| ஓசூர் ரிங்ரோடு பணியில் அலட்சியம்! விபத்து ஏற்படும் அபாயத்தால் பீதி Dinamalar
ஓசூர் ரிங்ரோடு பணியில் அலட்சியம்! விபத்து ஏற்படும் அபாயத்தால் பீதி
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

31 ஆக
2014
04:47

ஓசூர் : ஓசூர் ரிங்ரோடு இணையும் முக்கிய சாலைகளில், விபத்துகளை தடுக்கும் வகையில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என்ற, ஓசூர் சரக போலீஸாரின் யோசனையை, மாநில நெடுஞ்சாலைத்துறை அலட்சியப்படுத்தியதால், விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஓசூர் நகரின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் இருந்து, சீத்தாராம்மேடு வரை, ரிங்ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான பணிகள் முடிவுற்று, வாகன பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது.இந்நிலையில், ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள, ஆர்.சி., சர்ச் எதிரே அமைக்கப்பட்டுள்ள ரிங்ரோட்டை ஆக்கிரமித்து, ரயில்வே நிர்வாகம் சார்பில், கற்கள் வைக்கப்பட்டு, வாகனங்கள் நுழையாதபடி, கம்பி கொண்டு தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இதற்கு பதில் அளித்த ரயில்வே நிர்வாகம், தங்களுடைய இடத்திற்கு வழங்க வேண்டிய பணத்தை, மாநில நெடுஞ்சாலைத்துறை வழங்கும் வரை, தடுப்பு வேலி அகற்றப்படாது என தெரிவித்தது. இதன் காரணமாக, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், ராமநாயக்கன் ஏரிக்கரை வழியாக சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவானது.

இந்நிலையில், ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்திற்கு, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், பணம் வழங்கப்பட்டதால், ரயில்வேத்துறையின் தடுப்பு வேலி அகற்றப்பட்டது. இதனிடையே, ரிங்ரோடு இணையும் முக்கிய சாலைகளில், விபத்து ஏற்படாமல் இருக்க, ரவுண்டானா அமைக்க வேண்டும் என, ஓசூர் சரக போலீஸார் கேட்டுக்கொண்டனர்.
ஆனால், போலீஸாரின் கோரிக்கையை நிராகரித்த மாநில நெடுஞ்சாலைத்துறை, ஆங்காங்கு தடுப்புச்சுவர் அமைத்து வருகிறது. இதனால், சாலை விபத்தை குறைக்க முடியாது என்பது, அனைவருக்கும் தெரியும். ஆனால், நெடுஞ்சாலைத்துறையின் இந்த அலட்சியப்போக்கால், ரிங்ரோடு முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது, அதிகளவில் விபத்துக்கள் நடக்கும் என்பது போலீஸாரின் கருத்தாக உள்ளது.இதில் குறிப்பாக, ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலை, ஓசூர்-ராயக்கோட்டை சாலை பகுதிகளில், ரிங்ரோடு இணைவதால், பெரிய அளவில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக, போலீஸார் தெரிவித்தனர்.

 

மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X