சென்னை:மாற்றுத்திறனாளிகள், தங்கள் உபகரணங்களுடன், கோவில் கருவறை செல்வதற்கு, திருப்பரங்குன்றம், சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நிர்வாகம்,
ஏற்பாடு செய்துள்ளது.
கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் கொண்டு செல்லும் பொருட்கள் குறித்து, இந்து சமய அறநிலைய துறை புதிய
கட்டுப்பாடுகளை, சமீபத்தில் விதித்துள்ளது.
அதில், மாற்றுத்திறனாளிகள், தங்களின் செயற்கைக்கால்கள், ஊன்றுகோல், கர நாற்காலி போன்றவற்றை, கோவில் கொடிமரத்தின் அருகில் வைத்த பின்னரே, கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என, செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
தோலினால் செய்யப்பட்ட உபகரணங்களை, கோவிலுக்கு கொண்டு செல்வது, ஆகம விதிகளுக்கு எதிரானதாக இருப்பதால், இக்கட்டுப்பாடு கொண்டு வரப்படுவதாக, அறநிலைய துறை அறிவித்துள்ளது.
இதனால், மாற்றுத்திறனாளிகள் வேதனைக்குள்ளாகினர். இது குறித்து, "கோவிலுக்குள் செல்ல புதுக்கட்டுப்பாடு, மாற்றுத்திறனாளிகள் வேதனை' என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய செல்லும் போது, சிறப்பு வழி ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்ய ஒருவரை உதவிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, தோலினால் செய்யப்பட்ட ஊன்றுகோல்களுடன் மூலஸ்தானம் வரை செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது.