ஆவடி:மழையால், பட்டாபிராம் ஐ.ஏ.எப்., சாலை முற்றிலும் சேதம் அடைந்து, குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பட்டாபிராம் இந்து கல்லூரியை ஒட்டி செல்லும் ஐ.ஏ.எப்., (விமான படைக்கு சொந்தமானது) சாலையில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் முடிந்தது. இதையடுத்து அவசர, அவசரமாக சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால், இந்த சாலை ஒரு மாதத்துக்கு கூட தாக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் பெய்த மழையில் சாலை முற்றிலும் சேதம் அடைந்து, வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த வழியாக செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.