பல்லாவரம்:முறையான அனுமதி பெற்ற பிறகே, விளம்பர தட்டிகள் வைக்கப்பட வேண்டும் என்ற காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவு, காற்றில்
பறக்கவிடப்பட்டுள்ளது. புறநகர் உள்ளாட்சிகளில் முக்கிய சாலைகள், தெருக்களை விளம்பர தட்டிகள் மறைத்து கொண்டிருக்கின்றன.
நிலம் விற்பனை, அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை, அரசியல் கட்சி விளம்பரங்கள், கோவில் விழாக்கள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகள் என, சமீபகாலமாக விளம்பர
தட்டிகள் வைக்கும் பழக்கம்
அதிகரித்து வருகிறது.
கலெக்டர் உத்தரவு
இதனால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வாக துக்க நிகழ்வுகளை தவிர, மற்ற எந்த விளம்பர தட்டிகள் வைப்பதாக இருந்தாலும், கலெக்டர்
அலுவலகத்தில் முறையான அனுமதி பெற வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, விளம்பர தட்டிகள் வைக்க பணம் செலுத்தி, முறையான அனுமதி பெற்று, அந்த அனுமதி சீட்டை உள்ளாட்சியில் ஒப்படைத்த பிறகே விளம்பர தட்டிகள் வைக்கப்பட வேண்டும். ஆனால், புறநகரில் உள்ள எந்த ஒரு உள்ளாட்சியிலும், இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.
மாங்காடு முன்மாதிரி
கலெக்டர் உத்தரவை மாங்காடு பேரூராட்சி மட்டுமே முறையாக செயல்படுத்தி வருகிறது. பேரூராட்சி யின் எச்சரிக்கையை மீறி, பொது இடங்களை ஆக்கிரமித்திருந்த விளம்பர தட்டிகளை பேரூராட்சி அதிகாரிகள், கடந்த சில வாரங்களுக்கு முன் கூண்டோடு அப்புறப்படுத்தினர்.
ஆனால், புறநகரின் மற்ற எந்த உள்ளாட்சியிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படாததால், தெருக்களின் பெயர் பலகைகள், முக்கிய
அறிவிப்புகள், அரசின் விழிப்புணர்வு பதாகைகளை மறைக்கும் வகையில் விளம்பர தட்டிகள் அதிகரித்து
வருகின்றன.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சிகளுக்கு கண்டிப்பான உத்தரவை மீண்டும் பிறப்பிக்க வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதை மனது வலியோடுதான் எழுதுகிறேன் இது சென்னை மாநகரமா இல்லை விளம்பர மாநகரமா என்று சொல்லும் அளவிற்கு எங்கு பாத்தாலும் போஸ்டர் மயம், மூலை முடுக்கு விடாமல் சினிமா, அரசியல் , சுப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகள் என்று சகட்டு மேனிக்கு எங்கு பார்த்தாலும் போஸ்டர் போஸ்டர் கிழிந்து தொங்குகின்றன, மொத்தமாக சென்னை மொத்தத்தையும் நாச படுத்தி வைத்திருகிறார்கள். அழகாக நமது பண்பாடு தெரியுமாறு வரையப்பட ஓவியங்கள் எல்லாம் போஸ்டரால் நாசபடுத்த பட்டுவிட்டன. மெட்ரோ ரயில் துண்கள் எல்லாம் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது, இதை எல்லாம் பார்க்கும் போது நம் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலேயா இருக்கிறோம் என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது.
அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க தினமலர் வலியுறுத்த வேண்டும் என்பது எனது விருப்பம். எல்லா ரயில் மெட்ரோ துண்கள் மற்றும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் நமது கலாச்சாரத்தையும், பெருமையையும் கூறும் வகையில் அழகான ஓவியங்கள் வரைந்து சென்னை மாநகரை எழில் பொங்கும் நகராக உருவாக்க தினமலரின் உதவியை எதிபார்க்கும் ஒரு சாதாரண இந்திய குடிமகன். இன்னும் மிஞ்சி நிற்கும் இடங்களை எல்லாம் நசபடுத்தபடுமுன் விரைந்து நடவடிகை எடுக்க வேண்டுகோள் விடுக்கிறேன்.
நன்றி,
கிரி