பட வேண்டும். யானைகள் வழித்தடத்தின் எல்லையை காட்டும் வரைபடத்தை தாக்கல் செய்ய, நிபுணர் குழுவுக்கு இரண்டு வார காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில் சுற்றுச்சூழல் துறை, வரைபடம் மற்றும் அறிக்கையை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்வதாக தெரிவித்துள்ளனர். இந்த வரைபடத்தை முழுமையாக அல்லது மாற்றம் செய்து ஏற்றுக்கொள்கின்றனரா என தமிழக அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் நிலையில், நிபுணர் குழு அளித்த அறிக்கையில் காட்டப்பட்டுள்ள யானைகள் வழித்தடத்தில் எவ்வித சட்ட விரோதமான கட்டுமானமும் செய்யாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
கோர்ட்டின் முன் அனுமதியின்றி, புதிய கட்டுமானம் எதையும் அந்த பகுதியில் மேற்கொள்ளக் கூடாது. நிபுணர் குழு குறிப்பிட்டுள்ள யானை வழித்தடத்தில், சோலார் மற்றும் மின்வேலி அமைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது. ஏற்கனவே இருக்கும் சோலார் மற்றும் மின்வேலியை பொறுத்தவரை, அடுத்த விசாரணையின் போது கோர்ட் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும். வழக்கு விசாரணை வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
| வாசகர் கருத்து |