திருப்பூர் : பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, திருப்பூர் மாவட்டத்தில் துணை பதிவாளர் (பால் வளம்) அலுவலகம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில், "உற்பத்தியாளர்களின் நலன் காக்கப்பட வேண்டுமெனில், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) உருவாக்க வேண்டும்,' என வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உருவாகி, மூன்று ஆண்டுகளாகியும், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அமைக்கப்படாமல் இருந்தது. பால் உற்பத்தியாளர்கள், கோவை மற்றும் ஈரோடு மாவட்ட ஆவின் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருந்தனர். எந்தவொரு பிரச்னை என்றாலும், இரு மாவட்ட கலெக்டர்களை நாடிச்செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது.
திருப்பூருக்கென ஆவின் உருவாக்கினால் மட்டுமே, கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, சுகாதாரமான பால் உற்பத்தியை மேம்படுத்தும் திட்டம், அண்ணா நூற்றாண்டு கிராமப்புற மகளிர் பால் பண்ணை மேம்பாட்டு திட்டங்களில் நேரடி பயன் கிடைக்கும். தற்போது, கோவை, ஈரோடு மாவட்டங்களின் ஒதுக்கீடு அடிப்படையில், பால் உற்பத்தியாளர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது.
அரசு சலுகைகளை நேரடியாக பெறவும், நிர்வாக வசதிக்காகவும் மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் அமைக்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், துணை பதிவாளர் அலுவலகம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது, பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி, தின மும் 60 ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் உற்பத்தி செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் இணையம் உருவாக்கும்போது, உற்பத்தி மேலும் உயர வாய்ப்புள்ளது.
"ஆவின்' அதிகாரிகள் கூறுகையில்,"முதல் கட்டமாக, துணை பதிவாளர் (பால் வளம்) அலுவலகம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக, புதிய பால் உற்பத்தியாளர் சங்கங்களை உருவாக்குவது, தனியார் பால் உற்பத்தி சங்கங்களை மறுசீர மைப்பு செய்வது, உற்பத்தியாளர் சங்கங்களை புதுப்பிக்கும் பணி எளிதாகியுள்ளது,' என்றனர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க அமைப்பாளர் லோகநாதனிடம் கேட்டபோது,""துணை பதிவாளர் (பால் வளம்) அலுவலகம் அமைப்பதன் மூலம், புதிய பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உருவாக்குவது எளிதாக மாறும். இருப்பினும், இரு மாவட்ட ஆவின் அதிகாரிகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை தொடரும். உற்பத்தியாளர்களின் நலன் காக்கப்பட வேண்டுமெனில், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் உருவாக்க வேண்டும்,'' என்றார்.