எட்டயபுரம் : எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலையை ஆண்டு முழுவதும் முழுமையாக இயக்கி நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாரதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் எட்டயபுரத்திற்கு புகழ் சேர்க்கும் படி பாரதி கூட்டுறவு நூற்பாலையை உருவாக்கி தந்தார். இது எட்டயபுரத்திற்கு எம்.ஜி.ஆர் கொடுத்த கொடையாகவும், வரப்பிரசாதமாகவும் கருதப்படுகிறது. ஆனால் 28 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. முன்னேற்றம் சுத்த சூன்யம், நித்தியகாண்டம், பூர்ண ஆயுளாக சென்று கொண்டிருக்கிறது. எம்ஜிஆர். உருவாக்கிய மில்லை அரசு கடைகண் பார்த்து புதிய யுக்திகளை கையாண்டு நவீனப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். பாரதி கூட்டுறவு மில்லுக்கு ஆண்டு முழுவதும் தேவையான பஞ்சை இந்திய அரசு பஞ்சு கழகத்தில் கொள்முதல் செய்து ஆலையை முழுமையாக இயக்கி ஆண்டு முழுவதும் உற்பத்தியாகும் நூலினை இலவச வேஷ்டி சேலை மற்றும் சீருடை திட்டத்திற்கு அரசு கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் இந்த மில்லை நவீனப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக செயலாளர் பால்ராஜ் தலைமை வகித்தார். ஏஐடியுசி தலைவர் கோபால் முன்னிலை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட செயலாளர் முனியசாமி துவக்கி வைத்தார். புதியதமிழகம், தேமுதிக., எல்பிஎப், ஏஐடியுசி அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஏஐடியுசி மாவட்ட பொது செயலாளர் தமிழரசன் நன்றி கூறினார். ஏஐடியுசி சிங்கார வேல் நன்றி கூறினார்.