சென்னை : தேனாம்பேட்டை குடிசை மாற்று வாரிய வணிக வளாகத்தில், விதிமுறைகளை மீறி, கட்டப்பட்டகட்டடத்துக்கு, மாநகராட்சி அதிகாரிகள், நேற்று முன்தினம், "சீல்' வைத்தனர்.தேனாம்பேட்டையில், சர் தியாகராயர் சாலையில், (எண் 2/122 மனையில்) குடிசை மாற்று வாரிய வணிக வளாகம் உள்ளது. இதன் ஒரு பகுதியில், பொது துறை வங்கி ஒன்றின், தேனாம்பேட்டை கிளை செயல்பட்டு வருகிறது.இந்த வளாகத்தில், முன்பக்க இடைவெளிக்காக காலியாக விட்ட இடத்தில், ஏ.டி.எம்., மையம் அமைக்க, ஒரு அறை கட்டும் பணிகள், சில வாரங்களுக்கு முன் துவங்கின.எந்த அனுமதியின் அடிப்படையில், காலியாக விட வேண்டிய இடத்தில், இந்த கட்டடம் கட்டப்படுகிறது என, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சமூக ஆர்வலர் நடராஜ் கேள்வி கேட்டிருந்தார்.அதற்கு, 2.71 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் இக்கட்டடத்துக்கு, குடிசை மாற்று வாரியத்திடம் இருந்து, அனுமதி பெறப்பட்டதாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதை, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.இதுகுறித்து, மாநகராட்சியின் மண்டல அதிகாரிகளிடம், நடராஜ் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், அந்த இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், வங்கி அதிகாரிகளுக்கு, "நோட்டீஸ்' அளித்தனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "நாங்கள் அனுப்பிய நோட்டீசுக்கு, வங்கி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே, குடிசை மாற்று வாரிய வளாகத்தில், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள, அந்த கட்டடத்திற்கு, "சீல்'வைக்கப்பட்டது' என்றனர்.