Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

09.தீபாவளிக்கு தயாராகுது சின்னாளப்பட்டி! ( சி.பசுபதி)



ஒரு காலத்தில் சின்னாளபட்டி சேலைகள் என்றால் வெகு பிரபலம். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இந்த சேலைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வெளிநாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆறு கெஜம், எட்டு கெஜம் என்று பல அளவுகளில், கண்ணைக் கவரும் டிசைன்களில் தயாரிக்கப்பட்ட ஆர்ட் சில்க் சேலைகளை பெண்கள் மிகவும் விரும்பி அணிந்து வந்தனர்.

சின்னாளபட்டி கண்டாங்கி சேலை மிகவும் பேசப்பட்ட ஒரு புடவை ரகம். 30 ஆண்டுகளுக்கு முன்னர் தறி இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சின்னாளபட்டியில் சேலை தயாரிப்பு இருந்தது. தீபாவளிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே சேலை தயாரிப்பு விறுவிறுப்பாக இருக்கும். இரவு, பகல் எந்நேரமும் தறிச் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.

நாடு முழுவதிலும் உள்ள வியாபாரிகள், சின்னாளபட்டியில் முகாம் இட்டு, அன்றாடம் உற்பத்தியாகும் சேலைகளை கொள்முதல் செய்து வந்தனர். ஆனால், நாகரிக மாற்றத்தின் காரணமாக சின்னாளபட்டி சேலைக்கு வரவேற்பு குறைந்தது. பெண்கள், விதம், விதமான செயற்கை இழை சேலைகளை அணியத் துவங்கினர். இதனால், சின்னாளபட்டியின் பாரம்பரியமான ஆர்ட் சில்க் சேலை உற்பத்தி மெல்ல குறைந்தது. ஒரு கட்டத்தில், ஆர்ட் சில்க் சேலை தயாரிப்பே இல்லாமல் போய்விட்டது. கால மாற்றத்திற்கு ஏற்ப சுங்குடி சேலை தயாரிப்பில் சின்னாளபட்டி இறங்கியது.

ஆர்ட் சில்க் சேலைகளைப் போலவே சுங்குடி சேலைகள் உற்பத்தியும் அபரிமிதமாக இருந்தது. விலை குறைவாகவும், தரமானதாகவும் இருந்த சின்னாளபட்டி சுங்குடி சேலைகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் பரிமாண வளர்ச்சியாக, சாதாரண சுங்குடி சேலையில் புதிய வடிவங்கள் பிரிண்ட் செய்து,அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, சின்னாளபட்டியில் பல நிறுவனங்கள் காட்டன் மற்றும் சுங்குடி சேலைகளை விற்பனை செய்து வருகின்றன.

முன் போல விறுவிறுப்பாக புடவை உற்பத்தி இல்லாவிட்டாலும், தீபாவளி தேவைகளுக்காக சின்னாளபட்டி பிஸியாக இருக் கிறது.

இது குறித்து பாரத் ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் ஷாகுல் அமீது கூறுகையில், "இந்த தீபாவளிக்கு காட்டன், மைக்ரோ, பாலிகாட்டன் ஐட்டங்கள் தான் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ரகங்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. மைக்ரோ பூனம் என்ற புது வகையும் இந்த ஆண்டு பெருமளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது...' என்றார்.

சின்னாளப்பட்டியில் உற்பத்தியாகும் காட்டன் சேலைகளில் 40 சதவீதம் மேற்கு வங்க மாநிலத்திற்கு தான் அனுப்பி வைக்கப்படுகின்றன. சின்னாளபட்டி காட்டன் சேலைகளுக்கு கொல்கத்தாவில் பெரும் கிராக்கி இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

தீபாவளி பண்டிகையை காட்டிலும், ஆயுத பூஜை, துர்கா பூஜை நேரங்களில் மேற்கு வங்கத்திற்கு அதிகமான அளவில் புடவைகள் அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. பருத்தி, சுங்குடி சேலைகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யும் கடைகள் ஏராளமாக உள்ளன. சமீப காலமாக பிரபலமாகியுள்ள மைக்ரோ பூனம் காட்டன் சேலைகள் 250 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. "கால மாற்றத்திற்கு ஏற்ப புடவை டிசைன்களில் புதுமைகளை புகுத்த வேண்டியுள்ளது. முன்பெல்லாம் ஒரு சுங்குடி சேலையில் ஒரு குறிப்பிட்ட டிசைன் மட்டுமே இருக்கும். தற்போது ஒரே சேலையில் இரண்டு, மூன்று வண்ணங்களில் பல டிசைன்கள் வடிவமைக்கப்படுகின்றன. "இவ்வாறு தயாரிக்கப்படும், "பேன்சி' புடவைகளுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பாலிகாட்டன் சேலைகளும் அதிகமாக விற்பனையாகின்றன...' என்கின்றனர் தீபாவளி புடவை விற்பனையில் பிசியாகி உள்ள வியாபாரிகள்.

 
 
BACK NEXT

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        |   மின்னஞ்சல்   |  | 

முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in