வண்டலூர் : கலப்பின சேர்க்கை மூலம், புலிகளை இனப்பெருக்கம் செய்யும், வண்டலூர் பூங்காவின் திட்டம் வெற்றி பெற்று உள்ளது. வெள்ளைப் புலியான ஆகான்ஷா, பெங்கால் புலியுடன் இணைந்து, மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.அரிய வகையான வெள்ளைப் புலிகளின் இனப்பெருக்கத்திற்கு உகந்த இடமாக, வண்டலூர் உயிரியல் பூங்கா திகழ்கிறது. இங்கு, ஒன்பது வெள்ளைப் புலிகள், எட்டு பெங்கால் புலிகள் பராமரிக்கப்படுகின்றன. வெள்ளைப் புலிகள் என்பது, மரபணு குறைபாட்டால் பிறப்பவை.மூன்று குட்டிகள்வெள்ளைப் புலிகளுக்கு இடையே இனப்பெருக்கம் நடந்தால், பிறக்கும் குட்டிகள் ஆரோக்கியமானதாக இருக்காது என்பது, விலங்கு ஆர்வலர்களின் கருத்து. இதனால், நாட்டிலேயே, முதன் முறையாக, வெள்ளை பெங்கால் புலிகளை, கலப்பின சேர்க்கை மூலம் இனப்பெருக்கம் செய்ய, கடந்த ஆண்டு, வண்டலூர் பூங்கா நிர்வாகம் திட்டமிட்டது.இதையடுத்து, மூன்று வயதான ஆகான்ஷா, நம்ரதா என்ற பெண் வெள்ளைப் புலிகளையும், எட்டு வயதான விஜய் என்ற ஆண் பெங்கால் புலியையும், அருகருகே, தனி கூண்டில் விடப்பட்டன. அவை, ஒன்றோடு ஒன்று பழகிய பின், ஒரே கூண்டில் விடப்பட்டன. இந்த இடத்தை, பார்வையாளர்கள் கண்டு ரசிக்க, அனுமதி மறுக்கப்பட்டது. இந்த புலிகளை, பூங்கா அதிகாரிகளும், மருத்துவர்களும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். பெங்கால் புலியைவிட, வெள்ளைப் புலி களுக்கு வயது குறைவு என்பதால், கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, வெள்ளைப் புலிகள், கர்ப்பம் தரிப்பதற்கான சிகிச்சைகளை, பூங்கா மருத்துவர்கள் மேற்கொண்டனர். இதன்பலனாக, பெங்கால் புலி விஜயுடன் இணைந்து, வெள்ளைப் புலி ஆகான்ஷா கர்ப்பம் தரித்து, கடந்த சில நாட்களுக்கு முன், மூன்று குட்டிகளை ஈன்றது.ரகசியம் இந்த மூன்று குட்டிகளும், பெங்கால் புலி நிறத்திலேயே உள்ளன. நல்ல ஆரோக்கியமாகவும் உள்ளன. கலப்பின சேர்க்கை மூலம், வெள்ளைப் புலி, குட்டிகளை ஈன்றுள்ள விஷயம், ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. அந்த கூண்டு அருகே யாரும் செல்லக்கூடாது என்பதற்காக, வேலியும் அமைக்கப் பட்டு, கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது.வரும், 12ம் தேதி, தமிழக வனத்துறை அமைச்சர், வண்டலூர் பூங்காவை ஆய்வு செய்ய உள்ளார். அப்போது, கலப்பின சேர்க்கை மூலம் பிறந்த புலி குட்டிகளை, அமைச்சர் பார்வையிட்ட பிறகே, பத்திரிகைகளுக்கு தெரியப்படுத்த, பூங்கா நிர்வாகம் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.