திருப்பூர்:""பொதுமக்களுக்கு,
தடையில்லாமல் மின்சாரம் கொடுக்க முடியவில்லை. அதனால், மின் வினியோக
நேரத்தில், சப்ளையை நிறுத்திவிட்டு, எந்த பணியையும் மேற்கொள்ளாதீர்கள்,''
என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா, வேதனையோடு
குறிப்பிட்டார்.திருப்பூர் மற்றும் அவிநாசி கோட்ட மின் உற்பத்தி மற்றும்
பகிர்மான கழகம் சார்பில் மின் சிக்கன வார விழா, நேற்று நடந்தது. அவிநாசி
கோட்ட செயற்பொறியாளர் பொன் மூர்த்தி வரவேற்றார்.மின் பகிர்மான வட்ட
மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா பேசியதாவது:கடந்த 1991ல், ஒரு மணி நேரமாக
மின்வெட்டு துவங்கியது. அப்போது, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே,
மின் சிக்கன வார விழா நடைமுறை துவங்கியது. இன்றைய தினம், 16 மணி நேரம் வரை
மின்வெட்டு அதிகரித்துள்ளது. இதற்கு, பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு
இல்லாததே காரணம். இவ்விழாவுக்கே, மக்கள் யாரும் வரவில்லை; அதிகாரிகளே
உள்ளீர்கள்.மொத்தம் 4,000 மெகாவாட் மின் பற்றாக்குறை உள்ளது; மின்வெட்டு
மூலம் 2,500 மெகாவாட், "பீக் அவர்ஸில்' தொழிற்சாலைகள் மின்சாரத்தை பயன்
படுத்தக் கூடாது என பல கட்டுப்பாடுகள் மூலம் சமாளித்து வருகிறோம்.மின்
பற்றாக்குறை காரணமாக, தொழில் துறை முடங்கியுள்ளது. நான்கு மணி நேரமாவது
தடையில்லாமல் மின்சாரம் வழங்கலாம் என்ற திட்டத்தை செயல்படுத்தியதற்கு நல்ல
வரவேற்புள்ளது. இன்று, திருப்பூரில் 7.87 மில்லியன் யூனிட்
பயன்படுத்தப்பட்டுள்ளது. தொழில் வளம் பெருக, மின் சிக்கன அவசியத்தை
மக்களுக்கு எடுத்துச் செல்லுங்கள்.மின்வெட்டு உள்ள சமயத்தில், பராமரிப்பு
பணியை மேற்கொள்ள வேண்டும். மின் வினியோக நேரத்தில், சப்ளையை
நிறுத்திவிட்டு, எந்த பணியையும் மேற்கொள்ளாதீர்கள். மின்சாரத்தை
தடையில்லாமல் கொடுக்க முடியவில்லை; கிடைக்கும்போது, நுகர்வோருக்கு இடைஞ்சல்
தராதீர்.இவ்வாறு, அவர் பேசினார்.காடம்பாறை நீர் மின்னேற்று திட்ட
செயற்பொறியாளர் ராஜாமணி பேசியதாவது:கலாசார மாற்றம், நாகரீக நுகர்வு மோகம்
காரணமாக, மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சராசரி மனித பயன்பாடு 150 கிலோ
வாட் என இருந்தது; தற்போது 1,100 கிலோவாட் என உயர்ந்துள்ளது.
பூமி
வெப்பமயமாதலை தடுப்பது அவசியமாகிறது. ஒரு சதவீதம் கார்பன் நச்சுவாயு
அதிகரித்தாலும், விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் என ஆய்வுகள்
கூறுகின்றன. எனவே, வீட்டுக்கு ஒரு மரம் என்ற கணக்கில்லாமல், கிடைக்கும்
இடங்களில் மரக்கன்று நடவு செய்ய வேண்டும்.சூரிய ஆற்றல் மூலம், அளவிட
முடியாத மின் ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும். இத்தொழில் நுட்பத்தில் நாம்
30 ஆண்டுகள் பின்தங்கி உள்ளோம். இதை சமுதாய பணியாக கருதி, மின் ஊழியர்கள்
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கு முன், ஒவ்வொரு மின்
ஊழியரும், தங்கள் வீடுகளில் அமைத்து, முன் மாதிரியாக திகழ வேண்டும். ஒரு
கிலோவாட் உற்பத்தி அலகு அமைக்க, 70 ஆயிரம் முதல் செலவாகிறது. இதை முதலீடாக
கருதாமல், சமூக அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்
பேசினார்.
சுல்தான்பேட்டையில் நடந்த விழாவில், நெகமம் மின்வாரிய
செயற்பொறியாளர் வெங்கட சுப்ரமணியம் வரவேற்றார்.கோவை மண்டல தலைமை பொறியாளர்
தங்கவேலு பேசுகையில், ""மேட்டூர், வள்ளூர்
மற்றும் வட சென்னை அனல் மின்
நிலையங்களில் புதிய மின் திட்டங்கள் விரைவில் துவக்கப்படும்.""இதன் மூலம்
மின் பற்றாக்குறை படிப்படியாக குறைந்து, மின் தடங்கல் நேரம் குறையும்.
தேவைப்படும் நேரத்தில் மட்டும் மின்சாரத்தை பயன்படுத்துங்கள்; தேவையற்ற
நேரத்தில் பயன்படுத்தக் கூடாது,'' என்றார்.கோவை மின்பகிர்மான வட்ட தெற்கு
தலைமை பொறியாளர் மணி, உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.