மதுரை:வாக்காளர் பட்டியல் விபரங்களை எஸ்.எம்.எஸ்., மூலம் அறிவிக்க, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.
வாக்காளர் வரைவு பட்டியல் அக்டோபர் 10ல் வெளியிடப்பட்டது. பின் 1.1.2013 அடிப்படையில், வாக்காளர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. நவ., 20ம் தேதி வரை திரும்ப பெறப்பட்டன.
மேலூர் தொகுதியில் 6800, மதுரை கிழக்கு- 11500, சோழவந்தான்- 6200, மதுரை வடக்கு- 8200, தெற்கு- 7600, மத்தி- 9000, மேற்கு- 12,300, திருப்பரங்குன்றம்- 10,800, திருமங்கலம்- 9800, உசிலம்பட்டி 10,000, என, மாவட்ட அளவில் 92 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டன. அம்மனுக்கள் பூத் லெவல் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்காளர்களின் மொபைல் எண்களை, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி இன்று முதல் நடக்கிறது. இதையடுத்து, வரும் காலங்களில் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள், வாக்காளர் சேர்க்கை, நீக்கம், வரைவு பட்டியல் வெளியீடு போன்றவை மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்.,ஆக வந்து சேரும். அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது.