சென்னை : "மண்டல அளவில் அமைச்சர் நடத்தி வரும் ஆய்வு கூட்டத்தில், ஒப்புக்கு தான் எங்களை அழைக்கின்றனர்; வார்டின் உண்மை நிலையை எங்களால் வெளிப்படையாக கூற முடியவில்லை' என, கவுன்சிலர்கள் புலம்புகின்றனர். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கும் இதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பணிகளை துரிதப்படுத்தும் வகையில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் முனுசாமி, மண்டல வாரியாக ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் மண்டலங்களுக்கான ஆய்வு கூட்டம், நேற்று மாதவரத்தில் நடந்தது.அமைச்சர்கள் முனுசாமி, மூர்த்தி, மேயர் துரைசாமி, ஆணையர் கார்த்திகேயன், எம்.எல்.ஏ.,க்கள் குப்பன், வேதாச்சலம், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.தி.மு.க., வெளிநடப்பு தி.மு.க., கவுன்சிலர்கள் எட்டு பேர், அமைச்சரின் ஆய்வு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளியேறிய, மாநகராட்சி எதிர்க்கட்சி துணை தலைவர் நீலகண்டன் கூறுகையில், ""அம்பத்தூர் மண்டலத்தில் நிர்வாக குளறுபடி உள்ளது. பணிகள் நடக்கவில்லை. மாநகராட்சி கூட்டத்தில் பேச முடியாததால், ஆய்வு கூட்டத்தில் பேசலாம் என, வந்தோம். அதற்கான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மண்டல குழு தலைவரின் பெயரை கூட சொல்லவில்லை. எனவே, வெளிநடப்பு செய்தோம்,'' என்றார்.பொதுவாக அமைச்சர் நடத்தி வரும் ஆய்வு கூட்டங்களுக்கு, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மண்டல வாரியாக கவுன்சிலர்கள் அழைக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களின் கருத்துக்களை தெரிவிக்கவோ, பணிகள் குறித்தோ, அதிகாரிகள் குறித்த உண்மை நிலையையோ கூற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.பார்வைக்கு மட்டுமேஇதுகுறித்து, அம்பத்தூர் மண்டலத்தை சேர்ந்த சில கவுன்சிலர்கள் கூறியதாவது:ஆய்வு கூட்டத்தில் எங்களுக்கு பேச வாய்ப்பு கிடைப்பதில்லை. மண்டல குழு தலைவர்களாவது பேச வாய்ப்பு கொடுத்திருக்கலாம். மண்டல ஆய்வில் மண்டல தலைவருக்கு வாய்ப்பு இல்லாதபோது, எப்படி உண்மை நிலை தெரிய வரும்? பகுதியில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து விவரமாக சொல்ல முடியவில்லை. அதிகாரிகள் சொல்வதை மட்டும் தான் அமைச்சர் கேட்கிறார்.இதுவரை நடந்த கூட்டங்களில் பங்கேற்ற ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும் இதை உறுதி செய்தனர். "நாங்கள் கூட்டத்தில் பார்வையாளர்களாக மூன்று மணி நேரம் உட்கார்ந்திருந்தோம். ஆனால், எங்கள் கருத்துக்களை பதிவு செய்யவோ, மண்டலங்களில் நடந்து வரும் பணியில் உள்ள இடர்பாடுகள், தீர்வு குறித்து பேசவோ வாய்ப்பு தரப்படவில்லை. ஆய்வு கூட்டம், சம்பிரதாய அளவில் கூட இல்லை' என்று, வெளிப்படையாக பேசினர்.ஆய்வு கூட்டம் ரத்துதிருவொற்றியூர் மண்டல கூட்டம் நேற்று காலை நடப்பதாக இருந்தது. திருமண மண்டபமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஆய்வு கூட்டம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சோழிங்கநல்லூர், ஆலந்தூர், பெருங்குடி மண்டலங்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று மாலை, திட்டமிட்டபடி நடந்தது. நிருபர்களுக்கு தடை :ஆய்வு கூட்டங்களில், புகைப்படம் எடுக்க மட்டுமே பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. முழுமையாக பங்கேற்க அனுமதி கிடைப்பதில்லை. ஆனால், பெண் கவுன்சிலர்களின் கணவர்கள், கார் ஓட்டுனர்கள், உதவியாளர்கள் தடையின்றி பங்கேற்கின்றனர்.