திருப்பூர் : ""திருப்பூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 934 பணிகளையும்,
ஜன., 31க்குள் முடிக்க வேண்டும்,'' என ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர்
மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து, ஊரக
வளர்ச்சித்துறை கமிஷனர் விஜயகுமார் ஆய்வு நடத்தினார். கலெக்டர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். பசுமை
வீடுகள் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், தாய் திட்டம்,
அங்கன்வாடி பழுதுபார்ப்பு பணிகள், நபார்டு ரோடு பணிகள், 13வது நிதிக்கு
மானிய ரோடு பணிகள், உள்ளிட்ட பணி முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்தார்.
கமிஷனர் பேசுகையில், ""நிலுவையில்
உள்ள (2011-12) தாய் மற்றும் எம்.எல்.ஏ., - எம்.பி., தொகுதி மேம்பாட்டு
பணிகளை, ஜன., 31க்குள் முடிக்க வேண்டும். 2012-13ம் ஆண்டுக்கான பணிகளை,
பிப்., மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். ஊராட்சிகளில், வீட்டு வரி,
தொழில் வரி உள்ளிட்டவற்றை, பிப்., இறுதிக்குள் 100 சதவீதம் வசூலிக்க
வேண்டும். ஊரக வளர்ச்சி முகமை மூலமாக நடக்கும், 11 ஆயிரத்து 128 பணிகளில், 934 பணிகள் நிலுவையில் உள்ளன; இப்பணிகளை,ஜன., 31க்குள் முடிக்க வேண்டும்,''என்றார்.முன்னதாக, கோடாங்கி
பாளையம்,
பருவாய், வடுகபாளையம் ஊராட்சிகளில், கட்டப்படும் பசுமை வீடுகள் மற்றும்
தொகுப்பு வீடுகளையும், தேசிய வேலை உறுதி திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.
வடக்கு அவிநாசிபாளையம், ஊகாயனூர் ஊராட்சிகளில், தாய் திட்ட பணிகள், ரேஷன் கடை பணிகள், ஊராட்சி மன்ற கட்டட பணிகளை ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சம்பத், செயற்பொறியாளர் சடையப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.