""மலைகளுக்கும் தாகம் வரும்-அங்கு மழை கொடுக்கும்
மேகம் வரும்- அடி ரேணுச் செல்லம்
என் மனவனத்தில் வேணல் சுடும்- அதை உன் பனி விழியின்
புனல் சூழும்.''
""எப்படி?''
""கவிதைன்னாலே பொய்யும், புரட்டும் கலந்து
விடறதுதானே?''
""இதான் வேணாங்கறது. பப்ளிஷ் ஆகணும்னா அப்படிப்
பொய்யையும், புரட்டையும் கலக்கலாம் ரேணு. இது எம்
மனசுல இருக்கற துடிப்பு. அப்படியே எழுத்துல வருது.''
""நீங்க படிச்சதோ இன்ஜினீயரிங் படிப்பு. மெஷினையும்,
மோட்டாரையும் பத்திப் படிச்சிட்டு, தமிழ்ல இவ்வளவு
அழகா டூப் விட எப்படி முடியுது உங்களால?''
""மறுபடியும் டூப்.''
""சரி. கவிதை.''
""எங்கப்பா பிஸி னஸ் மேன். பேக்டரி, இருபது,
இருபத்தஞ்சு லட்சத்துக்கு சொத்து. பீரோ முழுக்க
சினிமாவுல காட்ற மாதிரியே பணம். நான் வெட்டிப்
பொழுது போக்கக் கூடாதேங்கறதுக்காக "போடாகாலேஜுக்கு'ன்னாரு.
அதனால போனேன். படிச்சேன். அது சும்மா அக்காடமிக்
இன்ட்ரஸ்ட். நீ அனாட்டமி இன்ட்ரஸ்ட்... ஏய்... ஏய்...
எனக்கு மடியை உருவிகிட்டே?''
""ச்சீ... அனாட்டமி இன்ட்ரஸ்ட்டாம். அந்த
இன்ட்ரஸ்ட் மட்டுந்தானா?''
""அது மட்டுந்தான்னா கவிதை வருமா ரேணுகா?''
ரேணுகாவின் டைரியிலிருந்து...
பிப்ரவரி 10, 2007 மதியம் —
கிருபாகருக்கு மியூஸியத்தின் மரத்தடி அலுத்துப்
போயிற்று. ரேணுகா இன்னும் வரவில்லை.
இரண்டு மணிக்கே ஆஜராகி விடுகிறவளாம். பெரிதாய்
போனில் சொன்னாள். நம்பி வந்தான். ஒவ்வொரு தடவையும்
இதே...
கிருபாகர் தூரத்தில் வந்த அவளைப் பார்த்தான். அவளே
தான். பரபரப்பானான். ரேணுகா திரையிலிருந்து இறங்கி
வந்த சிவப்பு தேவதை போல் அவனை நோக்கி மிதந்து
வந்தாள்.
""ஸாரி, கிருபா லேட்டாய்டிச்சு.''
""இந்த ஒரு வார்த்தையில என்னை அடிச்சுப் போட்டுடு...
ஒண்ணரையிலேர்ந்து காத்திட்டிருக்கேன்.''
""ஸாரிப்பா... ப்ளீஸ்...''
""நேரம் ஆக, ஆக, எங்கே நீ வராமப் போய்டுவியோன்னு
பயந்துடடேன்டா. உள்ளே போலாமா?''
""உள்ள ரொம்ப நடக்கணுமே...''
""ஏய். ப்ளீஸ். உள்ளேதான் பழங்கால சிற்பமெல்லாம்
இருக்கற எடத்துல கூட்டமே இருக்காது.''
""கூட்டம் இருக்காதுன்னா கிஸ் இருக்கும்னு அர்த்தம்.
நான் வரலேப்பா...''
""நீ லேட்டா வந்ததுக்கு பனிஷ்மென்ட்னு வச்சிக்கயேன்.
வா ரேணு. ஏற்கனவே நான் மூட்-அப்செட் ஆயி
வந்திருக்கேன்.''
ரேணுகா சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவன் உள்ளங்கையை தன் கையுடன் கோர்த்துக் கொண்டாள்.
"" என்ன ஆச்சு?'' என்றாள்.
""இன்னிக்கு அப்பா என்னைக் கூப்பிட்டுத் தனியா
பேசணும்னாரு.''
""ஐயையோ , தெரிஞ்சுடிச்சா நம்ப விஷயம்?''
