பல்லாவரம் : பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில், மழைநீர் தேங்குவதை தடுக்க, ஜி.எஸ்.டி., சாலையில், புதியதாக ஒரு சிறுபாலம் கட்ட, நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட, காமராஜபுரத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மழை காலங்களில், பம்மல் மூங்கில் ஏரி, திருநீர்மலை பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், இப்பகுதி வழியாக, ஜி.எஸ்.டி., சாலை, ரயில்வே லைனை கடந்து, பெரிய ஏரிக்கு செல்கிறது.இக்கால்வாய் பல ஆண்டுகளுக்கு முன், கட்டப்பட்டவை என்பதால், துார்ந்துபோய் சுருங்கிவிட்டது. இதனால், லேசான மழை பெய்தாலே, தண்ணீர் செல்ல வழியின்றி, காமராஜபுரம் பகுதியை வெள்ளம் சூழ்ந்து விடுவது தொடர்கதையாக உள்ளது. சமீபத்திய மழையிலும், இப்பகுதி பாதிப்புக்குள்ளானது.
பல ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்னையை தீர்க்க, ஜி.எஸ்.டி., சாலை வழியாக செல்லும் கால்வாயை துார்வாரி, ஆழப்படுத்தாததே காரணம் என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.ஜி.எஸ்.டி., சாலை வழியாக செல்லும் கால்வாய், 10 அடி அகலம், 10 அடி ஆழம் கொண்டவை. இக்கால்வாய் பல காரணங்களால் சுருங்கிவிட்டது.இந்நிலையில், இனிவரும் காலங்களில் வெள்ளம் தேங்குவதை தடுக்க, ஜி.எஸ்.டி., சாலை கால்வாயை துார்வாருவதோடு, 60 லட்ச ரூபாய் செலவில் புதிய கால்வாய் ஒன்று கட்ட, நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.