மாதவரம்:போலி நகைகளை அடமானம் வைத்து, கடைக்காரர்களை ஏமாற்றி வந்தவர், போலீசாரிடம் சிக்கினார்.
மாதவரம் எம்.ஆர்.எச்., சாலையில், அடகு கடை நடத்தி வருபவர் மோகன்லால் ஜெயின், 50. நேற்று முன்தினம், அவரது கடைக்கு வந்த ஒரு நபர், நான்கு சவரன் நகையை அடமானம் வைத்து, பணம் கேட்டார். அவர் கொடுத்தது, போலி நகை என்பதை, மோகன்லால் உறுதி செய்தார்.
"தற்போது கடையில் அவ்வளவு பணம் இல்லை, அரைமணி நேரம் காத்திருங்கள் அல்லது எங்காவது போய் வாருங்கள், பணம் கொடுக்கிறேன்' என, அவரிடம் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, போலி நகை குறித்து, மாதவரம் போலீசில், அவர் புகார் செய்தார். சிறிது நேரத்திற்கு பின், பணம் வாங்க வந்த அந்த நபரை, போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர், மருதுபாண்டியர் நகரை சேர்ந்த மாதவன், 32, என்பது தெரிந்தது.
இவர், ஏற்கனவே, மாதவரம், புழல், பெரம்பூர், கிண்டி, திருநின்றவூர் என, பல பகுதிகளில், போலி நகை மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.