""தெரிஞ்சாத்தான் பரவாயில்லையே... இது வேற... மூணு
மணிக்கு போர்டு மீட்டிங். நீ என்கூட வரே. நான்
உன்னை இன்ட்ரட்யூஸ் பண்ணப் போறேன்னாரு. எனக்கு ஒரே
டென்ஷன். உன்னை இங்க இரண்டு மணிக்கு மீட் பண்றேன்னு
சொல்லியிருக்கேன். அதே டைம்ல நான் கம்பெனில
இருக்கணுமாம்.''
""அப்புறம்?''
""எனக்கு வேற வேலை இருக்கு. வர முடியாதுன்னுட்டு
வந்துட்டேன். எனக்கு என் ரேணு முக்கியம்; கம்பெனி
இல்ல. நீ ஒருத்திதான் என் வாழ்க்கை; என் நந்தவனம்;
என் வசந்தம் எல்லாமே... எல்லாமே.''
""நெஜம்மாவா கிருபா? நெஜம்மாவா... கிருபா?'' என்று
உருகி, உருகிப் போய் கேட்டாள்.
ரேணுகாவின் டைரியிலிருந்து...
மார்ச் 7, 2007 மாலை —
கிருபாகர் பதறிப் போனான். அவள் வார்த்தைகளைக்
கேட்டு.
""என்ன சொல்றே ரேணு?''
""ப்ளீஸ்... இந்த ஸென்டிமென்ட்ஸ் எல்லாம் வேண்டாம்.
நான் சும்மா ஜஸ்ட் லைக் தட் பழகினேன். உங்க கூட
ஜாலியா ஊர் சுத்தினேன். உங்க செலவில... மத்தபடி
கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே எனக்கில்லை.
உங்களுக்கு பொம்பளைத்தனமா ஒரு மூஞ்சி வேற. நான்
உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவதிப்படறதா?
டேக் இட் ஈஸி... பொன் ஒருத்தி கூட வந்தா லவ் தானா?
கல்யாணந்தானா? ஹஹஹ்...ஹா... ஜோக் ஆப் தி இயர் மேன்.''
""ரேணு, நான் செத்துப் போய்டுவேன். ரேணு...''
""வெல்... கோ அஹெட்... குட் பை பார் எவர்.''
கிருபாகரனின் டைரியிலிருந்து...
அக்டோபர் 12, 2007 —
விடியல் நேரம். அலாரத்திற்கு உயிர் வந்தது.
கிணுகிணுவென்று. கிருபாகர் விழித்து, பல் தேய்த்து,
ஷேவ் அடித்து, குளித்து மாடிப்படிகளில்
இறங்கும்போது ஹாலில் அப்பாவும், அம்மாவும்
காத்திருந்தனர்.
மேஜையில் இட்லிகள் ஆவி கக்கின. பளபள எவர்சில்வர்
தட்டில் இரண்டை எடுத்து இட்டாள் அம்மா.
""இன்னிக்கு சாயங்காலம் நீ சீக்கிரம் வந்துடு ராஜா...
நாம் மூணு பேரும் பரசுராமன் வீட்டுக்குப் போகணும்...''
அப்பா, கிருபாகர் சொல்லப் போகும் பதிலுக்காக
ஆவலுடன் காத்திருந்தார்.
""மணிமாலாவைப் பொண்ணு பார்க்கத் தானே? அவளை
எனக்குத் தெரியாதா அப்பா? நீங்களே பேசி
முடிச்சிடுங்க. நான் எதுக்கு?'' என்றான் கிருபாகர்.
""இது சந்தோஷமான விஷயமில்லையா கிருபாகர்? அதனால
பரசுராமன் சின்னதா ஒரு கெட் டு கெதர் அரேன்ஜ்
பண்ணியிருக்கான். சுந்தரம், கோபாலகிருஷ்ணன்,
ராமசுப்பு, மேத்யூஸ் எல்லோரும் அவங்கவங்க
பேமிலிகளோட வராணுங்க.''
கிருபாகர் பதில் பேசாமல் கடைசி விள்ளலை வாயில்
போட்டுக் கொண்டு வாஷ்பேஸினுக்கு நடந்தான். கை
கழுவினான். துடைத்தான்.
""நான் வரலை...'' என்றான்.
""ஏன்?'' என்றார் அப்பா கொஞ்சம் காரமாக.
""இன்னிக்கு சாயங்காலம் இன்ஜினீயர்ஸோட ஒரு மீட்டிங்
இருக்கு.''
""நாளைக்கு வச்சுக்கோயேன்.''
""நாளைக்கு ஸ்டீல் சப்ளை பத்திப் பேச டாடா
ஏஜென்ஸிக்குப் போகணும்.''
