திருச்செந்தூர் : அன்னிய முதலீடு சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அன்னா ஹசாரே காந்திய வழி போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முழு ஆதரவு அளிக்கும் என்று மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். திருச்செந்தூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு முன்னிலை வகித்தார். மாநில இணைச் செயலாளர் ஜெபஸ்திலகராஜ், திருச்செந்தூர் நகர யாதவ வியாபாரிகள் சங்க தலைவர் வள்ளிநாயகம், உடன்குடி சுற்றுவட்டார வியாபாரிகள் சங்க தலைவர் சுதாகர், தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர். இந்த கூட்டத்தில் தென்சென்னை மாவட்ட துணை தலைவர் எட்வர்ட், திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் பாரதிசுரேஷ், குறிஞ்சி சுரேஷ், யாதவ வியாபாரிகள் சங்க துணை தலைவர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின் மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது, சுதந்திர போராட்ட தியாகி அன்னா ஹசாரே தலைமையில் மாபெரும் போராட்டம் ஊழல் கருப்பு பணத்தை எதிர்த்து ஜனநாயக முறைப்படி காந்திய வழியில் பொதுமக்களுக்கு எந்தவித இடர்பாடும் இல்லாமல் நடந்து வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு இன்று (23ம் தேதி) கடையடைப்பு நடத்த வேண்டும் என சில அமைப்புகள் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. இந்த செயல் அன்னா ஹசாரே கொள்கைக்கு முரண்பாடானதாகும். அவரது கொள்கைக்கு முரண்பாடு ஏற்பட கூடாது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடையடைப்பு நடத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தது. வணிகர்களும் கடையடைப்பு நடத்தாமல் எங்களது கோரிக்கையை ஏற்று வழக்கம்போல் வணிகம் செய்த அனைத்து வியாபாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். வரும் 3ம் தேதி சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடக்க உள்ளது. மத்திய அரசு சில்லரை வணிகத்தில் 51 சதவீதம் அன்னிய முதலீடுக்கு அனுமதி அளித்துள்ளது. அன்னிய முதலீடு செய்ய அனுமதிப்பதை இந்த கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக அன்னிய முதலீடு சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அதே போல் தரம் நிறைந்த உணவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் கடந்த 5ம் தேதி முதல் மத்திய அரசு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. தமிழக அரசு அனைத்து வணிக சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து சிறு வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடர்பாடு இல்லாத முறையில் இந்த சட்டத்தை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு இந்த பேரமைப்பு சார்பாக வேண்டுகோள் விடுவிக்கிறோம். மத்திய அரசின் இந்த சட்டம், அந்நிய முதலீட்டை ஊக்குவிப்பதாக உள்ளது. மத்திய அரசு இந்த சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். லாரி உரிமையாளர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளுக்காக கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். மத்திய அரசு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அமல்படுத்துவதாக சொன்ன எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. நாம் பயன்படுத்தும் சாலைகளுக்கு டோல்கேட் என்ற பெயரில் அடாவடியாக தனியாருக்கு தாரைவார்த்து விட்டது. இது சாமானியர்களையும் பாதிக்கிறது. அரசு உடனடியாக தலையிட்டு டோல்கேட்டை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அன்னாஹசாரேயின் காந்திய வழி போராட்டத்திற்கு பேரமைப்பின் முழு ஆதரவு உண்டு இவ்வாறு அவர் கூறினார்.