மதுரை:நீண்ட இடைவெளிக்கு பின், மதுரையில் விதிமீறிய கட்டடங்கள் மீதான நடவடிக்கையை
மாநகராட்சி அதிகாரிகள் நேற்று துவக்கினர்.
வணிக கட்டடம் 2,000 சதுர அடி, குடியிருப்பு கட்டடம் 4,000 சதுர அடிக்குள் கட்டப்பட்டால், மாநகராட்சியின் அனுமதி பெற வேண்டும். அதற்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு, உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதி பெற வேண்டும்.
கடந்த ஆட்சியில், இதனை மீறி பல கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்கினர். சிலர் வாங்கிய அனுமதியை விட, கூடுதலாக கட்டடம் எழுப்பினர். உள்ளூர் திட்டக் குழுமத் தலைவரான கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுத்தார்.
மாநகராட்சியில் பெற்ற அனுமதியை சுட்டிக்காட்டி, கட்டட உரிமையாளர்கள் கோர்ட்டிற்கு சென்றதால், கலெக்டரின் நடவடிக்கையில் சிக்கல் ஏற்பட்டது. சில மாதங்களாக, விதிமீறல் கட்டடங்கள் மீது, மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பின், விதிமீறல் கட்டடங்களுக்கு "கடிவாளம்' போடும் நடவடிக்கை, நேற்று தொடங்கியது. எல்லீஸ் நகர் 70அடி ரோட்டில், ஜூல்ராஜ் மனைவி கிரண்தேவிக்கு சொந்தமான, நான்கு மாடி கட்டடத்தின், கட்டுமானப் பொருட்களை கைப்பற்றிய அதிகாரிகள், பணியை நிறுத்தி, கம்பி வேலி அமைத்தனர்.
நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன் கூறியதாவது:
இந்த கட்டடத்திற்கு விதிமுறை மீறி, மாநகராட்சியிடம் 6,600 சதுரஅடிக்கு அனுமதி பெற்றுள்ளனர். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்டுமான பணியை ஆய்வு செய்த போது, 16 ஆயிரத்து 800 சதுரஅடிக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கட்டடங்கள் மீதான
நடவடிக்கை தொடரும், என்றார்.
உதவி அலுவலர்கள் பழனிச்சாமி, முத்துக்குமார், உதவி
பொறியாளர் சம்சுதீன் உடன்
இருந்தனர்.