மவுலிவாக்கத்தில், அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த கட்டடத்தில் இருந்தது போன்று, 50 அடுக்குமாடி கட்டடங்களில், 'காலம்' எனப்படும் அடித்தள 'பீம்' விதிமீறல் இருப்பது சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வு : மவுலிவாக்கம் கட்டட விபத்தில், சிறப்பு புலனாய்வுக்குழு மேற்கொண்ட ஆய்வில், திட்ட அனுமதி அளிக்கப்பட்ட வரைபடத்தில் இருந்த, 'காலம்' எனப்படும், 'பீம்'கள், கட்டுமான பணியின்போது பின்பற்றப்பட்ட, வரைபடத்தில் இல்லாதது தெரியவந்து உள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைபடத்துக்கு மாறாக, 'பீம்'களை மாற்றி அமைத்ததே, 11 மாடி கட்டடம் இடிந்து விழ, முக்கிய காரணமாக கூறப்படுகிறது.இந்த நிலையில், இதேபோன்ற விதிமீறல்கள் மேலும் 50 அடுக்கு மாடி கட்டடங்களில் இருப்பது சி.எம்.டி.ஏ., அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத, சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மவுலிவாக்கம் விபத்தையடுத்து கட்டுமான திட்ட அனுமதி பெற விண்ணப்பித்தவை, கட்டுமான பணி நிலையில் இருப்பவை, கட்டுமான பணி நிறைவு சான்று பெறும் நிலையில் இருப்பவை என, மூன்று வகையாக, 251 அடுக்குமாடி கட்டடங்கள், 165 சிறப்பு கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
'பீம்' இல்லை : மொத்தம், 19 குழுக்களாக பிரிந்து, ஜூலை முதல் வாரத்தில் துவங்கிய இந்த பணிகள் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தன. இதில், ஆய்வு செய்யப்பட்ட, 416 கட்டடங் களில், 50 கட்டடங்களில், 'காலம்' எனப்படும், 'பீம்'கள், திட்ட அனுமதி வரைபடத்தில் உள்ளபடி இல்லை. இதுதவிர, 228 கட்டடங்களில் வேறு வகையான விதிமீறல்கள் உள்ளன. இக்கட்டடங்களுக்கு, நோட்டீஸ், அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் அளிக்கும் பதிலை பொறுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை கள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
நடவடிக்கை என்ன?
சென்னையில், வேப்பேரி, பூந்த மல்லி நெடுஞ்சாலை, பல்லாவரம், சோழிங்கநல்லுார், எழும்பூர், துரைப்பாக்கம், சிறுசேரி, உத்தண்டி உள்ளிட்ட பகுதிகளில் அடித்தள, 'பீம்' விதிமீறல் உள்ளதாக கண்டறியப்பட்ட கட்டடங்கள், உள்ளதாக தெரிய வந்துள்ளது.மக்களிடம் பீதி ஏற்படும் என்பதால், இக்கட்டடங்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடு வதை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.மவுலிவாக்கத்தில் விபத்துக்கு காரணமாக கூறப்படும் விதிமீறல்கள், வேறு கட்டடங்களிலும் இருப்பது தெரியவந்தும், அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதில் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
- நமது நிருபர் -