மாதவரம்:குடியிருப்புகளுக்கு
நடுவில், சுற்றுச்சூழல் பாதிப்பு, தீ விபத்து ஆகியவற்றை
ஏற்படுத்தும், 'குடிசை' தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன.
சென்னை மாதவரம் மண்டலம், 26, 27, 33வது வார்டுகளில் குடியிருப்புகளுக்கு நடுவில் குடிசை தொழில் போன்ற சிறிய தொழிற்சாலைகள் உருவாகி உள்ளன.மாதவரம்
பொன்னியம்மன்மேடு, திருமலை நகர் விரிவில், அட்டை மற்றும் பேப்பர்
கழிவுகளை இருப்பு வைத்து, காகித கூழ் தயாரிப்புக்காக ஏற்றுமதி
செய்யப்படுகிறது. தினமும் இரு லாரிகள் அளவிற்கு இறக்குமதி
செய்யப்பட்டு, கூடாங்களில் வைக்கப்பட்டு பிரிக்கப்படுகின்றன.
மேலும்
அவை, பாதுகாப்பற்ற வகையில் தெருவில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
கடுமையான வெயில் நீடிக்கும் நிலையில், எளிதில் அவை தீ பற்றக் கூடும்.
இதனால், பெரும் விபத்து ஏற்படக்கூடும். அய்யப்பா நகரில்,
பிளாஸ்டிக்கழிவு மூட்டையாக தேக்கி வைக்கப்பட்டுள்ளது. எளிதில்
தீப்பற்றும் அவை எரிந்து, புகை வெளியானால், மூச்சுத்திணறல், கண்
எரிச்சல் போன்ற
பாதிப்புகள் ஏற்படும்.
பாலகிருஷ்ணா நகரில்
காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பு வைக்கப்பட்டு
தரம் பிரிக்கப்படுகின்றன. அவற்றால் துர்நாற்றம், கொசு உற்பத்தி அதிகரிக்கின்றன.இப்படி,
மாதவரம் மண்டலம் முழுக்க, மாநகராட்சி அதிகாரிகள், ஆளும்
கட்சியினர் ஆதரவுடன், விபத்து மற்றும் உயிருக்கு ஆபத்தை
உண்டாக்கும் சிறு தொழிற்சாலைகள், குடிசை தொழிலாக அதிகரித்து வருகின்றன.
அக்கம்பக்கத்தில்
வசிப்போர், அவற்றை அகற்ற முடியாமல் தவிக்கின்றனர். பெரிய அளவிலான
விபத்து, உயிரிழப்பு ஏதாவது ஏற்படும் முன், மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் விழித்துக்கொண்டால், அனைவருக்கும் நல்லது.
'மாஜி'க்கள் ஆதரவு
எங்கள்
பகுதியில், சுற்றுச்சூழல் பாதிப்பு, விபத்துகளை ஏற்படுத்தும்,
10க்கும் அதிகமான தொழிற்சாலைகள் உருவாகி உள்ளன. அவற்றுக்கு வந்து
செல்லும் வாகனங்களால் சாலை, குடிநீர் குழாய் மற்றும் மழைநீர்
வடிகால்வாய்கள் சேதமடைந்து விடுகின்றன. எங்கு புகார் செய்தாலும்,
நடவடிக்கை இல்லை. அவர்களுக்கு ஆதரவாக, முன்னாள் கவுன்சிலர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வருகின்றனர்.பகுதிவாசி