சென்னை:பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்றோர் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று சாலை மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட, 175 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, படித்த பார்வையற்ற பட்டதாரிகளுக்கு கல்வி உதவித்தொகை அதிகரிப்பு உட்பட, பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாவட்ட பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே, ராஜாஜி சாலையில் மறியல் நடந்தது. மறியலில், 50க்கும் மேற்பட்ட, பெண்கள் உள்ளிட்ட, நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மறியலால் கடற்கரை சாலை, ராஜாஜி சாலை மற்றும் ராயபுரம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டது. மறியலில் ஈடுபட்ட, 65 பெண்கள் உட்பட, 175 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டோர் கொண்டித்தோப்பு சமூக நலக்கூடத்தில், தங்க வைக்கப்பட்டனர். மறியல் குறித்து, மாவட்ட துணை தலைவர் ராஜா கூறுகையில், ""சமீபத்தில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த, ஆர்ப்பாட்டத்தில் பார்வையற்றோர் பலர், கைது செய்யப்பட்டனர். அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். எங்களது கோரிக்கைகள் தொடர்பாக, முதல்வரை நேரில் சந்திக்க, ஆவன செய்ய வேண்டுகிறோம்,'' என்றார்.