| தமிழகத்தில் சவுக்கு மர விலை வரலாறு காணாத..வீழ்ச்சி!. மரக்கூழ் இறக்குமதி செய்வதால் வாங்க ஆளில்லை Dinamalar
தமிழகத்தில் சவுக்கு மர விலை வரலாறு காணாத..வீழ்ச்சி!. மரக்கூழ் இறக்குமதி செய்வதால் வாங்க ஆளில்லை
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

11 செப்
2018
00:03

கடலுார்: வெளி நாடுகளில் இருந்து மரக்கூழ் இறக்குமதி செய்வதால் சவுக்கு மரம் விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.


விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை, சாகுபடி செலவு, நிலத்தடி நீர் வளம் இல்லாமை போன்ற இடங்களில் சவுக்கு பயிர் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மணற்பாங்கான கடற்கரையோரத்தில் இவ்வகை மரங்கள் நன்கு செழித்து வளரும் தண்மை கொண்டது.


அதிக நிலப்பரப்பு கொண்ட மற்ற பயிர்கள் சாகுபடி செய்ய முடியாத இடங்களிலும், மேடு, பள்ளமான நிலப்பரப்பிலும் இவ்வகை பயிர் அதிகளவில் செய்யப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் மானாவாரியாகவும், அதிக நிலப்பரப்பு உள்ள பகுதியிலும் இறவை சவுக்காகவும் பயிர் செய்யப்படுகிறது.


மானாவாரியாக பயிர் செய்யப்படும் சவுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அறுவடை செய்யப்படும். இறவையில் பயிர் செய்யப்படும் சவுக்கு 3 ஆண்டுகளில் அறுவடைக்கு தயாராகிறது.

அறுவடையின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் முகாமிட்டு சவுக்கையை வாங்கி லாரிகளில் அனுப்பி வைப்பர்.


பேப்பர் தயாரிப்பதற்கும், நுால் இழை தயாரிப்பதற்கும், தோலுரித்த 4 இஞ்ச் விட்டமுள்ள சவுக்கு மரங்களுக்கு நல்ல விலை கிடைத்தது. அத்துடன் சவுக்கு மரங்கள் நேராக இருப்பதால் வீடுகள், தொழிற்சாலை கட்டடங்களுக்கு சென்ட்ரிங் அடிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.


அதனால் ஏராளமான மரங்கள் இதற்காகவே விற்பனை செய்யப்பட்டன. தற்போது இந்த சென்ட்ரிங் வேலைக்கு முழுவதும் இரும்பு பைப் பயன்படுத்தப்படுவதால் சவுக்கு மரத்திற்கு பயன்பாடு இல்லாமல் போனது.


அதனால் சவுக்கு மரங்களின் பயன்பாடு வெகுவாக குறைந்து போனது.

தற்போது, பேப்பர் மில், துணி மில் போன்றவற்றிற்கான மரக்கூழ் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், தமிழகத்தில் சவுக்கு பயிர் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.


இதற்கு முன் ஒரு டன் விலை 4500 முதல் 7000 ரூபாய் வரை விலை போனது தற்போது வாங்க ஆளில்லாததால் ஒரு டன் 1700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு சாகுபடி செய்வதற்கான செலவுத்தொகை கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சவுக்கு பயிரிடும் விவசாயி கூறுகையில், 'சவுக்கு ஒரு டன் விலை 7000 விலை போனது. தற்போது ஒரு ஏக்கர் ஒரு லட்சம் ரூபாய்க்கு கேட்கின்றனர். இது மிகவும் குறைவான விலையாகும்.


இதனால் 5 ஆண்டுகள் காத்திருந்து பல்வேறு செலவுகளை சுமந்து இருக்கும் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டமாகும்' என்றார்.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X