""என்னவோ ஒரு நாள் தள்ளிப் போடுடான்னா இத்தனை
அலட்டிக்கிறியே. நான் பார்க்காத கம்பெனியா?''
அப்பா, கோபத்தில் செய்தித்தாளை மடித்தார்.
கிருபாகர், மென்மையாகச் சொன்னான்...
""வாஸ்தவம்தான் நீங்க சொல்றது. இப்ப நான் ஜி.எம்.,
மா இருக்கற கம்பெனிக்கு நீங்கதான் டைரக்டர்.
இல்லேங்கல. பட் ஐ ஆம் நாட் ப்ரீ.''
வெளியே நடந்தான். டிரைவர் திறந்து பிடித்த காரில்
ஏறினான். காருக்குள் சில பைல்கள் அவன் பார்வைக்காக
ஏங்கிக் கொண்டிருந்தன. ஆபீஸில் நேரம் போனதே
தெரியவில்லை. கிருபாகர் மத்தியான சாப்பாட்டைக் கூட
வேண்டாமென்று மறுத்துவிட்டு, ஒரு வழியாக எல்லா
வேலைகளையும் முடித்துவிட்டுத் தலையை நிமிர்த்திய
போது மணி நான்கு.
ஏ.ஸி., அறையில் வியர்த்திருந்தது. துடைத்துக்
கொண்டான். கிர்ர் என்றது இன்டர்காம். எடுத்தான்.
""ஸார், உங்களைத் தேடிக்கிட்டு மிஸ் மணிமாலா
வந்திருக்காங்க...'' என்றாள் செக்ரட்டரி. அவளுக்கு
இங்கே என்ன வேலை?
""வரச்சொல்லு.'' என்றான்.
""ஹாய் கிருபாகர்,'' என்று நுழைந்தாள். புயலின்
வருகை போல் இருந்தது. சென்ட் மணம் திடீரென்று அந்த
அறையை ஆக்ரமித்தது.
""உக்காரு மாலா... சொல்லு என்ன விஷயம்?''
""அப்பா சொன்னாரு. நீங்க சாயங்காலம் பார்ட்டிக்கு
வரப் போறதில்லைன்னு.''
""ஆமா. வேலை நெறைய இருக்கும்மா.''
""என்ன கிருபாகர். கல்யாணத் தேதி நிச்சயமானதும்
நெறையச் சேர்ந்து சுத்தணும்னு ப்ளான் போட்டு
வெச்சிருக்கேன். நீங்க இப்பவே இப்படி சாக்கு
சொல்றீங்களே...''
""சுத்திக்கிட்டிருக்கறதுக்கெல்லாம் எனக்கு நேரம்
கெடையாது மாலா.''
""நான் கெடந்து எப்படித் தவிக்கிறேன். உங்க மனசுல
ஈரமே இல்லியா கிருபாகர்?''
கிருபாகர் மவுனமானான். மேஜையைப் பார்த்தான்.
அதிலிருந்த ரோஜாக்களைப் பார்த்தான். மறுபடியும்
ரேணுகா நினைவுக்கு வந்தாள். அவளுடன் கழித்த நாட்கள்.
அப்புறம் அவனை ஒரேயடியாய் விலக்கி விட்டு அவள்
விலகிப் போன அந்த நாள். அப்புறம் தேவதாசாய் மாறியது,
தாடி வளர்த்துக் கொண்டு சுற்றியது எல்லாமே
நினைவுக்கு வந்தன.
மூன்று மாதங்களில் இதெல்லாம் பைத்தியக்காரத்தனம்
என்று சுதாரித்துக் கொண்டு அப்பாவுடன் தொழிலில்
இறங்கி, அந்தத் தொழிலை வளர்த்து அந்த
வளர்ச்சியினால் பெருமைப்பட்டு, அந்த சந்தோஷத்தில்
திளைத்துக் கொண்டிருக்கும் போது மறுபடி இன்னொரு
பெண் மயக்கமா? மறுபடி அர்த்தமற்ற கவிதைகளா? கூடாது.
கூடவே கூடாது.
கிருபாகர் நிமிர்ந்தான்...
""மாலா, நீ என்னை என்ன நெனைச்சுக்கிட்டாலும் சரி.
இந்த மாதிரி டயத்தை வீணாக்கறதுக்கு எனக்கு மனசு
வராது. ஸாரி.''
""அப்படின்னா கல்யாணமானப்புறமும் நான் சன்யாசி
மாதிரி பூஜை ரூம்லயே இருக்கணுமா கிருபாகர்?''
""மாலா நீ கோப்படறதில அர்த்தமில்ல. கல்யாணமாகட்டும்.
