சென்னை : நகரின் சுகாதாரத்திற்கு சவால் விடும் குப்பை, அதிகரித்து வரும், கொசு உற்பத்திக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள், மந்த கதியில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகளையும், வேகப்படுத்துதல் ஆகியவற்றில், புதிய ஆணையர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சென்னை மாநகராட்சிக்கு, விக்ரம் கபூர் புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், நகரில் பல பிரச்னைகள், இன்னும் முறையான தீர்வு காணப்படாமல் உள்ளன.= குப்பையிலிருந்து மின்சாரம், உரம் தயாரிக்கும், குப்பை மாற்று தொழிற்சாலைகள் அமைக்கும் திட்ட வரைவு இறுதி செய்தும், ஒப்பம் கோராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசின் அனுமதியை விரைந்து பெற்று, செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.= மூன்று மாதத்திற்கு ஒரு முறை, தனியார், அரசு கட்டடங்களில், கொசு மருந்து, எலி மருந்து அடிப்பதை கட்டாயமாக்கும் அறிவிப்பை, விரைந்து செயல்படுத்தலாம்.= சென்னையில் நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண, தேவையான இடங்களில், அடுக்குமாடி வாகன நிறுத்தம் அவசியமாகிறது. இதற்கு, அறிவிப்பை வெளியிட்டு, ஆர்வம் காட்டும் நிறுவனங்களை அழைத்த மாநகராட்சி, அவற்றின் திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளது. அதை தூசி தட்டி எடுத்து, தேவையான அடுக்குமாடி வாகன நிறுத்தங்களை அமைக்க வேண்டும்.= நடைபாதைகள் இன்றியும், இருக்கும் நடைபாதைகளும் சிதைந்து கிடப்பதையும், சீரமைத்து பாதசாரிகளுக்கு பாதுகாப்பான, போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.= ஜவகர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தில், 1,337 கோடி ரூபாயில் துவக்கப்பட்ட, மழைநீர் கால்வாய், நீர் வழித்தடங்களை சீரமைக்கும் பணிகளில், மூன்று ஆண்டுகளில், 25 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளன. அடுத்த ஆண்டிற்குள், பணிகளை முடிக்கும் வகையில் துரிதப்படுத்த வேண்டும்.= கடந்த நிதியாண்டுக்கான, 333.27 கோடி ரூபாய்,"மெகாசிட்டி' பணிகள், 40 சதவீதம் கூட முடியாமல், இழுத்துக் கொண்டிருக்கின்றன. = வருவாயை பெருக்கும் வகையிலான நடவடிக்கைகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்திலும், சொத்து வரி செலுத்தும் வசதி, தேவையான இடங்களில் மேம்பாலங்கள், என, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.