சென்னை : புதிதாக கட்டப்பட்ட வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, பெண்கள் இருவர் உடல் நசுங்கி இறந்த வழக்கில், கட்டட உரிமையாளர், மேஸ்திரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.சென்னை காசிமேடு, பல்லவன் நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிய, கல்நார் (ஆஸ்பெஸ்டாஸ்) வீடுகளில், அடுத்தடுத்து வாடகைக்கு வசித்தவர்கள் துரைகண்ணு மனைவி லில்லி, 75, சுப்பராயன் மனைவி சித்ரா, 50. இந்த வீடுகளை ஒட்டி, புதிதாக இரண்டு அடுக்கு மாடி வீட்டை, கண்ணகி என்பவர் கட்டி கொண்டிருக்கிறார்.நேற்று முன்தினம் இரவு, பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு, புதிய கட்டடத்தின் சுவர் ஒன்று மூன்றாவது மாடியில் இருந்து இடிந்து, கல்நார் வீடுகள் மீது, பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இதில், வீடுகளின் மேற்கூரை நொறுங்கி விழுந்ததில், தூங்கி கொண்டிருந்த லில்லி, சித்ரா இருவரும் உடல் நசுங்கி இறந்தனர். இதுகுறித்து, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிந்து, காசிமேடு, பல்லவன் நகர் ஐந்தாவது குறுக்கு தெருவை சேர்ந்த கட்டட உரிமையாளர், செல்வத்தின் மனைவி கண்ணகி, 40, தண்டையார்பேட்டை வினாயகபுரத்தை சேர்ந்த, மேஸ்திரி குமார், 30 ஆகியோரை கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.