பொங்கலூர் : வெளியூரில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், சின்ன வெங்காயம் விலை சரிந்துள்ளது. நடப்பாண்டில் பருவமழை குறைந்ததால், உள்ளூரில் சின்ன வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இருப்பு வைத்திருந்த வெங்காயம் மட்டுமே சந்தைக்கு வந்தது. அதன் எதிரொலியாக, கடந்த வாரத்தில், வெங்காயம் விலை அதிகரித்தது.உள்ளூரில் அறுவடை இல்லாதபோதிலும், வெளியூர்களில் இருந்து புதிய வெங்காயம் சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளது. இதனால், விலை சரிந்து வருகிறது. கடந்த வாரம் சின்ன வெங்காயம் மொத்த விலையில், கிலோ 50 ஆகவும், சில்லறை விலையில் 60 ஆகவும் இருந்தது. இந்த வாரம், புதிய ரக சின்ன வெங்காயம் கொள்முதல் விலை கிலோ 30 ஆக சரிவு கண்டுள்ளது. இதேபோல், பெல்லாரி விலையும் குறைய ஆரம்பித்துள்ளது. ஒரு கிலோ 24 ரூபாயில் இருந்து, ஆறு ரூபாய் குறைந்து, ரூ.18க்கு விற்பனையாகிறது. வெங்காயத்தின் தேவை அதிகரித்து இருப்பதாலும், நடப்பு சீசனில் விளைச்சல் குறைந்துள்ளதாலும், நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வெங்காயம் நடவு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். விதை வெங்காயம் முதல் தரம் கிலோ 50 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 42 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வியாபாரிகள் கூறுகையில், "விளாத்திகுளம், ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து புது வெங்காயம் சந்தைக்கு வருகிறது; இதனால், விலை குறைந்து வருகிறது,' என்றனர்.