சென்னை:பேருந்தில், 75 ஆயிரம் ரூபாய்
பிக்பாக்கெட் அடித்த திருடனை
போலீசார் கைது செய்தனர்.
அஸ்தினாபுரம், வள்ளலார் தெருவை சேர்ந்தவர், பிரகாஷ் சந்திரநாயர்,36. இவர் நேற்று காலை, எழும்பூரில் இருந்து, அண்ணாசாலைக்கு தடம் எண் "23 சி' என்ற பேருந்தில் சென்றார்.
புதுப்பேட்டை அருகே வரும்போது,
அவரிடம் இருந்த, 75 ஆயிரம் ரூபாய்
மாயமானது. அவ்வழியில், ரோந்து வந்த
போலீசார், பேருந்தில் இருந்தவர்களிடம் சோதனை நடத்தியபோது, ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த சேரி,31, என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது.
ஒப்பந்த காலம் முடிந்தும் கால்வாய் சீரமைப்பு பணி முடியவில்லை
சென்னை:
ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் மழைநீர் கால்வாய் கட்டும் பணி முடியாததால், வீடுகளுக்குள் நீர் புகுந்து குடியிருப்புவாசிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
ரூ.4 .38 கோடியில்...
பல ஏக்கர் பரப்பளவு கொண்ட ராஜ்பவன் வளாகத்தில் தேங்கும் மழைநீர், வேளச்சேரி சோதனை சாவடி, நேருநகர், கம்பர் தெரு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள கால்வாய் வழியாக வேளச்சேரி ஏரிக்கு சென்றடையும்.
அந்த மழைநீர் கால்வாய் ஆங்காங்கே அடைபட்டு, ஆக்கிரமிப்பில் இருந்ததால், மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்தது.
கால்வாயை புதுப்பித்து கட்ட, 2010ம் ஆண்டில், மாநகராட்சியால் 4.38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆர்.பி.ஜி., கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனம் கால்வாய் கட்டும் பணியை துவக்கியது.
கால்வாய் 1,000 மீ., நீளம்,
5 மீ., அகலம் கொண்டது. 1,000 மீ., நீளத்தில், 177வது வார்டு பகுதியில் 700 மீ., நீளமும், 174வது வார்டில் 300 மீ., நீளமும் வருகிறது. ஒப்பந்த காலம் முடிந்து, மாதம் பல கடந்தும் கால்வாய் கட்டும் பணி நிறைவடையவில்லை.
இதனால், மழைநேரத்தில் குடியிருப்புக்குள் நீர் புகுந்து விடுகிறது. பாதியில் நிற்கும் பணி இடத்தில், கழிவுநீர் தேங்கி, சுகாதார கேடு ஏற்படுகிறது.
வீட்டுக்குள் நீரூற்று
ராஜ்பவன் வளாகத்தை சுற்றி இருக்கும், நெடுஞ்செழியன் தெரு, கன்னிகாபுரம்,
34 தெருக்களில் உள்ள வீடுகள், ராஜ்பவன் காலனியில், 73 வீடுகள், நாகேந்திரன் நகரில் 54 வீடுகள், கே.ஆர்.ராமசாமி நகரில் 50 வீடுகள் மற்றும் சுடுகாடு, குருநானக் பள்ளி ஆகிய இடங்களில் மழை காலத்தில், ஊற்று போல், தரையில் இருந்த நீர் வெளியேறுகிறது.
இதுகுறித்து, குடியிருப்புவாசிகள் கூறியதாவது:
மழை நேரங்களில் வீட்டு தரையில் இருந்து நீர் ஊற்று வருகிறது. குழந்தைகள், வயதானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான கட்டடங்கள் பழையவை.
நீர் தேங்கி நிற்பதால், கட்டடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மழைநீர் கால்வாய் செல்லும் இடத்தில், பல பேர் வீட்டு சுவரை கட்டி வைத்து உள்ளனர். சுவரை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்னும், சில நாட்களில் மீதி பணியும் முடிந்து விடும்,'' என்றார்.