சென்னை:கொடுங்கையூர் குப்பை வளாகத்தில், தொடர்ந்து, 10வது நாளாக நேற்றும் குப்பை எரிந்ததால், சுற்றுவட்டார பகுதி, புகை மண்டலத்தில் மூழ்கியது.
கொடுங்கையூர் குப்பை வளாகத்தில், தொடர்ந்து, 10வது நாளாக நேற்றும் குப்பை எரிந்ததால், கொடுங்கையூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள, வியாசர்பாடி, கண்ணதாசன் நகர், எழில்நகர், முல்லைநகர், எம்.கே.பி.நகர், ஆர்.ஆர்.நகர், கிருஷ்ணமூர்த்தி நகர் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகள், புகை மூட்டத்தில் மூழ்கின.
"குப்பை எரிவதற்கு, மர்ம நபர்கள் பலர் உள்ளே சென்று, தீ வைப்பதே காரணம்' என, மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.
அவ்வாறு, அத்துமீறி உள்ளே செல்பவர்களை கண்காணிக்க, வளாகத்தின் வாயில்களில், நான்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தவிர, 21 தனியார் நிறுவன காவலர்களும், பணியமர்த்தப்பட்டனர்.
ஆனால், நான்கு கண்காணிப்பு கேமராவில், எடை போடும் இயந்திரம் அருகே உள்ளது, உட்பட, இரண்டு மட்டுமே செயல்படுகிறது. மற்ற இரண்டில், ஒன்றை காணவில்லை. குப்பை வளாகத்திற்குள், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பையை சேகரிக்க, செல்பவர்களை கண்காணிக்க, 21 காவலர்கள் இருந்தும், அவர்களை தடுப்பதில்லை.
இந்நிலையில், மாநகராட்சி மண்டல அதிகாரிகள், நேற்று, வளாகத்தில் ஆய்வு செய்யும் போதே, பலர் உள்ளே குப்பை சேகரிகத்து கொண்டிருந்தனர். எரியும் குப்பையை அணைக்க, இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உள்ளே சென்றன. ஆனால், தீயை அணைக்க முடியாமல், அவை திரும்பிச் சென்றன.