கந்தன்சாவடி:கந்தன்சாவடியில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த திருடர்கள் 40 சவரன் நகைகளை திருடி சென்றனர்.
கந்தன்சாவடி, லட்சுமணன் நகரை சேர்ந்த அவணதாஸ் என்பவரது மகன் பல்தாசர், 46. இவர், கருணாநிதி சோழன் சாலை, வீரமணி சாலையில் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் காலை, இவரது மனைவி பெலாஸ்தரி, 41, உறவினரை பார்க்க செஞ்சி சென்று விட்டார். நேற்று காலை 10:00 மணிக்கு, பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து சென்று விட்ட பல்தாசர், நிறுவனத்திற்கு சென்றார்.
மாலை வீடு திரும்பியபோது, வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 40 சவரன் நகைகள் திருடு போனது தெரிய வந்தது.
இது தொடர்பாக, பல்தாசர் கொடுத்த புகாரின் பேரில், துரைப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.