அப்புறம் நேரம் கெடைக்கறப்ப என்ஜாய் பண்ணலாம்.
அதுக்காக நான் மெஷினையும், கம்பெனியையும்
மறந்துட்டு வர முடியுமா சொல்லு. நான் நிச்சயம் ஒரு
நல்ல கணவனா இருப்பேன். நீ கூட வீட்ல சும்மா
உக்காந்திருக்க வேண்டாம். படிச்ச படிப்பும் வீணாகப்
போக வேண்டாம். நம்ப கம்பெனியிலேயே அக்கவுன்ட்ஸ்
டிபார்ட்மெண்ட்ல வந்து உக்காந்துக்க.''
பேச்சை வெட்டிக் கொண்டு டெலிபோன் அழைத்தது. ""யெஸ்,''
என்றான்.
""இதோ வந்துகிட்டே இருக்கேன்,'' என்றான்.
""ரைட்டோ, தென் மாலா,'' என்று எழுந்து கொண்டான்.
""ஈவினிங் பார்ட்டிக்கு பெஸ்ட் ஆப் லக்.''
அவளுடைய பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியே
நடந்தான்.
ரேணுகாவின் டைரியிலிருந்து விட்டுப் போன ஒரு பக்கம்...
மார்ச் 7, 2007 காலை —
""நீ தானேம்மா ரேணுகா?''
ரேணுகா தன் எதிரில் வந்து நிற்கும் பெரிய மனிதரைப்
பார்த்தாள். எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.
ஆனால், சட்டென்று நினைவுக்கு வரவில்லை. ""ஆமாம்...''
என்றாள் தயக்கமாக.
""நான் கிருபாகருடைய அப்பா ""ராமனாதன்.''
ரேணுகா சட்டென்று எழுந்து கொண்டாள். மரியாதை, பயம்,
படபடப்பு எல்லாம் வந்து அவளைத் தொற்றிக் கொண்டன.
""நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். எம் பையனை
என்கிட்ட விட்டுக் கொடுக்க எவ்வளவு கேக்கறே சொல்லு.
ஒரு லட்சமா? இரண்டு லட்சமா? இல்ல, அஞ்சு லட்சம்
தரட்டுமா, ஹாட் காஷ்.''
""என்ன சொல்றீங்க?'' என்றாள் ரேணுகா. தொண்டையில்
சட்டென்று பயப்பந்து உருண்டது.
""எனக்குப் பின்னாடி என் கம்பெனியைப் பாத்துக்க
வேண்டிய என் பையன் கவிதை, காதல்ன்னு நானூறு ரூபா
சம்பளம் வாங்கற ஒரு டெலிபோன் ஆபரேட்டர் பின்னாடி
சுத்தறதில எனக்கு சம்மதம் இல்லை. அவனுக்குப் பெரிய
எடத்தில எல்லாம் பொண்ணுங்க காத்திருக்காங்க. நீ
விட்டுக் கொடுக்க மாட்டேன்னு சொன்னா, நானே என்
பையனைக் கொன்னுடுவேன். அது நிச்சயம். உன்னுடைய
கிருபாகர் நல்லா வாழணும்னு விரும்பினா, நீ அவனை
விட்டு விலகணும். சொல்லு. எவ்வளவு வேணும்?''
ரேணுகாவுக்கு சகலமும் சட்டென்று புரிந்து போயிற்று.
ராமனாதனை ஏறிட்டுப் பார்த்தாள். அவர்
முகத்தில்இருந்த தீர்மானத்தைப் பார்த்தால் நிச்சயம்
அவர் சொன்னதைச் செய்வார் போல்தான் இருந்தது.
""நோ, நான் கிருபாகரை சாகவிட மாட்டேன். என்
கிருபாகர் எங்கேயிருந்தாலும் நல்லா வாழணும்.
அதுக்காக என் காதலைத் தியாகம் செய்யணும்னாலும்
தயாராயிருக்கேன்...''
""தட்ஸ் குட். எவ்வளவு வேணும்?''
""என் காதலை உங்க பணத்தால வாங்க முடியாது.
போய்டுங்க. ப்ளீஸ் கெட் அவுட்...''
எப்படியோ காரியத்தை முடித்துக் கொண்ட திருப்தியில்
ராமனாதன் வெளியே கிளம்பினார். ரேணுகா, ""ஸாரிடா.
கிருபா...'' என்று ஈரமான கண்களைத் துடைத்துக்
கொண்டாள். அன்று மாலை கிருபாகரனை சந்திக்கத்
தயாரானாள்.