கோயம்பேடு : ஆடி மாதத்தில் அனைத்து கோவில்களிலும் பூஜை, வழிபாடுகள் வெகு
விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், வழிபாட்டிற்கு முக்கிய தேவையான
பூக்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
கோவில், வீடுகளில் பூஜை ஆடி மாதம் துவங்கியுள்ள நிலையில், மாநகரில்
அனைத்து கோவில்களிலும் பூஜை, வழிபாடுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக,
அனைத்து அம்மன் கோவில்களும் களைகட்டத் துவங்கியுள்ளன.
இதே போல, பலர் வீடுகளிலேயே விரதம் மேற்கொண்டு பூஜைகளைத் தொடர்கின்றனர்.
இப்படி கோவில் மற்றும் வீடுகளில் விசேஷ பூஜைகள் அதிகரித்துள்ள நிலையில்,
பூஜைக்கு தேவையான பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
இதன் தாக்கமாக, கோயம்பேடு பூ சந்தையில் சாமந்தி, மல்லிகை, ரோஜா, ஜாதிமல்லி
உள்ளிட்ட பூக்களின் விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளது. தற்போது
சந்தையில் சாமந்தி பருவம் என்பதால், ஓசூரில் இருந்து அதிகளவில் சாமந்தி பூ
வருகிறது.
இதே போல, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மற்றும் சென்னையை சுற்றியுள்ள
பகுதிகளில் இருந்து, மல்லிகைப் பூவும், முல்லைப் பூவும், சந்தைக்கு கொண்டு
வரப்படுகின்றன. வேலூர் மாவட்ட பகுதிகளில் இருந்து ஜாதிமல்லிப் பூ வரத்து
உள்ளது. தேவையின் அடிப்படையில் ரோஜாக்களும் வருகின்றன.
பூக்களின் வரத்து அதிகரித்துள்ள நிலையில், சாமந்தி கிலோ, 200 முதல் 250
ரூபாய், மல்லிகை கிலோ, 200 முதல் 300 ரூபாய், முல்லை 150 ரூபாய்,
ஜாதிமல்லி 200 ரூபாய், ரோஜா 50 முதல் 90 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
இது குறித்து, கோயம்பேடு சந்தை பூ மொத்த வியாபாரி மூக்கையா கூறுகையில்,
""ஆடி மாதம் துவங்கியுள்ள நிலையில், பூ விற்பனை அதிகரித்துள்ளது. ஆடி மாதம்
மூன்றாவது வாரம் முதல் இந்த விற்பனை மேலும் பல மடங்கு உயரும். தற்போது
வியாழன், வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே சாமந்தி பூ வரத்து, ஐந்து டன் வரை
அதிகரித்துள்ளது,'' என்றார்.
பார்த்து பண்ணுங்க...
தேவை காரணமாக பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. இது குறித்து பக்தர்கள்
தரப்பில் கூறுகையில், ""விற்பனை அதிகரித்துள்ள நிலையில், விலையும் சற்று
உயர்ந்துள்ளது. பெரும்பாலும் காலைப் பொழுதில் தான் பூக்களை வாங்கிச் செல்ல
வருகிறோம். ஆகையால், விலையை அதிகளவில் உயர்த்திடாமல் வியாபாரிகள்
பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றனர்.