சென்னை:தமிழ் பற்றாளரை, செம்மொழி நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்நிறுவன ஊழியர்கள் உண்ணா
விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"நிர்வாக சீர்கேடுகளால் செம்மொழி நிறுவன பணிகள் தேக்கம்' என்ற செய்தி, "தினமலர்'
நாளிதழில் வெளியானது.
போராட்டம்
இதையடுத்து, செம்மொழி நிறுவன பணியாளர்கள், பணி நிரந்தம், நிரந்தர இயக்குனர் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நவ., 26ம் தேதி, மெமோரியல் ஹால் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், நேற்று உண்ணாவிரத போராட்
டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பணியாளர்கள் சங்க தலைவர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:
ஆறு ஆண்டுகளாக தின கூலியாகவும், தொகுப்பூதியத்திலும் பணியாற்றி வரும் பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழாய்வு பணிகளுக்காக, மத்திய அரசு வழங்கும் நிதியை, முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
தொழிலாளர் விரோத போக்குடன் செயல்படும் தலைமையை அகற்ற வேண்டும். தமிழ் பற்றுள்ளவரை, நிரந்தர இயக்குனராக நியமிக்க வேண்டும்.
உதவித்தொகை
நிரந்தர கட்டடம் இன்றி செயல்படும் செம்மொழி நிறுவனத்திற்கு, பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம், அரசு வழங்கியது. ஆனால், அங்கு எந்தவித கட்டட பணிகளும் நடக்கவில்லை.
கட்டடம் கட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழறிஞர்களுக்கும், ஆய்வாளர்களும் நிதி வழங்கி, புதிய ஆய்வுகளை வெளிகொண்டு வர வேண்டும்.
உலகமெங்கும் செம்மொழி நிறுவனத்தின் பல கிளைகளை அமைத்து, தமிழ் ஆய்வாளர்களுக்கு பணி வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ள படி, செவ்வியல் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபடுகிற முனைவர் பட்ட மேலாய்வாளர்கள், 36 பேருக்கும், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், 60 பேருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.
அடுத்த கட்டமாக, டில்லி பார்லிமென்ட் முன், உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.