மதுரை:மதுரை நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் திட்டத்தை விரைவுபடுத்தக்கோரி, தாக்கலான வழக்கை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.
ஊரக வளர்ச்சி மேம்பாட்டு மைய தொண்டு நிறுவன செயலாளர் முனியசாமி தாக்கல் செய்த மனு:
மதுரை நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் திட்டம் 1999 ல் கொண்டுவரப்பட்டது. திட்ட மதிப்பு 8 கோடி ரூபாய். கால்வாய் நீளம் 25 கி.மீ., இதில் 3 ல் 1 பங்குகூட பணி முடியவில்லை. 94 கிளை கால்வாய் கட்டுமான பணியை மேற்கொள்ளவில்லை. திட்டத்தை விரைந்து நிறைவேற்றவும், கம்பிக்குடி கண்மாயை தூர்வாரவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் கொண்ட பெஞ்ச் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. பொதுப்பணித்துறை சார்பில்,"கால்வாய் நீளம் 8 கி.மீ. இன்னும் 45 மீ.,பணிதான் முடிக்க வேண்டியுள்ளது. நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்,' என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர்," அரசு திட்டத்தை விரிவுபடுத்தி கூடுதலாக 19 கோடி ஒதுக்கியது. பொதுப்பணித்துறை கூறுவதுபோல் 8 கி.மீ.,அல்ல. அரசு உத்தரவில் 25 கி.மீ.,என உள்ளது. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,' என கூடுதல் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.