மதுரை: மதுரை பழங்காநத்தம்- டி.வி.எஸ்.நகர் "ஒய்' வடிவ ரயில்வே மேம்பாலத்திற்காக, வெங்கடாஜலபுரம்- ஜெய்ஹிந்த்புரம் வழியில் ( பி.பி.ரோடு, சி.சி.ரோடு) நில ஆர்ஜிதத்திற்கு எதிராக தாக்கலான வழக்கை, மதுரை ஐகோர்ட் கிளை பைசல் செய்தது.
குடியிருப்போர் நலச் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:
பழங்காநத்தம்-டி.வி.எஸ்.நகர் ரயில்வே மேம்பால பணியை 2013 செப்டம்பருக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது 60 சதவீத பணி முடிந்துள்ளது.
வெங்கடாஜலபுரம் குடியிருப்பு பகுதிகளை அகற்றி, அவ்வழியே மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்து, ஏற்கனவே ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தோம். வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ் அனுப்பும் பட்சத்தில், கோர்ட்டை அணுகலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டது.
குடியிருப்பு பகுதியில் அல்லாமல், மாற்று வழியில், ஏற்கனவே உள்ள ரோடு வழியாக பாலம் அமைக்க, இருதரப்பும் ஏற்கும் திட்டத்தை மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் அளித்தோம். அதை, நெடுஞ்சாலைத்துறை கைவிட்டது. ரயில்வே பாதையிலிருந்து ஜெய்ஹிந்த்புரம் செல்லும் ரோட்டில், மேம்பாலத்திற்காக 11 தூண்கள் அமைக்கவுள்ளனர். தற்போது 2 தூண்கள் பணி முடியும் நிலையில் உள்ளன.
நெடுஞ்சாலைத்துறையின் புதிய திட்டப்படி, வெங்கடாஜலபுரம் பகுதியில் வீடுகளை அகற்றும் நிலை ஏற்படும். வீடுகளை அகற்ற, முன்னறிவிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் கொண்ட பெஞ்ச் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. அரசு சிறப்பு வக்கீல் கோவிந்தன், ""சம்பந்தப்பட்ட பகுதியில் நிலம் கையகப்படுத்தும் திட்டம் இல்லை. எதிர்காலத்தில் தேவைப்படின், சர்வீஸ் ரோடு அமைய நிலம் கையகப்படுத்தப்படும்,'' என்றார்.
நீதிபதிகள்,""நிலம் கையகப்படுத்துவதற்கு முன், மனுதாரர் தரப்பிற்கு போதிய வாய்ப்பளிக்க வேண்டும். மனு பைசல் செய்யப்படுகிறது,'' என்றனர்.