திருப்பூர்:செட்டிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன், 45, லாரி டிரைவர். நேற்று மாலை 4.00 மணியளவில், டி.என். ஏகே 2676 என்ற பதிவெண் கொண்ட லாரியை ஓட்டி வந்தார். அவர், மது போதையில் இருந்ததாகத் தெரிகிறது. தாராபுரம் ரோட்டில் இருந்து பலவஞ்சிபாளையம் ரிங் ரோட்டில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்கிருந்த பெட்ரோல் பங்க்குக்குள் புகுந்தது.அவ்வழியாக நடந்து வந்த, பனியன் கம்பெனி தொழிலாளி சுதா, 35 என்பவர் மீது மோதியது. பங்க் முன்புறம் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த மாயகிருஷ்ணன், 45 என்பவரும் லாரி மோதி காயமடைந்தார். அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கட்டட வேலையை மேற்பார்வை செய்துகொண்டிருந்த, பங்க் மேலாளரும், வேலை செய்துகொண்டிருந்த பெண் சித்தாளும் எட்டிக் குதித்து தப்பினர். அங்கிருந்தவர்கள் லாரி டிரைவரை பிடித்து ரூரல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.