திருச்சி விமான நிலையத்தில் சி.பி.ஐ., வேட்டை: சுங்க அதிகாரிகள் உட்பட 19 பேர் கைது: தொடர் தங்கம் கடத்தல் புகாரால் அதிரடி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஆக
2018
07:09

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில், தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி, 'ரெய்டு' நடத்தினர். இரண்டு நாள் நடந்த சோதனையின் முடிவில், சுங்க அதிகாரிகள் ஆறு பேர் உட்பட, 19 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக புகார்கள் குவிந்ததை அடுத்து, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


திருச்சி விமான நிலையம் வழியாக, தங்கம் கடத்தும் சம்பவங்கள் அதிகம் நடந்தன. இது தொடர்பாக, சி.பி.ஐ.,க்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, மதுரையில் இருந்து திருச்சி வந்த, எஸ்.பி., மைக்கேல் தலைமையிலான, சி.பி.ஐ., அதிகாரிகள், விமான நிலையத்தில், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு, மலேசியாவில் இருந்து ஏர் ஆசியா விமானத்தில் வந்த, 70 பயணியர் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். இதில், தங்கம் கடத்தலில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட, 23 பயணியர் மற்றும், கஸ்டம்ஸ் அதிகாரிகள் ஆறு பேர் என, 29 பேரை, விமான நிலையத்தின் தனியறையில், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர். மற்றவர்கள், படிப்படியாக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பயணியரில், தமயந்தி என்ற திருச்சியைச் சேர்ந்த பயணி, இரு மாதங்களில், 30க்கும் மேற்பட்ட முறை வெளிநாடுகளுக்கு சென்று, தங்கம் கடத்தி வரும், 'குருவி'யாக செயல்பட்டது தெரிந்தது. அவரிடமும், அவரது கணவரிடமும், தீவிர விசாரணை நடத்தினர். திருச்சி ராமலிங்க நகரில் உள்ள அவர்களது வீட்டிலும், நேற்று மதியம் சோதனை நடத்தினர். தற்போது, சி.பி.ஐ.,யிடம் சிக்கியுள்ள பயணியர் அனைவரும், மாதத்துக்கு, 15 முறைக்கு மேல் வெளிநாடு சென்று வந்தவர்கள். இவர்கள் அனைவரும், வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வர, வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்டவர்கள் என தெரிந்தது. இவர்களுக்கு, சுங்க அதிகாரிகளும் உதவியாக இருந்துள்ளனர்.


இதையடுத்தே, திருச்சி கஸ்டம்ஸ் உதவி கமிஷனர் வெங்கடேசலு, கண்காணிப்பாளர்கள் ராமகிருஷ்ணன், தணிகாசலம், இன்ஸ்பெக்டர்கள் அனீஸ் பாத்திமா, பிரசாந்த் கவுதம், பிரடி எட்வர்டு ஆகியோரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் மூன்று அதிகாரிகளை மட்டும், விமான நிலையத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்று, ரகசிய இடத்தில், விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு பின், 'குருவி'களாக செயல்பட்ட, 13 பயணியர், கஸ்டம்ஸ் அதிகாரிகள் ஆறு பேர் என, 19 பேரை நேற்று கைது செய்தனர். இவர்களை நேற்று இரவு, மதுரை, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். திருச்சி விமான நிலையத்தில், ஜனவரி முதல் ஜூலை வரை, 47 கிலோவுக்கு மேல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு, 14.10 கோடி ரூபாய். இது, சிக்கிய தங்கம் மட்டுமே. கஸ்டம்ஸ் அதிகாரிகளின் துணையோடு, இதை விட பல மடங்கு தங்கம், வெளியே பாதுகாப்பாக சென்றிருக்கும் என விமான நிலைய பாதுகாப்பு படையினர் கூறுகின்றனர்.


ரெய்டு ஏன்? சில நாட்களுக்கு முன், திருச்சி விமான நிலையத்தில், 6.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சாதாரண பயணியருக்கு எப்போதும் மலேசியா, சார்ஜா, சிங்கப்பூர் செல்லும் விமானங்களில் இடம் கிடைப்பதில்லை. ஒரு விமானத்தில் குருவிகள் மட்டும், 50 பேருக்கு குறையாமல் பயணம் செய்துள்ளதாக, சி.பி.ஐ.,க்கு புகார்கள் சென்றன. இதையடுத்தே, நேற்று முன்தினம் முதல், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


சிக்கியவர்கள் விபரம்


கஸ்டம்ஸ் அதிகாரிகள்: வெங்கடேசலு, கழுகாசல மூர்த்தி, ராமகிருஷ்ணன், அனீஸ் பாத்திமா, பிரசாந்த் கவுதம், பிரடி எட்வர்டு.


பயணியர்: தமயந்தி, முருகேசன், சிவக்குமார், மனோகரன், அப்துல் ரமீஸ், மகேஸ்வரன், சுரேஷ், கனகா, சாந்தி, ராமலட்சுமி, லட்சுமி, வள்ளி, புஷ்பா.


ரூ. 8 லட்சம் பறிமுதல்: சி.பி.ஐ., அதிகாரிகள், விமான நிலையத்தில் உள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகளின் அறைகளில் நடத்திய சோதனையில், எட்டு லட்சம் ரூபாய் மற்றும் சிறிய அளவில் நகைகள் கிடைத்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். கடந்த காலங்களில் தங்கம் கடத்தலுக்கு உதவிய ஒப்பந்த பணியாளர்கள், 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


குருவிகள் விமானம்: சி.பி.ஐ., சோதனையால், நேற்று முன்தினம் இரவு, மலேசியாவில் இருந்து, திருச்சி வரவிருந்த ஏர் ஆசியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கியிருந்த, 40 பேரும், தங்களின் டிக்கெட்டை ரத்து செய்யாமல், விமானத்தில் வருவதை தவிர்த்து விட்டனர். இதனால், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் அதில் வரவிருந்த அனைவரும் குருவிகள் என தெரிந்தது. விமானம் ரத்தால், இங்கிருந்து மலேசியா செல்ல வேண்டிய பயணியர், நேற்று அதிகாலை, ஏர் ஆசியா நிறுவன அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டனர்.


மிரட்டல் வசூல்: சி.பி.ஐ., வசம் சிக்கியுள்ள அனீஸ் பாத்திமா குறித்து, நேற்று மாலை, திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த மைதீன்கான் என்பவர், சி.பி.ஐ., அதிகாரிகளிடம் புகார் அளித்தார். மைதீன்கான் கூறியதாவது: ஒரு மாதத்துக்கு முன், நானும், என் மனைவியும் மெக்கா புனித யாத்திரை சென்று திரும்பிய போது, என் மனைவி அணிந்திருந்த, 130 கிராம் தங்க நகைக்கு அபராதம் கட்ட வேண்டும் என மிரட்டி, 1.30 லட்சம் ரூபாய் அனீஸ்பாத்திமா வசூலித்தார். அதற்கு ரசீது ஏதும் கொடுக்கவில்லை. ரசீது கேட்டு, நான் பலமுறை அலைந்தும் கொடுப்பதாக ஏமாற்றி வருகிறார். முறைகேடாக என்னிடம் வசூலித்த பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


 

மேலும் திருச்சி மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X