சென்னை : ஆந்திராவில் இருந்து, சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 1,500 கிலோ, கெட்டுப்போன இறைச்சி, குப்பை கிடங்கில், குழி தோண்டி புதைக்கப்பட்டது.சென்னை, பேசின் பாலம் புறநகர் காவல் நிலையம் அருகே, போலீசார், நேற்று காலை, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இந்து, சென்னைக்கு வந்த வேனை மடக்கி, போலீசார் சோதனையிட்டனர். வேனில் இருந்த கூடைகளில், மாட்டிறைச்சி இருப்பது தெரிந்தது.போலீசார், மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மாட்டிறைச்சியை ஆய்வு செய்த, மாநகராட்சி அதிகாரிகள், இறைச்சி, முறையாக, "பேக்கிங்' செய்யப்படாமல் இருப்பதுடன், அவை கெட்டுப்போன இறைச்சி என்பதையும், உறுதி செய்தனர்.மொத்தம், 1,500 கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்து, குப்பை கிடங்கில், குழி தோண்டி புதைத்தனர்.மாட்டிறைச்சியை கொண்டு வந்த, வேன் ஓட்டுனர் நாகராஜ், 41, மற்றும் ரமேஷ், 22, ஆகியோரை பேசின்பாலம் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், "நெல்லூரில் இருந்து, சென்னை எழும்பூருக்கு, இறைச்சியை கொண்டு செல்லும்படி தான், எங்களிடம் இறைச்சி ஒப்படைக்கப்பட்டது. யார் அனுப்பியது, யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது, எங்களுக்கு தெரியாது' என, தெரிவித்து உள்ளனர்.